தன் வாழ்க்கையை சுயமாக வண்ணம் தீட்டியவர்..!

Update:2023-08-05 15:57 IST

ஓவியம் என்ற கலைக்குள் எண்ணிலடங்காத வகைகள் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டு கற்றுக்கொள்வதே கடினம் என்ற நிலையில், சுயமாக கற்றுக்கொள்வது மிகவும் சிரமமான ஒன்று. ஆனால், சென்னை முட்டுக்காடு பகுதியை சேர்ந்த பத்மாவதி எத்திராஜ், அதை அநாயசமாக செய்து வருகிறார். 2009-ம் ஆண்டு முதல் தூரிகைபிடிக்க தொடங்கி, இதுவரை 22 ஓவிய வகைகளை, சுயமாகவே கற்று, அவை ஒவ்வொன்றிலும் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். இந்த விஷயம் அறிந்து, அவரது வீட்டிற்கு விசிட் அடிக்க, அங்கு ஏராளமான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும், ஒரு கதை கூற.... பத்மாவதி ஓவியராக மாறிய சுவாரசிய கதையை கூறினார். அவை இதோ...

* ஓவிய ஆர்வம் எப்போது துளிர்விட்டது?

சிறுவயதிலேயே துளிர்க்க தொடங்கிவிட்டது. பள்ளிப்படிப்பிற்கு பிறகு, பெங்களூருவின் பிரபலமான நுண்கலை கல்லூரியில் சேர்ந்து ஓவியம் பயில ஆசைப்பட்டேன். இருப்பினும், குடும்ப சூழல் காரணமாக அது நிறைவேறாமல் போனது. இருப்பினும் கொஞ்சம் கொஞ்சமாக சுயமாகவே கற்றுக்கொள்ள தொடங்கினேன். திருமணத்திற்கு பிறகு, குறிப்பாக 2009-ம் ஆண்டிற்கு மேல் வண்ண தூரிகைகளை முழுநேரமாக கையில் ஏந்தினேன்.

* ஓவிய ஆசை, உங்களை எப்படி மேம்படுத்தியது?

ஆர்வமும், ஆசையும் இருந்தால் போதும்... நீங்கள் விரும்புவதை அடையலாம் என்பதை பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், அது என்னுடைய வாழ்க்கையில் நடக்கும்போதுதான் உண்மை என உணர்ந்தேன். ஆம்..! ஓவியம் வரைய, புதுப்புது ஓவிய வகைகளை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்ததால், சுயமாகவே கற்க ஆரம்பித்தேன். தஞ்சாவூர் ஓவியத்திற்கு என பிரபலமான கிராமம் ஒன்றில், ஒருமாதம் தங்கியிருந்து தஞ்சாவூர் ஓவியங்களை வரைய கற்றுக்கொண்டேன். மிகவும் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட தஞ்சாவூர் ஓவியக்கலையிலேயே தேர்ச்சி பெற்றுவிட்ட மகிழ்ச்சி, என்னை அடுத்தடுத்த ஓவிய கலைகளுக்குள் ஐக்கியமாக்கியது. அதனால் நிறைய ஓவிய வகைகளை, சுயமாகவே கற்றுக்கொண்டேன்.



* என்னென்ன ஓவிய கலைகளை சுயமாகவே கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்?

தஞ்சாவூர் ஓவியம், அக்ரிலிக் ஓவியம், வாட்டர் பெயிண்டிங், போஸ்டர் பெயிண்டிங், கிராபைட் ஆர்ட், ஹைபர் ரியலிஸ்டிக் ஆர்ட், ஆயில், டிரை பெயிண்டிங், ஸ்டிப்லிங், சார்கோல் ஆர்ட், முரல் ஆர்ட், வார்லி ஆர்ட், பாளட் நைப் ஆர்ட், பாயில் ஆர்ட், டெக்ஸர் ஆர்ட், மண்டலா ஆர்ட், மதுபானி ஓவியம், லிப்பன் ஆர்ட், மொசைக் ஆர்ட், கிளாஸ் பெயிண்ட், சாண்ட் ஆர்ட், கிளே ஆர்ட், டெரகோட்டா நகை கலை, பாட்டில் ஆர்ட், பாப்ரிக் பெயிண்டிங்... இப்படியாக மொத்தம் 22 கலை வடிவங்களை, எந்தவித பயிற்சியும் இன்றி, சுயமாகவே கற்றுக்கொண்டேன்.

* தேர்ந்த பயிற்சியாளர்களிடம் கற்றுக்கொள்வதே கொஞ்சம் சிரமமான வேலை. இருப்பினும் நீங்கள் எப்படி சுயமாகவே கற்றுக்கொண்டீர்கள்?

ஓவியக்கலை மீது இருந்த தீராத காதல்தான், என்னை புதுப்புது ஓவிய கலைகளை கற்க தூண்டியது. இதில் தஞ்சாவூர் ஓவியம், மண்டலா ஆர்ட், மதுபானி ஓவியம், லிப்பன் ஆர்ட் போன்றவை மிகவும் சுவாரசியமானவை. இதில் லிப்பன் ஆர்ட், கண்ணாடிகளையும், மணலையும் ஒருங்கிணைத்து செய்யக்கூடியது. மண்டலா ஓவியமும், மதுபானி ஓவியமும் நுணுக்கமானவை. இப்படி ஒவ்வொரு ஓவியக்கலைக்கும் ஒரு தனித்துவம் இருப்பதால், அதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்.

* இதில் கற்றுக்கொள்ள சிரமமான ஓவியக்கலை எது?

ஓவியக்கலையை பொறுத்தமட்டில், எல்லாமே நுணுக்கமானதுதான். எல்லாமே சிரமமானதுதான். சிரமத்தை தாண்டி, அதில் இருக்கும் சிறப்புகளை உணர்ந்து கொண்டால், சிரமமான ஓவியக்கலையும், சுவாரசியமானதாக மாறிவிடும்.

* உங்களது ஓவியத்திறனை மற்றவர்களுக்கு காட்சிப்படுத்தியிருக்கிறீர்களா?

ஆம்...! என்னுடைய 'மாஸ்டர் பீஸ்' ஓவியங்களை, நிறைய கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி இருக்கிறேன். நிறைய பாராட்டுகளையும் பெற்றிருக்கிறேன். என்னுடைய ஓவியத்திற்கு, மாநில அளவிலான விருதும், பரிசும் கிடைத்திருக்கிறது. இதோடு சென்னை விமான நிலையத்தில் பல ஓவியர்கள் சேர்ந்து வரைந்து கின்னஸ் சாதனை படைத்த நிகழ்விலும், நான் பங்கேற்று சான்றிதழ் பெற்றிருக்கிறேன்.

* உங்களுடைய ஆசை என்ன?

ஸ்மார்ட்போன்களில் வீடியோ பார்க்கவும், விளையாடவும் ஆசைப்படும் இந்த காலத்து குழந்தைகளுக்கு நுண்கலை மீதான ஆர்வத்தை புகுத்துவதும், ஓவியக்கலையை எல்லோருக்கும் கற்றுக்கொடுப்பதும்தான் என்னுடைய ஆசை. ஏனெனில், இன்றைய குழந்தைகளுக்கு எம்ப்ராய்டரி தையல் கலை கூட தெரியவில்லை. வாழ்க்கைக்கு தேவையான கலைகளை கற்றுக்கொடுப்பதன் மூலம், ஸ்மார்ட்போன் மோகத்தை கட்டுப்படுத்தலாம். அதையே, என் ஆசையாகவும், லட்சியமாகவும் கொண்டிருக்கிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்