சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

Update:2023-10-07 14:46 IST

பார்பி

ஹாலிவுட் படவிரும்பிகள் மறக்கக்கூடாத நாளாக கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி அமைந்தது. படைப்பில் நவீன உத்திகள் பயன்படுத்துவதில் புகழ்பெற்ற நோலனின் ஓபன்ஹெய்மரும், பெண் டைரக்டர் கிரேட்டா கெர்விக்கின் பார்பியும் ஒரே நாளில் தியேட்டர்களில் களம் இறங்கி வலைத்தளவாசிகளிடையே பேசுபொருளானது. அமெரிக்க கம்பெனி மெட்டலின் 'பார்பி' பொம்மைகள் வியாபாரம் அமோகமாக இருக்க, அதன் கதாபாத்திரங்களை தழுவி அனிமேஷன் படங்கள் வெளியாகின. லைவ்-ஆக்ஷன் படைப்பாக்க தயாரிப்பு நிறுவனங்கள் வரிசைகட்டின. எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி விமர்சனத்திலும், வசூலிலும் வெற்றிபெற்ற படம்.

பசி, துக்கம், சோர்வு போன்ற உணர்வுகள் இன்றி பார்பி லேண்டில் பொம்மைகளாக பார்பிகள் வாழ்கிறார்கள். பெண்ணியவாதிகள் நிறைந்த உலகில் ஆண் பாத்திரங்களான 'கென்'கள் வெறுப்புக்கு உள்ளாகிறார்கள். இதனால் ஆண்களை ஒதுக்கி ஆளும் சுபாவம் கொண்ட உலகில் நாயகி பார்பி மட்டும் விலக்கு.

இந்தநிலையில் நாயகி பார்பியின் உடலில் மாற்றம் உண்டாக மனித உணர்ச்சிகளை திடீரென பெறுகிறாள். செய்வதறியாது திகைக்கும் அவள் மனித உலகில் விடை கிடைக்கும் என நம்புகிறாள். காதலன் கென்னுடன் நிஜ உலகில் பிரவேசிக்க யதார்த்தத்தை பார்பி கண்கூடாக காண்கிறாள். ஒருகட்டத்தில் ஜோடி பிரிய உடல்மாற்றம் குறித்தான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டி பார்பி தங்கிவிடுகிறாள். கென், பார்பிலேண்ட் திரும்பி ஆணாதிக்கம் செலுத்துகிறார். இதனால் இவர்கள் சந்திக்கும் மனஸ்தாபங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துள்ளனர்.

நாயகி பார்பியாக மார்கோட் ராபி மெழுகு பொம்மையாகவே வாழ்ந்துள்ளார். பாத்திரத்திற்காக அவரின் உழைப்பு திரையில் 'பளிச்'சென வெளிப்படுகிறது. பொம்மையாக பிறவி எடுத்து இறுதியில் மனுஷியாக மாறும்வரை நடிப்பை கொட்டி கைத்தட்டல் பெறுகிறார். எம்மா மேக்கி, டுவா லிபா, இசெ ரே போன்றோர் சக பார்பிகளாக வருகிறார்கள். முதன்மை கென்னாக ரியான் கோஸ்லிங் 'க்யூட்' முகபாவனைகளை வெளிப்படுத்துகிறார். சமூகத்தில் பெண்கள் மீதான முரண்பட்ட கருத்துகளை களையும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த படைப்பு அமேசான் பிரைமில் காணக்கிடைக்கிறது.

கெங்கன் அசுரா சீசன்-2

தொழில்போட்டி என்பது அனைத்து துறைகளிலும் உண்டு. அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோர்கள் பல கோணங்களில் அணுகி தீர்வு காண்பார்கள். இக்கதையில் ஜப்பானில் உள்ள பெருவணிகர்கள், முதலீட்டாளர்கள் தங்களுக்குள் எழும் போட்டிகளை வித்தியாசமான முறையில் தீர்த்துக்கொள்கிறார்கள். நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பயிற்சிபெற்ற வீரர்கள் 'கிளாடியேட்டர்' படப்பாணியில் ஆயுதமின்றி சண்டையிட்டுக் கொள்வார்கள். வெல்லும் நிறுவனங்களின் விதிகளுக்கு, தோற்ற நிறுவனம் கீழ்ப்படிய வேண்டும்.

