சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

ஓடிடி வலை தளங்களில் பல சுவாரசியமான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன அவற்றில் சில திரை படங்களை பற்றி காண்போம்...;

Update:2023-06-14 12:37 IST

நீல வெளிச்சம்

பிரபல நூலாசிரியர் முகமது பஷீரின் கதையைத் தழுவி 'பார்கவி நிலையம்' திரைப்படம் 1964-ல் வெளியானது. ரசிகர்களின் ரசனைக்கேற்ப அதை மறுஉருவாக்கம் செய்து அமேசான் பிரைமில் வெளியிட்டுள்ளனர். தனிமையை விரும்பும் இளம் எழுத்தாளர் ஒருவர் கிராமத்தில் பாழடைந்த வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தன் கதைகளுக்கு உயிர் கொடுத்து வருகிறார். அங்கு அமானுஷ்யங் கள் உலவுவதை அவரால் உணர முடிகிறது. முதலில் அதை அசட்டை செய்த எழுத்தாளர் கிராம மக்களின் கட்டுக்கதை களால் 'கிலி' ஆகிறார். அந்த வீட்டில் குடியிருக்கும் அந்த ஆத்மாவும் இவருடன் பேசத் துடிக்கிறது. யார் அந்த ஆத்மா? எதற்காக ஆவியாக அந்த வீட்டை சுற்றி வருகிறது. அவருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது 'நீல வெளிச்ச'த்தில் பாய்ச்சப்பட்டுள்ளது.

இளம்பெண் பார்கவி மற்றும் பாழடைந்த வீட்டை ஆட்டிப்படைக்கும் பிசாசாக ரீமா கல்லிங்கல் மிரட்டியுள்ளார். வெள்ளைத் தாவணியில் சுற்றி வந்து நெஞ்சை கனக்க வைக்கிறார். காதலனாக வரும் ரோஷன் மேத்யூ, சாக்கோ ஆகியோர் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாயகனான எழுத்தாளர் பாத்திரத்தை டோவினோ தாமஸ் ஏற்று நடித்து பிரமாதப்படுத்தியுள்ளார். அவரே கதையை தன் தோளில் சுமக்கிறார். கிரீஷ் கங்காதரன் கைகளில் சிக்கிய கேமரா நன்றாக வேலைபுரிந்துள்ளது. சில காட்சிகள் முதுகெலும்பை சிலிர்க்கவைக்கும். பிஜி பால் மற்றும் ரெக்ஸ் விஜயன் ஆகியோர் பேய் படத்திற்கு உரிய தாளம் போட்டுள்ளனர். சமீரா கற்பனையில் வடிவான ஆடைகள் பாராட்டுதலுக்குரியது. டைரக்டராக ஆஷிக் அபு கதைக்கு தேவையானதை கொடுத்து நியாயம் செய்துள்ளார். ஒரு காதல்-திரில்லர் படத்தில் பழிவாங்கும் தன்மையை புகுத்தி விளையாடி உள்ளனர்.

குட் லக் டூ யூ, லியோ கிராண்டே

பெண்களை குழந்தை பெற்றுக்கொடுக்கும் எந்திரங்களாகவும், சொல்பேச்சு கேட்கும் பொம்மைகளாகவும் தான் சிலர் நடத்துகிறார்கள். பலவித துயரங்களால் பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாறுவர். ஆண் பாலியல் தொழிலாளி என்பது நம் சமூகத்தில் புதிதுதான் என்றாலும் அவர்களும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். பாலியல் தொழிலாளிகளுக்கு சட்டங்கள் இயற்றப்பட்டு அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். ஆனாலும் அவர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் அரங்கேறுவதும் இயல்பே. கடந்த ஆண்டு தியேட்டர்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய இந்த ஆங்கில படம் முதிர்ந்த பெண்ணின் பாலியல் தேவைகள் குறித்து உரக்க சொல்லியுள்ளது.

முன்னாள் ஆசிரியையான நான்சி (எம்மா தாம்சன்) பழமைவாத குடும்ப பின்னணி கொண்டவர். தனக்குள் எழும் ஆசைகளை மறைத்து குடும்பத்திற்காக வாழ்பவர். கணவர் இறந்து 2 ஆண்டுகள் ஆன அவர் தாம்பத்ய வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து மகிழ்ந்திராதவர். இதனால் இளம் பாலியல் தொழிலாளி லியோவின் (டரில் மெக்கார்மேக்) சேவையை பெற்று தன்னுள் புதைந்து கிடக்கும் உணர்வுகளை திருப்திப்படுத்த நினைக்கிறார். பெண்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து அவர்களை குஷிப்படுத்துவதில் லியோ நிபுணர். ஆனால் அவருக்கும் குடும்ப பிரச்சினை. முதுமையால் உடல் மீது நம்பிக்கை கொள்ளாமல் அசவுகரியமாக உணரும் நான்சியை அவன் எவ்வாறு தேற்றுகிறான்? எதற்காக இந்த தொழிலில் லியோ ஈடுபடுகிறான் என்பதை அமேசான் தளத்தில் உள்ள இந்தப்படம் சொல்கிறது. வாழ்வியலை பெண் இயக்குனர் சோபி படம் பிடித்துள்ளார். அனைவருக்குமான படைப்பு இல்லையென்றாலும் பார்க்க வேண்டிய ஒன்று.

