சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

Update:2023-08-26 07:28 IST

கன்ஸ் அன் குலாப்ஸ்

பாலிவுட்டின் அசைக்க முடியாத படைப்பாளர்களாக ராஜ் மற்றும் டி.கே. இருக்கிறார்கள். பேமிலி பேன், பார்சி உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த தொடர்களை உருவாக்கிய கூட்டணி இது. பயங்கரவாதிகள் ஊடுருவல், கள்ளநோட்டு புழக்கம் என்பதை அடிப்படையாக கொண்டு கதை எழுதி ஹிட் அடித்தவர்கள். நெட்பிளிக்சில் வெளியாகி இருக்கும் இந்த புதிய தொடர் கஞ்சா கடத்தலை மையமாக கொண்டது.

குலாப்கன்ஜ் என்னும் புனைவு கிராமத்தில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. கஞ்சா செடிகள் செழித்து வளரும் இங்கு லோக்கல் தாதாவான காஞ்சியின் கை ஓங்கி இருக்கிறது. 7 மடங்கு அதிக கஞ்சாவை ஒரு மாதத்திற்குள் கொல்கத்தா கும்பலுக்கு சப்ளை செய்யும் 'டீல்' அவருக்கு கிடைக்கிறது. அதற்கு முட்டுக்கட்டையாக பக்கத்து ஊர் தாதா இருக்கிறார். 'பட்டன்' கத்தி வீரனான ஆத்மாராமை களத்தில் இறக்கி காஞ்சியின் ஆட்டத்தை கலைக்க நினைக்கிறார். இந்த சதியில் நாயகன் திப்புவின் அப்பா கொல்லப்படுகிறார். மறுமுனையில் கஞ்சா கடத்தலை தடுக்கும் பொறுப்பு மாறுதலாகி வரும் போலீஸ் அதிகாரி அர்ஜூனுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த வலைப்பின்னலில் ஆத்மாராம், திப்பு, அர்ஜூன் ஆகியோர் இணைகிறார்கள். தந்தையை இழக்கும் திப்புவின் நிலை என்ன? ஆத்மராம் சதி ஈடேறியதா? அர்ஜூனால் கடத்தலை தடுக்க முடிந்ததா? என்னும் கேள்விகளுக்கு விடை கொடுத்துள்ளனர்.

90-களில் நடக்கும் இந்த கதைக்கு பாத்திர வடிவமைப்பு, கலை அமைப்பு, இசை, கதாபாத்திரங்களின் மேக்-அப் ஆகியவற்றால் உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜ்குமார் ராவ், குல்ஷான் தேவைய்யா, டி.ஜே.பானு, சதீஷ் கவுசிக் ஆகியோரின் நடிப்பு வேறு ரகம். துல்கர் சல்மான் இதன் வழியே இந்தி சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். தாதாவின் மகனாக வரும் அதர்ஷ் கவுரவின் நடிப்பு பாராட்டுதலுக்குரியது. விறுவிறுப்புடன் செல்லும் கதை அடுத்த பாகத்திற்கு தொடக்கமும் கொண்டு முடிகிறது.

தாளி

'தாளி' என்பதற்கு 'கைத்தட்டல்' என பொருள். மராட்டியத்தை சேர்ந்தவர் ஸ்ரீகவுரி சாவந்த். கணேசனாக பிறந்த அவர், 15 வயதில் தன் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்கிறார். இதனால் வீட்டைவிட்டு வெளியேறி தனிஆளாக உயர்ந்து வக்கீலாகிறார். மேலும் திருநங்கைகள் மீது படிந்து இருக்கும் கறையைத் துடைக்கும் போராட்டத்தை முன்னெடுக்கிறார்.

2000-ம் ஆண்டில் 'சகி சார் சவுகி' என்னும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இதன்வழியே மூன்றாம் பாலினத்தவர்கள் மனதில் விழிப்புணர்வு கல்வியை விதைத்தவர். திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர்களாக அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டவர்களில் ஒருவராக கவுரி கருதப்படுகிறார். அதன்படி 2014-ம் ஆண்டு அவர்களுக்கு ஆதரவாக கோர்ட்டு தீர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் தத்தெடுப்பு உரிமைகள் குறித்து போராடிய அவர், காயத்ரி என்னும் சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

வாழ்வில் கவுரி சந்தித்த இன்னல்கள் குறித்து திரைக்கதையாக ஷிதிஜ் எழுத, தேசிய விருது இயக்குனர் ரவி ஜாதவ் இயக்கியுள்ளார். புரட்சிகர கதையில் கவுரியாக 'மிஸ் யுனிவர்ஸ்' சுஷ்மிதா சென் வாழ்ந்துள்ளார். நடை, உடை, பாவனை என திருநங்கையாகவே மாறியுள்ளார். கதையின் பாரத்தை தோளில் சுமந்து முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். துணை பாத்திரங்களில் பெரும்பாலும் திருநங்கைகளே வருகிறார்கள். 6 எபிசோடுகளுடன் ஜியோ சினிமா தளத்தில் வெளியாகியுள்ளது. திருநங்கை நலனுக்காக வாழ்வின் பெரும்பகுதியை தியாகம் செய்தவரின் போராட்டங்கள் குறிப்பிடத்தக்கது. சமஉரிமை வேண்டியும் உரிய அடையாளம் தேடும் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான சமூகத்தின் பார்வையை மாற்ற வல்ல படைப்பு.

