ஜி-20 மாநாட்டில் கம்பீரமாக காட்சியளிக்கும் அஷ்ட தாதுக்களால் ஆன நடராஜர் சிலை..!

இந்த பிரமாண்ட நடராஜர் சிலையை செய்தவர்களில் ஒருவரான தேவ.ஸ்ரீகண்ட ஸ்தபதியிடம் இந்த சிலையின் சிறப்பு அம்சங்கள் குறித்து கேட்டபோது அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை...

Update: 2023-09-10 11:15 GMT

 

ஜி-20 மாநாட்டு மண்டபத்தின் முன்பு, கம்பீரமாக நிறுவப்பட்டிருக்கும் நடராஜர் சிலையை வடிவமைத்த பெருமை நம் தமிழகத்திற்கே சாரும். ஆம்..! இதுவே உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை. இந்த பிரமாண்ட சிலையை, தஞ்சை அருகே இருக்கும் சுவாமிமலை பகுதியை சேர்ந்த சகோதரர்களான ஸ்தபதிகள் தேவ.ராதாகிருஷ்ணன், தேவ.ஸ்ரீகண்டன், தேவ.சுவாமிநாதன் உள்ளிட்ட ஸ்தபதிகள் அடங்கிய 50 பேர் கொண்ட குழுவினர் உருவாக்கினர்.

* டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்டுள்ள நடராஜர் சிலை செய்யும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

சுவாமிமலை, பஞ்சலோக சிலைகளை பாரம்பரிய முறைப்படி உருவாக்கும் இடம். இங்கு 9-வது தலைமுறைகளாக, சிலை செய்யும் பணிகளை செய்து வருகிறோம். சுவாமிமலையில் உருவாகும் பஞ்சலோக சிலைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில்தான், இந்த வாய்ப்பு கிடைத்தது.

மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் இயங்கும் இந்திராகாந்தி தேசிய கலை மைய அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டு 28 அடி உயரத்தில் நடராஜர் சிலை செய்ய வேண்டும் என்றனர். அதன்படி நாங்களும் சிலை செய்வதற்காக டெண்டர் போட்டோம்.

நடராஜர் சிலை மாதிரி வரைபடத்தையும், நாங்கள் இதுவரை செய்த பஞ்சலோக சிலைகளை பற்றிய ஒளிப்படத்தையும் அனுப்பி இருந்தோம். இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் டெண்டர் போட்டனர். இதில் நாங்கள் அனுப்பிய நடராஜர் சிலை மாதிரி வரைபடம் சிறப்பாக இருந்ததால் நடராஜர் சிலையை செய்ய எங்களை தேர்வு செய்தனர்.

* ஜி-20 மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்டுள்ள நடராஜர் சிலையின் சிறப்பம்சங்கள் என்ன?

இந்த நடராஜர் சிலை ஐம்பொன்களால் செய்யப்பட்ட சிலை அல்ல. அஷ்டதாதுக்களை கொண்டு செய்யப்பட்டது. அஷ்டதாது என்ற வார்த்தை சமஸ்கிருதமாகும். அஷ்ட என்றால் எட்டு. தாது என்றால் உலோகம். செம்பு, பித்தளை, இரும்பு, ஈயம், தங்கம், வெள்ளி, வெள்ளீயம், பாதரசம் ஆகிய 8 உலோகங்களைக் கொண்ட அஷ்ட தாதுக்களால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த உலோகமானது, கடினமானது. கைகளால் வேலை செய்வது மிகவும் சிரமம். கைகளில் வலி ஏற்படும். தைலங்களை தேய்த்துக் கொண்டும், ஸ்பிரே அடித்துக்கொண்டும் வேலை செய்தோம். இந்த உலோகத்தால் சிலைகள் செய்யும்போது தேய்மானம் இருக்காது. பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எந்த சேதமும் இல்லாமல் இருக்கும்.

 

* நீள, அகலம், எடை போன்றவற்றை குறிப்பிடுங்கள்?

இந்த சிலை 28 அடி உயரம், 21 அடி அகலம், 18 டன் எடை கொண்டது.

* அஷ்ட தாதுக்களில் சிலை வடிவமைப்பது இது முதல் முறையா? இல்லை, ஏற்கனவே அஷ்ட தாதுக்களில் சிலை வடித்திருக்கிறீர்களா?

