சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

Update:2023-07-22 13:39 IST

அவா

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வங்காளதேச திரைப்படம். வங்காள மொழியில் 'காற்று' என்று பொருள்படும் இது மர்மம் கலந்த புனைவு கதை. அழகு ஆபத்தானது என்ற சொல்லாடல் பிரபலம். அதனை மையமாக கொண்டது இதன் கதைக்களம். கடலின் ஆழத்தை அறிந்த அனுபவம் மிகுந்த மீனவர் சான் மஜி. சக மீனவர்களுடன் தங்கியிருந்து மீன் பிடிக்க பைபர் படகில் கடலுக்கு செல்கிறார். படகின் மெக்கானிக்காக உள்ள இபாவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது. இதனால் பயணத்தில் இபாவை போட்டுத்தள்ள திட்டம் தீட்டப்படுகிறது. கடலோடு உறவாடி கொண்டே நடுக்கடலுக்கு அவர்களின் படகு செல்கிறது. ஆனால் எதிர்பார்த்த அளவு மீன்கள் சிக்கவில்லை. அதற்கு பதிலாக மயக்கும் பார்வையோடு அழகிய பெண் ஒருத்தி அவர்கள் வலையில் அகப்படுகிறாள். அவளின் வரவு மீனவர்களின் வாழ்வை புரட்டுகிறது. யார் அந்த இளம்பெண்? ஏன், எவ்வாறு இந்த படகிற்கு வந்தாள் என்பதை சஸ்பென்சுடன் சொல்லியுள்ளனர்.

புயல்காற்று, திடீர் மழை என மீனவர்களின் சவாலான வாழ்வை தத்ரூபமாக காட்சிப்படுத்தியுள்ளனர். பெண்களுடன் கடலில் பயணிப்பதை கெட்ட சகுனமாக கருதுபவர்கள் சபல புத்தியால் விதியை மீறுகிறார்கள். அதுவே அவர்களுக்கு வினையாக வந்து சேர்கிறது. சான் மஜியாக சஞ்சல் சவுத்ரி வருகிறார். அவரை சுற்றியே இந்த கதை பின்னப்படுகிறது. படகில் பிடிபடும் மீன்களை கள்ளத்தனமாக விற்பது, இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுக்க முயல்வது, பசியினால் வளர்ப்பு பறவையையே தீயில் வாட்டி சாப்பிடுவது என அதகளம் காட்டியுள்ளார். பிற பாத்திர தேர்வும் சிறப்பு. படத்திற்கு இசை கூடுதல் பலம். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இதனை சோனி லைவ் தளத்தில் தமிழில் காணலாம்.

சீக்ரெட் இன்வேஷன்

உலக மக்களில் பலர் மார்வெல் படைப்புகளை காண தவறியிருக்க மாட்டார்கள். ஸ்பைடர்மேன், அயர்ன்மேன், தோர் தொடங்கி ஷாங் சி, கேப்டன் மார்வெல் வரை இதன் பாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நீக்கமற நிறைந்தது. மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸ் என்னும் பெயரில் திரைப்படைப்புகள் வெளியாகி வருகிறது. இதன் புதிய இணையதொடராக 6 எபிசோடுகளுடன் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி வருகிறது.

உலகிற்கு அச்சுறுத்தலாக விளங்கிய தானோசிடம் இருந்து பூமியை அவெஞ்சர்ஸ் காப்பாற்றுகிறார்கள். உளவுப்பிரிவான 'ஷீல்டு'ன் தலைமை அதிகாரி நிக் ப்யூரி பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டு 4 ஆண்டுகள் மறைந்து வாழ்கிறார். அதேவேளையில் பூமியில் பல விபரீதங்கள் நடக்கிறது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத ப்யூரி மீது வேற்று கிரகவாசிகளான 'ஸ்கர்ல்ஸ்' கூட்டம் கோபம் கொள்கிறது. பூமியை சொந்தமாக்க முடிவு செய்கிறது. உருவம் மாற்றும் சக்தி படைத்த அவை உலக ஆதிக்க சக்திகளின் ஆளுமைகளாக ஊடுருவி திட்டம் தீட்டுகின்றன. ரஷியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போரை தூண்டி விடுகின்றனர். இதனை அறியும் ப்யூரி அவர்களின் செயலை ஒழித்துக்கட்டி மனிதத்தை காக்க போராடுவதே இதன் கதைக்களம்.

ஸ்கர்ல்சின் கலகத்தலைவனான கிராவிக் அரங்கேற்றும் சதி திட்டங்கள் வேறு ரகம். ப்யூரிக்கு வேற்றுக்கிரகவாசியான தலோஸ், உளவுத்துறை தலைமை அதிகாரி சோனியா ஆகியோர் உதவுகிறார்கள். நிக் ப்யூரியாக சாமுவேல் ஜாக்சன் வழக்கம்போல் நடிப்பில் அதகளம் காட்டியுள்ளார். ஜேம்ஸ் பாண்ட் புகழ் ஒலிவியா, கேம் ஆப் திரோன்ஸ் நாயகி எமிலியா கிளர்க் ஆகியோர் பங்களிப்பும் கொண்டுள்ளது. மார்வெல் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படைப்பு.