ஸ்கூப்

இந்தியாவில் பத்திரிகைத்துறையில் பெண்கள் அடியெடுத்து வைக்க உதாரணமாக இருந்தவர்களில் ஒருவர் ஜிங்னா வோரா. சமூகவிரோத செயல்களால் மூழ்கி கிடக்கும் மும்பை நகரில் வசிப்பவர். அங்குள்ள பத்திரிகை நிறுவனம் ஒன்றில் குற்றச்செய்தி நிருபராகப் பணிபுரிந்தார். அப்போது சக பத்திரிகையாளர் ஒருவரை கொலை செய்த வழக்கில் வோரா கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். 8 மாதச் சிறைக்கு பின்பு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தான் குற்றமற்றவர் என நிரூபிக்க வோராவுக்கு 7 ஆண்டுகள் ஆகின. வோரா சிறையில் அனுபவித்த சித்ரவதைகளை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார். சர்ச்சைகளுக்கு மத்தியில் அதன் விற்பனை சக்கை போடு போட்டு பிரபலமானது.

இந்தியாவையே உலுக்கிய இந்தச் சம்பவங்களை தழுவி தற்போது 'ஸ்கூப்' வெப்தொடர் எடுக்கப்பட்டுள்ளது. 'ஸ்காம் 1992'-வை எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்திய ஹன்சல் மேத்தாவின் மற்றுமொரு படைப்பு. 'எக்ஸ்க்ளூசிவ்' குற்றச்செய்திகளுக்காக பத்திரிகைத்துறையில் பிரபலமானவர் ஜக்ரூதி பதக். ராஜதந்திரங்களால் குற்றங்கள் நடக்கும் இடங்களை மோப்பம் பிடிப்பதில் நிபுணர். இவரின் திறன் எதிரிகளை பொறாமை கொள்ளச் செய்கிறது. அப்போது சக பத்திரிகையாளரை மர்மக்கும்பல் ஒன்று கொல்ல பழி பதக் மீது விழுகிறது. செய்யாத குற்றத்திற்காக அவர் சிறைக்குச் செல்ல அங்கு பதக் அனுபவிக்கும் சங்கடங்கள், சட்டச் சிக்கல்கள் ஆகியவை 6 எபிசோடுகளுடன் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ளது. ஜக்ரூதி பதக்காக கரீஷ்மா தன்னா கதாபாத்திரத்தோடு ஒன்றியுள்ளார். முகமது ஜீஷன் அய்யூப், ஹர்மன் பவேஜா, பிரோசென்ஜித் சட்டர்ஜி ஆகியோர் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளனர்.

பீட்

சமூகத்தின் அவலத்தைப் படம் பிடிக்கும் கண்ணாடியாகச் சில திரைப்படைப்புகள் அமையும். அத்தகைய படைப்புகளை உருவாக்கு வதில் அனுபவ் சின்கா வல்லவர். ஒடுக்கப்பட்டோர் படும் துயரங்களை படம் பிடித்து கண்களில் நீரை வரவழைப்பவர். தொற்று பரவிய காலத்தில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகளாகினர். பொது போக்குவரத்து முடங்கிய அந்த நேரத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு சாரைசாரையாக திரும்பிக் கொண்டிருந்த தருணம் அது. மாநில எல்லைச்சாவடி வழியே புலம்பெயர் தொழிலாளர்கள் கடப்பதை தடுக்கும் பொறுப்பு சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவுக்கு வருகிறது. அழுகையும், பற்கடிப்பும் உண்டான அந்த இடத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை நெஞ்சை பிளக்கும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்த படத்தை நெட்பிளிக்சில் பார்க்கலாம். நெரிக்கப்பட்ட குரல்களின் வேதனையை வெளிப்படுத்தி அக்கறை இல்லாத சமூகத்தின் பார்வையை மாற்றும் முயற்சிக்கானது. தண்டவாளத்தில் அசதியாக படுத்து உறங்கும் புலம்பெயர்ந்தோர் ரெயில் மோதி உயிரிழப்பது, கலவை எந்திர வாகனத்தில் புலம்பெயர்ந்தோரை மறைத்து வைத்து எல்லையை கடக்க முயலும் காட்சிகள் மனதை பதற வைக்கும். சாதிய வன்முறையையும், குறிப்பிட்ட மதத்தின் மீதான வெறுப்புணர்வையும் கையாளப்பட்ட விதம் பாராட்டுதலுக்குரியது. பாத்திரங்களுக்கான நடிகர்-நடிகை தேர்வு தரம்.

Tags:    

மேலும் செய்திகள்