சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

Update:2023-08-19 07:12 IST

ஹார்ட் ஆப் ஸ்டோன்

உலக நாடுகளின் அரசியல் அதட்டலுக்கு அடங்கிப்போகாத புலனாய்வு அமைப்பு 'சார்டர்'. சுயாட்சி நிர்வாகம் கொண்டு மனித இழப்புகள் நிகழாத வகையில் பாதுகாக்கிறது. இந்த அமைப்பின் முக்கிய சொத்தாக 'தி ஹார்ட்' எனப்படும் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளது. இது சார்டரின் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருக்கிறது. உலகின் அனைத்து வகை கம்ப்யூட்டர்களையும் தாக்கி ஊடுருவும் வல்லமை படைத்தது இந்த ஹார்ட்.

எதிர்காலத்தை கணிக்கக்கூடிய அதனை புலனமைப்பின் முன்னாள் ஏஜெண்டு பார்க்கர் அடைய நினைக்கிறார். தவறானவர்களின் கை களில் 'ஹார்ட்' சிக்கி சிதைகிறது என எண்ணும் அதிமேதாவி கியா அதனை நல்லதுக்கு பயன்படுத்த முனைகிறார். ஒருகட்டத்தில் இருவரும் ஒன்றிணைந்து சார்டரிடம் இருந்து ஹார்ட்டை 'லவட்டி' விடுகிறார்கள். சூப்பர் கம்ப்யூட்டரை மீட்கும் பணி அதன் முதன்மை 'டெக்-எக்ஸ்பெர்ட்' ரெச்சல் ஸ்டோனுக்கு வருகிறது. எதிரிகளின் திட்டங்களை முறியடித்து ஹார்ட்டை நாயகி மீட்பதே இதன் கதை.

நாயகி ஸ்டோனாக கேல் காடோட் அசத்தியுள்ளார். எதிரிகளை பந்தாடுவது, கார் துரத்தல் காட்சிகள் என ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். கியாவாக வரும் ஆலியா பட்டுக்கு இது முதல் ஹாலிவுட் படம். இறுதியில் அவரின் மனமாற்றம் படத்தின் முக்கிய திருப்பம். பார்க்கராக 'பிப்டி ஷேட்ஸ்' புகழ் ஜாமி வருகிறார். அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளில் திளைக்க வைக்கும் கதை கொண்டது. குடும்பத்துடன் ஜாலியாக இந்த படத்தை நெட்பிளிக்சில் காணலாம்.

வான் மூன்று

ஆஹா தளத்தில் வெளியாகியுள்ள ஆந்தாலஜி வகை படம். காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயன்ற சுஜித் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். காதலனால் ஏமாற்றப்படும் சுவாதியும் அங்கு சிகிச்சை பெறுகிறார். மனதை சுட்டுக்கொண்ட இருவரும் அங்கு வைத்து பேசிக்கொள்கிறார்கள். எதிர்பாராமல் நிகழும் இந்த சந்திப்பு அவர்களின் வாழ்வை புரட்டுகிறது.

பெற்றோர் சம்மதத்தை மீறி காதலன் ஜோசுவாவை ஜோதி மணந்து கொள்கிறார். நன்றாக போய்கொண்டிருக்கும் வாழ்வில் புயல் அடிக்கிறது. பக்கவாதத்திற்கான அறிகுறிகள் உடலில் ஏற்பட இதனால் தன் பெற்றோரை பார்க்கும் எண்ணம் ஜோதிக்கு வருகிறது. தூக்கி வளர்த்தவர்களை ஜோதி சந்தித்தாளா? மகளின் திருமணத்தை பெற்றோர் அங்கீகரித்தார்களா? என்பது மீதி கதை.

வாழ்வின் சுக துக்கங்களை 40 ஆண்டுகளுக்கும் மேலாக பகிர்ந்த தம்பதி சிவம்-சித்ரா. மகனால் கைவிடப்பட்ட நிலையில் சித்ராவுக்கு இதயக்கோளாறு ஏற்பட சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாத நிலை. பணத்தை திரட்ட முயலும் கணவர் பாசப்போராட்டத்தை சந்திக்கிறார்.

ஒரே ஆஸ்பத்திரியில் இந்த மூன்று கதைகளும் பின்னப்பட்டு கதை மாந்தர்கள் இணைக்கப்படுகிறார்கள். அவர்களின் மனக்குமுறல்களும், வாழ்க்கை பாடங்களும் பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை தருகின்றன.

உணர்ச்சி பொங்கும் 'பீல்-குட்' படத்தை முருகேஷ் இயக்கியுள்ளார். '96' படப்புகழ் ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, அம்மு வெங்கடாசலம், வினோத் கிஷன், டெல்லி கணேஷ் மற்றும் லீலா தாம்சன் என ஆறே நடிகர்-நடிகைகள். இவர்களை வைத்து கவித்துவமான காதலையும், தற்கால நிகழ்வுகள் பேசியுள்ளனர். மனிதனின் மறுபக்கத்தை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள திரைக்கதைகளையும் கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது. மன எண்ணங்களை உசுப்பிவிட்டு கேள்விக் கணைகளை தொடுக்கும் வகையில் அமைந்துள்ள முதிர்ச்சி படைப்பு.