புஸ் இன் பூட்ஸ்: தி லாஸ்ட் விஷ்

இறுக்கம் மிகுந்த மனிதவாழ்வில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு மனதை குஷிப்படுத்தும். வீட்டில் பூனைகளை வளர்ப்பது எளிதாக இருப்பதால் பெரும்பாலானவர்களின் முதல் தேர்வு பூனையாகதான் இருக்கும். பொதுவாக பூனைக்கு 9 உயிர் என்று சொல்வார்கள். பூனையை நாயகனாக கொண்டு படைப்பை உருவாக்க முயன்றதின் நீட்சி இந்த படம். பிரபல 'ஷ்ரெக்' பட பாத்திரமான 'புஸ் இன் பூட்ஸ்' மனித உணர்வுகளை கொண்ட அடாவடி பூனையாகும். ஸ்பெயின் நாட்டை கதைக்களமாக கொண்டு இந்த அனிமேஷன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது. இதன் தொடர்கதை கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது. தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகியுள்ளது.

ஊரில் ஹீரோவாக சுற்றி வருகிறது புஸ். நல்லவனுக்கு நல்லவனாகவும் கெட்டவனுக்கு கெட்டவனாகவும் விளங்குகிறது. இதனால் பல்வேறு சூழல்களில் தனது 8 உயிர்களை அது இழக்க ஓநாய் உருவங்கொண்ட சாவு அவனை நெருங்குகிறது. கேட்கும் வரத்தை அருளும் மந்திர நட்சத்திரம் ஒன்று மர்ம காட்டில் புதைந்திருக்க வாழ்நாளை நீடிக்க புஸ் துடிக்கிறது.

நண்பர்கள் கிட்டி, பெரிட்டோ உதவியுடன் வரத்தை தேடி புஸ் பயணப்படுகிறது. சாகச பயணத்திற்கு முட்டுக்கட்டையாக கரடி குடும்பத்துடன் கோல்டி, பேராசைக்காரன் ஜாக் மட்டுமின்றி சாவும் இணைந்து கொள்கிறது. மர்மம் நிறைந்த மந்திரக்காட்டில் இருக்கும் நட்சத்திரத்தை புஸ் கண்டுபிடித்ததா? வரத்தை வேண்டி வாழ்நாளை நீட்டித்து கொண்டதா? என்பதை டார்க்-பேன்டசி கதை கொண்டு கூறியுள்ளனர்.

நண்பர்களின் முக்கியத்துவத்தையும், குடும்பத்தின் மகத்துவத்தையும் விளக்கிய விதம் அருமை. பூனை புஸ்சிற்கு தன் ஆளுமையான பின்னணி குரலை அன்டோனியோ கொடுத்துள்ளார். நாயகி கிட்டியின் குரலில் சல்மா ஒலிக்கிறார். அனைத்து வயதினரையும் கவரும் படைப்பாக உள்ளது.

பேர்ட் பாக்ஸ்: பார்சிலோனா

நெட்பிளிக்சில் இன்றளவும் அதிக பார்வைகளை கொண்ட திகில் படமாக ஹாலிவுட்டின் 'பேர்ட் பாக்ஸ்' உள்ளது. கலிபோர்னியாவில் நாயகி சாண்ட்ரா புல்லாக் குடும்பத்தின் கண்களை கட்டி கொண்டு ஓடவிட்ட மர்ம ஜந்துகள் ஸ்பெயினின் பார்சிலோனா நகரை தற்போது மையம் கொண்டுள்ளது. நேருக்கு நேர் அதனை பார்ப்பவர்கள் கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனால் கிட்டத்தட்ட மானுடமே மண்ணிற்குள் புதைகிறது.

மனைவி, மகளை இழந்த நாயகன் செபாஸ்டியனுக்கு ஒரே உறவாக இளைய மகள் இருக்கிறாள். அவளை காப்பாற்ற தன் உயிரையும் துச்சமாக எண்ணுகிறான். மர்ம உயிரினங்களின் கடைக்கண் பார்வையில் இருந்து தப்பிக்கும் சிலருடன் நாயகன் எதிர்பாராமல் இணைகிறான். ஊரின் எல்லையில் அமைந்திருக்கும் கோட்டை கட்டிடத்திற்குள் தஞ்சம் புகுந்து மர்ம ஜந்துகளிடம் இருந்து தப்பிக்கலாம் என அவர்கள் நம்புகிறார்கள். நாயகன் தலைமையில் ஜந்துகளுக்கு டிமிக்கி கொடுத்து எவ்வாறு உயிர் பிழைக்கிறார்கள் என்பதை சலிப்பு தட்டாத விறுவிறு கதை வழியே காட்சிப்படுத்தியுள்ளனர். கண்களை மறைத்துக்கொண்டு மனிதர்கள் உலவ அறிவு மிகுந்த ஜந்துக்கள் அவர்களை அச்சுறுத்துகிறது.

மனிதாபிமானம், தந்தை-மகள் பாச உறவு, சமூக அக்கறை குறித்த இந்த திகில் படம் பார்வையாளர்களை பரவசப்படுத்த தவறாது.

Tags:    

மேலும் செய்திகள்