மண்ணை ஜீவனுள்ளதாக்கும் ஜீவாமிர்தம்; மகசூலை அதிகரிக்கும் மாமருந்து

மண்ணை ஜீவனுள்ளதாக மாற்றும் அமிர்தம் என்ற வகையில் ஜீவாமிர்தம் என்ற பெயர் பொருத்தமானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.;

Update:2023-04-06 16:55 IST

இன்றைய நிலையில் ரசாயன உரங்களின் அளவுக்கு அதிகமான பயன்பாட்டால் மலடாகி போன மண்ணை வளமாக்குவது மட்டுமல்லாமல் பலமாக்க வேண்டியதும் அவசியமாகிறது. அந்த வகையில் நமது முன்னோர்கள் காட்டிய இயற்கை அமிர்தமான ஜீவாமிர்தத்தின் பயன்பாடு நமது மண்ணை மீட்டெடுப்பதுடன் அதிக மகசூல் ஈட்டுவதற்கு கைகொடுக்கும் அருமருந்தாகும்.

நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களை உள்ளடக்கிய ஜீவாமிர்தம் மிக சிறந்த கரிம உரமாக செயல்படுகிறது. ஜீவாமிர்தம் பயன்படுத்திய விளைநிலத்தில் நன்மை தரும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை பல மடங்காக பெருகும். மேலும் மண்ணை உழுது பண்படுத்துவதுடன் இயற்கை உரங்களை அள்ளி வழங்கும் மண்புழுக்களின் பெருக்கமும் அதிகரிக்கும். மீண்டும் இயற்கை விவசாயத்துக்கு திரும்ப விரும்பும் விவசாயிகளின் மிக முக்கிய மூலதனமாக நாட்டு மாடுகளே உள்ளது. பெரும்பாலான இயற்கை உரங்கள், பூச்சி விரட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பில் நாட்டு மாடுகளின் சாணம் மற்றும் கோமியம் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் ஜீவாமிர்தம் தயாரிப்பிலும் நாட்டு மாடுகளின் கழிவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

தயாரிப்பு முறை

10 கிலோ நாட்டு மாட்டு சாணம், 10 லிட்டர் நாட்டு மாட்டு கோமியம், 180 லிட்டர் தண்ணீர், 1 கிலோ நாட்டு சர்க்கரை, 2 கிலோ சிறுதானிய மாவு, 1 கிலோ கரிம மண் போன்றவை ஜீவாமிர்தம் தயாரிப்புக்கான மூலப்பொருட்களாகும். முதல் கட்டமாக 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொள்கலனை எடுத்து கொள்ள வேண்டும். எடுத்துக்கொண்ட சாணத்தை 20 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். பின்னர் 10 லிட்டர் நாட்டு மாட்டு கோமியத்தை இதனுடன் சேர்க்க வேண்டும்.

பின்னர் நாட்டு சர்க்கரையை அந்த கலவையுடன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையுடன் சிறுதானிய மாவை கெட்டியாகாத வகையில் சிறிது சிறிதாக சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் ரசாயனமில்லாத கரிம மண்ணை அதனுடன் கலந்து 3 நாட்களுக்கு இந்த கலவையை அப்படியே வைத்து விட வேண்டும்.

இவ்வாறு தயாரான ஜீவாமிர்தக் கலவையை தினசரி 3 முறை நன்றாக கலக்கி விட்டு 7 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இதனை 1 லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து நேரடியாக தெளிக்கலாம் அல்லது பாசன நீரில் கலந்தும் பயன்படுத்தலாம்.

தெளிப்புக்காக கலவையை பயன்படுத்தும்போது மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து பயன்படுத்த வேண்டும். இந்த ஜீவாமிர்தத்தை அனைத்து வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். பழ மரங்களாக இருந்தால் காய்கள் முதிர்ச்சி பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 2 லிட்டர் தேங்காய் தண்ணீர் மற்றும் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.

பொதுவாக ஜீவாமிர்தம் பாய்ச்சப்படும் பயிர்களில் நோய் தாக்குதல் குறைவாகவே இருக்கும். எல்லாவிதமான மண்ணையும் வளமாக்கும் சக்தி ஜீவாமிர்தத்துக்கு உள்ளது. மீண்டும் நமது பாட்டன் வழி விவசாய முறைக்கு திரும்பி தாய் மண்ணை வளமாக்குவோம்.

Tags:    

மேலும் செய்திகள்