வாழைப்பழத்தின் வரலாறு..!
இயற்கை மனிதர்களுக்கு அளித்த அற்புதமான உணவுப் பரிசுகளில் ஒன்று, வாழைப்பழம். உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் இதன் ருசி தெரியும். இதம், பதம், சூடு என பலவிதமான உணவுப் பொருட்கள் தயாரிக்க வாழைப்பழம் பயன்படுகிறது.;
வாழையடி வாழையாக பல ஆயிரம் ஆண்டுகள் மக்களின் பசி தீர்த்து வந்திருக்கும் வாழை, முதன் முதலில் எந்த நாட்டில் பயிரிடப்பட்டிருக்கும் என்பதற்கு சான்றுகள் இல்லை. வாழையின் இன்னொரு சிறப்பு தண்டு, இலை, பூ, காய், கனி, நார் என அனைத்துப் பகுதிகளும் மக்களுக்கு பயன்படக்கூடியது.
மாவீரன் விரும்பிய பழம்
வாழைப்பழத்துடன் தொடர்புடைய சரித்திர சம்பவம் ஒன்று உண்டு. கி.மு.327-ல் மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்தார். பஞ்சாப்பில் அவர் போர் புரிந்து உற்சாகம் குறைந்து போயிருந்த நேரத்தில், வீரர்கள் சிலர் தோட்டத்தில் கனிந்த வாழைப்பழங்கள் சிலவற்றை கொண்டுவந்து அவர் முன்னால் வைத்துவிட்டு, 'மன்னா நாங்கள் இதனை சாப்பிட்டோம். அருமையான ருசி. உடலுக்கும் உடனடியாக தெம்பு தருகிறது. நீங்களும் சுவைத்துப் பாருங்கள்..' என்று வேண்டுகோள் வைத்தார்கள்.
அப்போதுதான் முதல்முறையாக வாழைப்பழத்தை அலெக்சாண்டர் பார்த்தார். வாழைப்பழம் என்ற உணவுப் பொருள் ஒன்று இருப்பது அதற்கு முன்பு வரை அலெக்சாண்டருக்கு தெரியாது. சுவைத்தார். உற்சாகத்தில் துள்ளாட்டம் போட்டார்.
இந்தியாவில் போர் புரிந்த காலம் வரை வாழைப்பழ வகைகளை சுவைத்து மகிழ்ந்தார். வாழைப்பழத்தின் ருசிக்கு அடிமையாகிவிட்டார் என்றே சொல்லலாம். திரும்பிச்செல்லும்போது உயர்ந்த வகை வாழைக்கன்றுகளை தன்னோடு கொண்டு சென்றார். அவர் 32 வயதில் மரணமடைந்துவிட்டாலும், அவரால் அன்றைய கிரீஸ் நாடு முழுவதும் வாழை பயிரிடப்பட்டது. வழிவழியாக இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
வாழையடி வாழை
பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு எகிப்து, பாலஸ்தீனம், சிரியா போன்ற நாடுகளுக்கு வாழைக்கன்றுகள் பிரவேசித்திருக்கின்றன. ஆனாலும் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்புதான் வாழை, அமெரிக்காவிற்குள் நுழைந்திருக்கிறது.
ஆப்பிரிக்க கண்டத்திற்கு சென்ற போர்ச்சுக்கீசிய மாலுமிகள் அங்கே வாழைப்பழத்தை சுவைத்துவிட்டு, கையோடு அமெரிக்காவிற்கு கொண்டு வந்து அறிமுகம் செய்திருக்கிறார்கள். பயிரிடும் முறையையும் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். அதற்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, பப்புவா நியூகினியா போன்ற நாடுகளில் வாழை இனங்கள் செழித்தோங்கி வளர்ந்திருக்கின்றன. அப்போது 3300 வாழை இனங்கள் பயிரிடப்பட்டதாக சான்றுகள் உள்ளன.
இந்தியா
வாழை உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. மொத்த உற்பத்தியில் 20 சதவீதம் இந்தியாவிற்கு சொந்தம். வருடத்திற்கு சுமார் 170 லட்சம் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்கிறோம். அடுத்த இடத்தில் ஈக்வடார் நாடு உள்ளது. அமெரிக்கர்கள் தாமதமாகவே வாழையை பயிரிட கற்றுக்கொண்டாலும், உலக அளவில் இன்றைக்கும் அவர்கள்தான் அதிக அளவு வாழைப்பழங்களை சாப்பிடுகிறார்கள்.
வாழைப்பழம் உலகம் முழுவதிலும் சிறப்பிடத்தை பெற அதில் இருக்கும் சத்துக்களும், ஜீரணத்தை எளிதாக்கும் ஆற்றலும்தான் காரணம்.
வாழைப்பழ உணவுகள்
வாழைப்பழத்தில் ருசி மிகுந்த பலவிதமான உணவுப் பதார்த்தங்களை தயார்செய்து சுவைக்கிறோம். வாழைப்பழ பர்பி, வாழைப்பழ புட்டிங், வாழைப்பழ அல்வா, வாழைப்பழ கேக் போன்று அந்த பட்டியல் 100-க்கும் மேற்பட்ட பொருட்களுடன் நீளும். சட்னி, ரைத்தா போன்றவைகளும் வாழைப்பழத்தில் தயாராகின்றன.
அதிகம் பழுக்காத நேந்திரன் வாழைப்பழங்களை ஆவியில் வேகவைத்து ஆரோக்கியமாக சாப்பிடும் வழக்கம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் இருக்கிறது. இப்படி வேகவைக்கும்போது அதில் இருக்கும் சர்க்கரை அதாவது தித்திப்பு குறைகிறது. அது உடலுக்கு நல்லது. சில வகை மலை வாழைப்பழ இனங்களை கழுவி ஆவியில் வேகவைத்து தோலுடன் சாப்பிடும் பழக்கமும் கர்நாடகாவில் ஒருபகுதி மக்களிடம் உள்ளது.
சிப்ஸ்
தமிழகத்தில் தான் முக்கனிகளில் ஒன்றாக வாழைப்பழத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். தமிழகத்தின் அடையாளங்களில் இன்னொன்று வாழைக்காய் சிப்ஸ். வாழைக்காய்களை தேர்ந்தெடுத்து தோல் உரித்து, அழகாக சீவி, அலசி, எண்ணெய்யில் சுடச்சுட வறுத்தெடுப்பதை பார்க்கும்போதே சுவைக்கத் தூண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுவையான மட்டி என்ற வாழை ரகம் உண்டு. அதற்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது.
-முனைவர் ஜே.தேவதாஸ் (உணவியல் துறை எழுத்தாளர்), சென்னை.