சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

Update:2023-07-16 09:22 IST

தர்லா

தங்கல், சிச்சோர் போன்ற பெண்ணியம் சார்ந்த படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் பியூஷ் குப்தா. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பெண்மணியின் வாழ்க்கை சம்பவங்களை தழுவி புதிய படத்தை எடுத்துள்ளார். குஜராத்தை சேர்ந்த நடுத்தர குடும்ப பெண்மணி தர்லா. என்ஜினீயரான நளினை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிறார். இயல்பிலேயே சமையல் கலையில் ஆர்வம் கொண்டவர் தர்லா. தன் கைப்பக்குவத்தை கொண்டு எவரையும் வீழ்த்தும் வல்லமை உடையவர். அசைவம் அறியா நளின் குடும்பத்தை ஒருநாள் பக்கத்து வீட்டின் சிக்கன் சமையல் வாசம் சப்பு கொட்ட வைக்கிறது.

கனநேரத்தில் உருளைக்கிழங்கு கொண்டு புதிய பதார்த்தத்தை தர்லா சமைக்கிறார். இறைச்சி வாடையை மறந்து அதன் சுவையில் தர்லா குடும்பம் திளைக்க புதிய யோசனை கிளம்புகிறது.

இறைச்சிக்கு மாற்றான சைவ உணவு பண்டங்களை ஒவ்வொன்றாக சமைத்து அசத்துகிறார். மேலும் அதன் தொடர்ச்சியாக உணவு செய்முறைகளை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட நினைக்கிறார். ஆணாதிக்கம் நிறைந்த உலகம் தர்லாவின் யோசனைக்கு முட்டுக்கட்டை போடுகிறது. சாதிக்க துடிக்கும் மன எண்ணங்களை புறந்தள்ளும் சமூகம் குறித்தும், அதனை தகர்த்து எறிந்து பிரபலமாகும் பெண் குறித்தும் காட்சிப்படுத்தியுள்ளனர். தர்லாவாக ஹூமா குரேஷி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கணவராக ஷரிப் ஹாஸ்மி வருகிறார். இந்திய சமையலில் புது யுக்திகளை புகுத்திய பெண் கலைஞரின் வாழ்க்கை பாடத்தை ஜீ5 தளத்தில் காணலாம்.

ஆதுரா

அமேசான் பிரைம் வீடியோவின் புதிய வெப்தொடரான இது 'திகில்' வகையை சார்ந்தது. 7 எபிசோடுகளுடன் ஊட்டி உறைவிடப்பள்ளியில் நடக்கும் மர்மங்களே கதைக்களம். பள்ளிக்கு புதிதாக வரும் 10 வயது சிறுவன் வேதாந்த் சக மாணவர்களின் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகிறான். அதன் உச்சமாக அவனை அலமாரி ஒன்றுக்குள் அடைத்து வைத்து துன்பப்படுத்துகிறார்கள். மர்ம உருவம் அவனை காப்பாற்ற வேதாந்த் நடவடிக்கை மாறுகிறது. சக மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் அதனை உணர்கிறாா்கள். அதேநேரத்தில் 3 நாள் விழாவாக பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடக்கிறது.

உயிர் நண்பன் நினாந்தை காணும் ஆவலுடன் முன்னாள் மாணவர் ஆதிராஜ் பள்ளிக்கு வருகிறான். நினாந்த் இல்லாதது ஆதிராஜுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அப்போது பள்ளி மணிக்கூண்டு உச்சியில் வைத்து முன்னாள் மாணவர் ஒருவர் மர்மான முறையில் தற்கொலை செய்துகொள்கிறார். மேலும் மற்றொருவரும் திடீரென இறந்துபோக அசாதாரண சூழல் உண்டாகிறது. இதனால் போலீஸ் விசாரிக்கிறது. புதைந்துகிடந்த சிறுவன் பிணம் ஒன்று பள்ளி வளாகத்தில் கிடைக்க அது காணாமல் போன நினாந்த் என்பது வெளிச்சமாகிறது. அதேசமயத்தில் வேதாந்த்தை ஆதிராஜ் சந்திக்க அவனை நினாந்த் ஆத்மா ஆட்டிபடைப்பது தெரிகிறது. வேதாந்த் உடலைக்கொண்டு நினாந்த் உணர்த்த இருக்கும் சேதி என்ன? பள்ளி வளாகத்தில் நடை பெறும் தொடர் சம்பவங்களுக்கும், அதற்கும் உள்ள தொடர்பு குறித்தும் திகிலூட்டும் திரில்லர் கதை வழியே சொல்லுகிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை மையமாக கொண்ட இது பயமுறுத்த தவறாது.