பத்மினி

கேரள திரை உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் சென்னா ஹேட்ஜ். மானுடவியலை கரைத்துக் குடித்த அவர், உறவு சிக்கல்களை படைப்பின் வழியே காட்சிப்படுத்துவதில் நிபுணர். 'திங்கலஞ்ச நிச்சயம்' படத்திற்காக கேரள அரசின் உயரிய அங்கீகாரங்களை பெற்றவர். அவரின் புதுமையான படைப்பே பத்மினி.

கல்லூரி பேராசிரியர் ரமேசனுக்கு ஸ்மிர்தியுடன் திருமணமாகிறது. விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததாக கூறி முதலிரவின்போது காதலனுடன் ஸ்மிர்தி ஓடிப்போகிறாள். 'பத்மினி' காரில் புதுப்பெண் வேறொரு நபருடன் செல்வதை ஊர்மக்கள் பார்க்கிறார்கள். அதன்பின் ரமேசனை 'பத்மினி' என கேலியாக அழைக்கிறார்கள். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகும் ரமேசன் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தள்ள நினைக்கிறார். சில காலத்திற்கு பின் உடன்பணிபுரியும் பத்மினி என்பவர் மேல் ரமேசனுக்கு ஈர்ப்பு வருகிறது. ரமேசனின் மனதை அறிந்துகொள்ளும் பத்மினியும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார்.

ஆனால் சட்டப்படி முதல் மனைவியான ஸ்மிர்தியுடன் ரமேசன் விவாகரத்து வாங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறது. ஓடிப்போன ஸ்மிர்தியை, வக்கீல் ஸ்ரீதேவியுடன் இணைந்து தேடி கண்டுபிடிக்கிறார்கள்.

காதலனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஸ்மிர்தியின் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது. துணை தேடும் நிலையில் ரமேசன் விவாகரத்து வேண்டி அவளிடம் வருகிறார். விவாகரத்து தர ஸ்மிர்தி ஒப்புக்கொண்டாளா? ரமேசனுக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததா? என்னும் கேள்விகளுக்கு விடை சொல்லும் வகையில் இதனை அமைத்துள்ளனர்.

ரமேசனாக குஞ்சாக்கோ கோபன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஊர்மக்களின் கிண்டல்களுக்கு ஆளாகிறார். காதலி மற்றும் ஒருநாள் மனைவியிடையே மாட்டிக்கொண்டு துன்பப்படும் பாத்திரம். காதலி பத்மினியாக மடோனா அழகாக இருக்கிறார். ஸ்மிர்தியாக வின்சி அலோசியஸ் நடிப்பு ராட்சசியாக உள்ளார். அவரின் தந்திர மனது கதைக்கு தூணாக விளங்குகிறது. வக்கீல் ஸ்ரீதேவியாக அபர்ணா வருகிறார். பெண்கள் செய்யும் தவறுகளால் ஏற்படும் விளைவுகளை பகடித்தனத்துடன் சுட்டிக்காட்டுகிறது. மேலும் பெண்களை பொருளாதார சுதந்திரம் பெறச் சொல்லும் இது நெட்பிளிக்சில் உள்ளது.

கமோண்டோ

பாலிவுட்டின் கமோண்டோ படத்தொடர் மிகவும் பிரபலமானது. நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் வகையில் அமைந்து இதுவரை 3 பாகங்கள் வெளியாகி ஹிட் அடித்தது. இந்த நிலையில் வெப் தொடருக்காக கதையெழுதி அதன் படைப்பாளர் விபுல் உருவாக்கியுள்ளார். கொடிய வைரசை ஆய்வகத்தில் வைத்து பாகிஸ்தான் தயாரிக்கிறது. விஷக் கிருமியை இந்தியாவில் பரப்பி 'பயோ-வார்' தொடுக்கும் திட்டத்தை அரங்கேற்ற துடிக்கிறது. பாகிஸ்தான் திட்டத்தை இந்திய ராணுவ வீரர் ஷிதிஜ் ஊடுருவி தெரிந்து கொண்டு முட்டுக்கட்டை போடுகிறார். பின்னர் எதிரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். கொடூர சித்ரவதைகளுக்கு ஆளாகும் ஷிதிஜை காப்பாற்றும் பணி கமோண்டோ விராட்டுக்கு வருகிறது.

நண்பனை காப்பாற்ற எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் விராட் ஊடுருவுகிறார். பலத்த பாதுகாப்பு மிகுந்த சிறைக்குள் நுழைகிறார். நண்பனை மீட்டு நாயகன் உயிருடன் நாடு திரும்பினாரா? எதிரிகளின் கொடிய திட்டம் தவிடு பொடியானதா? என்பதை பரபரக்கும் திரைக்கதை கொண்டு எடுத்துள்ளனர். இம்முறை கமோண்டோவாக ஒடியா நடிகர் பிரேம் வருகிறார். இதற்கு முன்பு அந்த பாத்திரத்தில் தோன்றிய வித்யுத் ஜமாலுக்கு சளைத்தவன் அல்ல என நிரூபித்துள்ளார். மேலும் அதா சர்மா, வைபவ் தத்வாவாதி ஆகியோர் நடிப்பும் பாராட்டும்படி உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி சுடச்சுட டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இறங்கியுள்ளது. சிலிர்க்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இதனை காணத்தவற வேண்டாம்.

Tags:    

மேலும் செய்திகள்