'கெங்கன்' கூட்டமைப்பு இந்த போட்டிகளை காலந்தொட்டு நடத்துகிறது. அமைப்பின் தலைவராக வேண்டும் என நோகி பதிப்பக உரிமையாளர் துடிக்கிறார். இதனால் தன் நிறுவனத்திற்காக சண்டையிட ஒரு வீரரை தேடும்வேளையில் டோகிடோ 'அசுரா' ஒமா அகப்படுகிறார். தன் குருவைக் கொன்றவன் கெங்கன் போட்டியில் பங்கேற்கும் சங்கதி அறிந்தவன் ஒமா.

இதனால் தேடி வந்த வாய்ப்பை நழுவ விடாமல் நோகி நிறுவனத்திற்காக களம் காண்கிறான். நோகி குழுமத்தின் பேராசை நிறைவேறியதா? மனதின் வன்மத்தை ஒமா தீர்த்துக் கொண்டானா? என்பதே இந்த அனிமேஷன் தொடரின் சுருக்கம்.

முதல் சீசன் இறுதியில் கெங்கன் கூட்டமைப்பு நடத்தும் வெளியேற்றுதல் சுற்றில் நோகியின் பினாமி யமசிடா சார்பாக ஒமா களம் இறங்க எதிரிகள் சிதறடிக்கப்படுகிறார்கள். மர்ம யுக்திகளை கொண்டு எதிரிகளை தாக்கும் வல்லமையைக் கொண்டு தோல்வி காணாத ரையான் குரேவை இறுதியில் வீழ்த்துகிறான். அதன் எதிரொலியாக உடல்நலன் கேள்விக்குறியாகி போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறான். ஒமா மீண்டும் போட்டியில் இணையும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகள், பாத்திரங்களின் பின்கதை, தொழில் அதிபர்களின் சதித்திட்ட சூழ்ச்சிகள் ஆகியவை நிறைந்த இத்தொடர் ஆக்ஷன் பிரியர்களுக்கு விருந்து.

அதிதி

தெலுங்கு மொழி டிஸ்னி ஹாட்ஸ்டார் தொடரான இது தமிழிலும் காணக்கிடைக்கிறது. நாவலாசிரியரான ரவி தனது பங்களாவில் இருந்து கொண்டு படைப்பிற்கான கதை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை பார்த்துக்கொள்ளும் அன்பான கணவராக இருக்கிறார். யூ டியூபரான சவாரி நவீன டிரெண்டிற்கேற்ப தனது சந்தாதாரர்களை குஷிப்படுத்தும் சுவாரசியங்களை தேடி அலைபவர். இந்தநிலையில் ரவி இருக்கும் ஊரில் பேய் ஒன்று நடமாடுவதாகவும் அதனை மையமாக வைத்து ஒரு வீடியோவை வெளியிட நினைத்து அந்த ஊருக்கு, சவாரி வருகிறார்.

அச்சமயத்தில் அடைமழை கொட்டுகிறது. ரவியின் பங்களா கதவை இளம்பெண் ஒருவர் தட்டுகிறார். இரவு நேரம் என்பதாலும், அடைமழை காரணமாகவும் ஒதுங்க இடம் கேட்கிறார். மனிதாபிமானத்துடன் இளம்பெண் மாயாவுக்கு ரவி அனுமதி கொடுக்கிறார். அப்போது சவாரியும் இடம்தேடி அலைய ரவி அடைக்கலம் கொடுக்கிறார். இந்தநிலையில் மாயாவின் நடவடிக்கைகள் அமானுஷ்யமாக இருப்பதை ரவியும், சவாரியும் உணர்கிறார்கள். மேலும் தன்னுடைய சுயரூபத்தை மாயா வெளிப்படுத்த பங்களாவை தீயசக்திகள் சூழ்ந்து கொள்கின்றன.