நாங்கள் பஞ்சலோக சிலைகளை தான் அதிக அளவில் செய்துள்ளோம். மேற்கு வங்காள மாநிலம் மாயப்பூரில் அகில இந்திய கிருஷ்ண பக்தர்கள் சங்கத்தின் தலைமையிடத்திற்கு, 15 டன்னில் 5 சிலைகளை அஷ்ட தாதுக்களால் செய்து அனுப்பி இருக்கிறோம். அதற்கு பிறகு 2-வது முறையாக இப்போதுதான் புதுடெல்லியில் நடக்கும் ஜி-20 மாநாட்டிற்காக அஷ்ட தாதுக்களால் நடராஜர் சிலை செய்துள்ளோம். எங்களுடைய பங்களிப்பு, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நினைவுச் சின்னமாக அமைந்துள்ளது.

* நடராஜர் சிலை உருவாக்கும் பணி எவ்வளவு நாட்களாக நடைபெற்றது?

நடராஜர் சிலை மாதிரியை இறுதி செய்த பிறகு அஷ்ட தாதுக்களை உருக்கி, சிலையை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டோம். நடராஜர் சிலை செய்யும் பணி 6 மாதங்கள் நடைபெற்றன.

* சிலைகள் செய்தபோது சுவார சியமான சம்பவங்கள் ஏதாவது நடந்ததா?

நடராஜர் சிலையின் மாதிரி வடிவத்தை பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் அப்ரூவல் செய்து கொடுத்தார். 2 மணி நேரம் சிலையை பார்த்து கால், கைகளின் நடன அசைவுகளில் சில திருத்தங்களை சொன்னார். பின்னர் 4, 5 பரத முத்திரையுடன் பரதம் ஆடி, சிலை வடிவமைப்பு பணிக்காக மண் எடுத்து கொடுத்து தொடங்கி வைத்தது,பரதத்தில் எந்த குறையும் இருக்கக்கூடாது என அவர் ஒப்புதல் கொடுத்து, எங்களை பாராட்டியது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு.

இந்த சிலை சோழர் கால பாணியாகும். வார்ப்படம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வந்தது மிக்க மகிழ்ச்சி. குறுகிய காலத்தில் வார்ப்படம் அமையவில்லை என்றால் இந்த சிலையை மாநாட்டிற்கு தயார் செய்ய முடிந்திருக்காது.

* சிலையை செய்ய ஏதாவது நிபந்தனை விதித்தார்களா?

5 ஆண்டுகளில் 300 ஆர்டர்களை எடுத்து ஜி.எஸ்.டி.யுடன் வரி செலுத்தி இருக்க வேண்டும். இவற்றில் 10 ஆர்டர்களில் 10 அடிக்கு மேல் சிலைகள் செய்திருக்க வேண்டும். இந்த தகுதிகள் இருந்ததுடன் வரைபடமும் பிடித்து இருந்ததால் சிலை செய்யும் பணி எங்களுக்கு கிடைத்தது.

* நீங்கள் செய்த சிலை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நிறுவப்பட்டது பற்றி?

எங்கள் தந்தை, ஏற்கனவே ஜனாதிபதி விருது பெற்றவர். அவரை தொடர்ந்து, எங்களுக்கும் பெருமைக்குரிய வாய்ப்பு கிடைத்தது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது கலை, கலாசாரத்திற்கான ஒரு சின்னமாகவும், தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகவும் அமையும் என்று நம்புகிறேன்.

* எந்த நடராஜர் சிலையை மாடலாக கொண்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டது?

தஞ்சை பெரிய கோவில், கோனேரிராஜபுரத்தில் இருக்கும் கோவிலில் உள்ள 6 அடி உயர நடராஜர் சிலையின் அமைப்பை வைத்து தான் இந்த சிலையை செய்து இருக்கிறோம். இந்த சிலைகளின் பிரதிபலிப்பு தான் டெல்லியில் உள்ள நடராஜர் சிலை. பிரிந்த ஜடையுடன் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவ அம்சமான கங்கையும், சந்திரனும் அமையப்பெற்றுள்ளது. வழக்கமான நடராஜர் சிலையின் திருவாச்சியில் 27 சுடர்கள் இருக்கும். ஆனால் இந்த நடராஜர் சிலையில் 51 சுடர்கள் உள்ளன. இதுவரை 12 அடி உயர சிலைகளை செய்து இருந்தோம். முதன்முறையாக 28 அடி உயர சிலையை செய்து இருக்கிறோம். இது உலகத்திலேயே மிகப்பெரிய நடராஜர் சிலையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்