மத்தகம்

கிடாரி இயக்குனரின் வெப்தொடருக்கான படைப்பு. யானையின் முன்நெற்றியை 'மத்தகம்' என சொல்வர். தமிழ் சினிமாவில் அரிதான கேங்ஸ்டர்-திரில்லர் வகையை தொட்டுள்ளனர். இரவுநேர ரோந்துப்பணியின் போது போலீஸ்காரர்கள் கைகளில் ரவுடி ஒருவன் அகப்படுகிறார். விசாரணையில் அவன் 'படாளம்' ரமேசுக்கு கீழ் வேலை பார்ப்பது தெரியவர அதிர்ச்சி மேலோங்குகிறது. போலீசாரால் தேடப்பட்டு வந்த 'படாளம்' ரமேஷ் சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் இறந்துவிட்டதாக ஆவணங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் தலைமறைவாக இருந்து கொண்டு பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்வதும் தெரிகிறது. இதன்மூலம் ஊரில் உள்ள தாதாக்களை ஒன்றிணைத்து பெரும் திட்டம் ஒன்றை ரமேஷ் தீட்ட முயல்வதை போலீசார் தெரிந்து கொள்கிறார்கள்.

சமூகவிரோதியின் திட்டத்தை பின்தொடர்ந்து பெரிய மீனை பிடிக்கும் பொறுப்பு உயரதிகாரி அஸ்வந்திடம் வருகிறது. அதற்கு சரியான முறையில் துண்டில் போடப்பட்டதா? இரையான படாளம் ரமேஷின் திட்டம் என்ன? மீன்கள் (தாதாக்கள்) கூட்டத்தின் திமிங்கலம் யார்? என்ற கேள்விகளுக்கான விடையை விறுவிறு கதை வழியே சொல்லியுள்ளனர். கம்பீரமான போலீஸ் அதிகாரியாக அதர்வா நடித்துள்ளார். தாதாக்களை பிடிக்க அவர் போடும் திட்டங்கள் புதிது. கதைக்கு தூணான பாத்திரம் 'படாளம்' ரமேசாக 'குட்நைட்' மணிகண்டன் சம்பவம் செய்துள்ளார். வில்லன்களுக்கு உரிய பார்முலாவை உடைத்து புதிய கோணத்தில் மிளிர்கிறார். மேலும் நிகிலா விமல், கவுதம் மேனன் உள்ளிட்டோரும் வருகிறார்கள். 5 எபிசோடுகளை கொண்ட இந்த ஹாட்ஸ்டார் தொடர் ரசிகர்களை அடுத்த பாகத்திற்கு காத்திருக்க சொல்லி முடிகிறது.

தி மங்கி கிங்

மனித நாகரிகம் வளர்ச்சி அடைவதற்கு முன்பு நீதிக் கதைகள், பாட்டி கதைகள், புராணங்களை கொண்டு பொழுதுபோக்கி வந்தனர். கடற்கன்னி, மனித ஓநாய், ரத்த காட்டேரிகள், ராட்சதர்கள், டிராகன், ஒற்றை கொம்புடைய பறக்கும் குதிரை என அந்தந்த நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டன. பூமியில் இவற்றுக்கு இடம் உள்ளதா? என்ற விவாதம் அவ்வப்போது எழுகிறது. அந்த புராண பாத்திரங்களில் ஒன்றான 'மங்கி கிங்' என்னும் 'சன்வூ காங்' பாத்திரம் காலத்தால் அழியாததாக இருக்கிறது. சீன மக்களால் தெய்வமாக வழிபட்டு வரும் இந்த பாத்திரத்தை வைத்து பல படைப்புகள் வந்தாலும் நெட்பிளிக்சின் இந்த அனிமேஷன் படம் சற்று வித்தியாசமானது.

குறும்புத்தனம் மேலாங்கி மனித உணர்ச்சிகளை கொண்ட குரங்கு குட்டியாக 'மங்கி கிங்' பிறக்கிறது. இதனை வானர கூட்டத்தலைவன் ஏற்க மறுக்கிறான். கூட்டத்தின் நம்பிக்கையை பெற கொடூர அரக்கனை கொல்லச் சொல்கிறார்கள். பாதாளத்தில் குடி இருக்கும் டிராகன் கிங்கின் மந்திர தடியை அபகரித்து அந்த வேலையை மங்கி கிங் செய்கிறது. மேலும் தேவர்களுக்கு இணையாகும் பேராசை அதற்கு வருகிறது. இதனால் சாகாவரம் வேண்டி தன் பயணத்தை தொடங்குகிறது. பயணத்தில் லீ என்னும் சிறுமி குரங்குடன் இணைந்து கொள்கிறாள். மங்கி கிங் எண்ணம் ஈடேறியதா? லீயின் உண்மை முகம் என்ன? என்று சொல்லும் வகையில் மீதி கதை வருகிறது.

வாழ்வில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கிடைக்கும் என்னும் நீதியை மட்டுமின்றி சாதிக்க வேண்டுமெனில் பொறுமை அவசியம் என சொல்லுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்