யார் இந்த மாயா? புதிய விருந்தினர்களின் வருகையால் ரவியின் குடும்பத்திற்கு நிகழும் சவால்கள் என்ன? என்பதை பரபரக்கும் எபிசோடுகளை கொண்டு காட்சிப்படுத்தியுள்ளனர். எவ்வித தொய்வும் இன்றி திகில் கதைக்குள் நேரடியாக நுழைந்து ரசிகர்களின் நெஞ்சை பதம் பார்த்துள்ள தொடர்.

சினிமாவுக்கு இடைவேளை கொடுத்திருந்த வேணு தொட்டேம்புடி இந்த தொடர் மூலம் ரீ என்ட்ரியாகிறார். அவந்திகா மிஸ்ரா, அதிதி கவுதம், வெங்கடேஷ் ஆகியோரும் வருகிறார்கள். எதிர்பாராத திருப்பங்களை கொண்டது இந்த திகில் தொடர்.

ஸ்பை கிட்ஸ்: அர்மகெதோன்

ராபர்ட் ரோட்ரிக்சின் உளவு-காமெடி திரில்லரான 'ஸ்பை கிட்ஸ்' படத்தொடர் '2-கே கிட்ஸ்' வாழ்க்கையை புரட்டியது எனலாம். வளரிளம் குழந்தைகளை குறிவைத்து வெளியான இதன் இறுதி பாகம் 2011-ம் ஆண்டில் ரிலீசானது. தொடரை மேம்படுத்துதல் முடிவே இந்த பாகம்.

'சூப்பர் ஸ்பை' நிறுவனத்திற்காக (ஓ.எஸ்.எஸ்) வேலைபார்க்கும் உளவாளி தம்பதிக்கு 2 குழந்தைகள். 'அர்மகெதோன்' குறியீடு என்னும் உளவு தொழில்நுட்பத்தை இந்த இணை கண்டுபிடித்து வைத்திருக்கிறது. சகலவித 'டெக்' சாதனங்களை 'ஹேக்' செய்து ஊடுருவும் வல்லமை கொண்ட அதனை 'கேம் டெவலப்பர்' கிங் அடைய முயற்சிக்கிறார். தம்பதியின் குழந்தைகள் கிங் படைக்கும் வீடியோகேமை சதாகாலமும் விளையாட அது மூலம் கற்பனை பாத்திரங்கள் நிஜ உலகினுள் நுழைகிறது. மேலும் நிதர்சன உலகம், வீடியோ கேமாகவும் மாறுகிறது. இதனால் கிங்கிடம் உளவாளி தம்பதி அர்மகெதோனுடன் மாட்டிக்கொள்கிறார்கள்.

பெற்றோரை காப்பாற்றி உலகை மீட்க தம்பதி குழந்தைகள் சூளுரைக்கிறார்கள். சுட்டிகளின் ஆக்ஷன் அலப்பறைகள் தொடர்கிறது.

உளவாளி தம்பதியராக ஜாக்ரி லேவி, ஜினா ரோட்ரிக்ஸ் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கலக்குகிறார்கள். வில்லனிடம் மாட்டிக்கொள்வதும், பின்னர் பிள்ளைகளால் காப்பாற்றப்பட்டு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள். 'ஈவில் ஜீனியன்ஸ்' கிங் வேடத்தில் பில்லியின் நடிப்பு சிறப்பு. எலான் மஸ்க்கின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு அப்பாத்திரம் படைத்துள்ளனர். சுட்டி நாயகர்கள் பாத்திரத்தில் எவர்லி, கானர் அதகளம் பண்ணியுள்ளனர். இந்த நெட்பிளிக்ஸ் படைப்பு குழந்தைகளுக்கானது.

Tags:    

மேலும் செய்திகள்