ஸ்வீட் காரம் காபி

ஆணாதிக்கம் நிறைந்த வாழ்வில் தங்களுக்கான உரிமைகளை தேட வெவ்வேறு தலைமுறையை சேர்ந்த பெண்கள் முயற்சிக்கிறார்கள். அதற்கான முடிவு வாழ்க்கையை மாற்றுகிறது. கணவரை இழந்து வீட்டின் மூத்தவராக இருப்பவர் சுந்தரி. மகனின் அளவு கடந்த அன்பினால் வாழ்க்கையை இயல்பாக வாழ முடியாத சூழல். அரவணைக்க தெரியாத கணவராலும் அக்கறை இல்லாத மகனாலும் சுயமரியாதை இன்றி தவிப்பவர் காவேரி. கிரிக்கெட் மீது கொண்ட அதீத ஆர்வத்துக்கும், தன் காதலனின் அன்பிற்கும் இடையே தடுமாறுபவர் நிவேதிதா. பெண் அடிமைத்தனத்தை ஒரே வீட்டில் அனுபவிக்கும் மூவர். ஏமாற்றத்தையும், அடக்குமுறையையும் எதிர்கொள்ளும் இவர்கள் அதிரடி முடிவுக்கு வருகிறார்கள். அதன்படி சுதந்திரத்தை தேடி பாட்டி, மருமகள், பேத்தி சகிதமாக காரில் கோவா செல்ல பயணிக்கிறார்கள்.

பயணத்தின்போது தங்களின் பலம்-பலவீனம், குடும்ப அங்கீகாரம், உறவு சிக்கல்கள் ஆகியவை குறித்து கலந்து பேசி சுயமதிப்பீ்டு செய்து கொள்கிறார்கள். இதனால் பெண்களின் வாழ்க்கை புத்துயிர் பெறும் வகையில் அமைந்து எதிர்காலத்தை புதிய கோணத்தில் பார்க்க உதவுகிறது. கசப்பான சூழ்நிலைகள், தடைகளை தாண்டி மனதிடத்துடன் பெண்கள் முன்னேற வேண்டும் என்பதை நெத்தி அடியாக சொல்லப்பட்டுள்ளது.

சுந்தரி பாத்திரத்தில் லட்சுமி அசத்தியுள்ளார். தன் அனுபவ நடிப்பால் கதைக்கு தூணாக இருக்கிறார். இதில் அவர் அடிக்கும் லூட்டிகள் வேறு ரகம். தாய் காவேரியாக மதுபாலா இயல்பாக தோன்றி அசத்தியுள்ளார். மகள் நிவியாக வரும் சாந்தி இளம்பருவத்தினருக்கு உரிய பிரச்சினைகளை சரியான முறையில் வெளிப்படுத்துகிறார். பெண்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலித்து அடக்கு முறைகளை உடைத்தெறிய சொல்லும் இதனை குடும்பத்துடன் அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

ஜூஜூட்ஸ்சு கைசன் சீசன் 2

மாறுபட்ட கதைக்களத்தை கொண்ட ஜப்பானிய அனிமேஷன் தொடர் இது. உலக அளவில் இதன் ஒளிப்பரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது.

எதிர்மறை எண்ணங்கள் எழும்வேளையில் மனிதர்கள் தங்களிடம் இருந்து தீய ஆற்றல்களை வெளியேற்றுகிறார்கள். சாபக்கேடான அதன் மூலம் பேய்கள், பிசாசுகள், பூதங்கள் உருவாகுகிறது. மனிதத்தை அழித்து பூமியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவை நிழல் உலகில் இருந்து கொண்டு செயல்படுகிறது.

சாதாரண மனிதர்களின் கண்களுக்கு அகப்படாத இவற்றை ஜூஜூட்ஸ்சு சூனியக்காரர்கள் வதம் செய்கிறார்கள். தங்கள் உடலில் இருந்து வெளியேறும் தீய ஆற்றல்களை கட்டுப்படுத்தி அவற்றிற்கு எதிராக பிரயோகிப்பார்கள். கற்பனையான அந்த உலகில் பெற்றோரை இழந்து தாத்தா அரவணைப்பில் வளர்பவர் நாயகன் இடாடோரி யூஜி. இறக்கும் தருவாயில் தாத்தாவுக்கு கொடுத்த சத்தியத்தின்படி பிறருக்கு உதவி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பவர்.

எதிர்பாராதவிதமாக சாத்தான்களின் ராஜாவான ரோமன் சுகுனாவின் சாபத்திற்கு யூஜி ஆளாகிறான். யூஜியை கொன்றுவிட்டால் சாத்தானும் அவனோடு மடிந்துவிடும் என்பதை அறியும் சூனியக்காரர்கள் யூஜியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகிறார்கள். மேலும் சபிக்கப்பட்ட பிசாசு கூட்டமும் சுகுனாவின் சக்தியை அடைய யூஜிக்கு தூண்டில் போடுகிறது. மனதிடத்தால் பிசாசின் சாபத்தை கட்டுக்குள் கொண்டு வரும் யூஜியை சூனியம் சொல்லித்தரும் கோஜோ பாதுகாக்கிறார். எதிரிகளின் திட்டங்களை இவர்கள் எவ்வாறு தவிடுப்பொடியாக்குகிறார்கள் என்பதே இதன்கதை. 2-ம் பாகம் கடந்தகால நிகழ்வுகளான கோஜோ-சுகுரு கெட்டோவின் சாகசங்கள் குறித்தது. பிரமிக்க வைக்கும் அசத்தல் கிராபிக்சுடன் காட்சிப்படுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்