தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை... பிளாஸ்டிக்கிற்கு எதிராக சாகசப் பயணம்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவரான இவர், ‘ஸ்டாண்ட் அப் பேடலிங்’ விளையாட்டிலும் அசத்துவதுடன், அதையே பிளாஸ்டிக்குக்கு எதிரான விழிப்புணர்வு கருவியாக பயன்படுத்தி வருகிறார். அதுபற்றி சதீஷ் நம்முடன் பகிர்ந்து கொண்டவை...;

Update: 2023-04-02 11:40 GMT

கடலில் ஸ்டாண்ட் அப் பேடலிங் செய்தபடியே இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து புறப்பட்டு இலங்கையின் தலைமன்னார் பகுதியை அடைந்து மீண்டும் தனுஷ்கோடி பகுதிக்கு வந்தடைந்திருக்கிறார், சதீஷ் குமார். இந்த சாகசப் பயணம், சாதனை பயணமாக மாறி இருப்பதுடன், பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பயணமாகவும் மாறி இருக்கிறது.

ஸ்டாண்ட் அப் பேடலிங் விளையாட்டு பற்றி கூறுங்கள்?

அலைச்சறுக்கு விளையாட்டின் பிறப்பிடமான ஹவாய் தீவில் இந்த விளையாட்டும் பிறந்தது. அலைச்சறுக்கில் ஈடுபடுவதற்கு முன்பாக பலகை மீது அமர்ந்து துடுப்பு போடுவார்கள். அதுவே, பலகை மீது நின்று கொண்டு துடுப்பு போடுவது, ஸ்டாண்ட் அப் பேடலிங் விளையாட்டாக மாறி, உலகெங்கிலும் பரவ தொடங்கியது. அதாவது இந்த விளையாட்டை பொறுத்தமட்டில், அலைச்சறுக்கு பலகையை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும் பலகை மீது நின்று, துடுப்பு போட்டு முன்னேற வேண்டும். அதுதான், ஸ்டாண்ட் அப் பேடலிங்.

உங்களுக்கு எப்படி அறிமுகமானது?

சிறுவயதில் இருந்தே நீர் விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். கல்லூரி காலத்திலேயே என்.சி.சி.யில் பயிற்சி பெற்று, படகு செலுத்தும் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக, கல்லூரி படிப்பின்போது புதுச்சேரியில் தங்கியிருந்த வெளிநாட்டு நண்பர்களின் மூலம் அலைச்சறுக்கு விளையாட்டையும், 'ஸ்டாண்ட் அப்' பேடலிங் விளையாட்டையும் கற்றுக்கொண்டேன்.

போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டா?

ஆம்...! 2018-ம் ஆண்டு நார்வேயில் இருக்கும் 230 கிலோமீட்டர் நீளமான எப்-ஜாட்ஸ் என்ற ஆழமான கடலை, 5 நாட்களில் கடந்தேன். அதே ஆண்டு ஆஸ்திரியாவில் நடந்த ரெட் பேடல் டிராகன் வேல்ட் சாம்பியன்ஷிப் போட்டியில், முதல் இந்தியனாக பங்கேற்று 9-வது இடத்தை பிடித்தேன். 2019-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடந்த மற்றொரு போட்டியில் 5-வது இடத்தை நிறைவு செய்தேன். 39 நாடுகள் பங்கேற்ற அந்த போட்டியில், சிறு விபத்து காரணமாக 2-ம் இடத்தை தவறவிட்டேன். அதே ஆண்டு சென்னைக்கு அடுத்த கோவளத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்றேன். 2021-ம் ஆண்டு ஹங்கேரியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இந்தியனாக பங்கேற்று, 60-வது இடத்தை நிறைவு செய்தேன்.

இந்தியாவில் இருந்து இலங்கை வரை பேடலிங் செய்யும் ஆசை எப்படி ஏற்பட்டது?

நான் மீனவ பின்னணியை சேர்ந்தவன் என்பதால், கடலை பிளாஸ்டிக் குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்துக் கொள்ளும் விழிப்புணர்வை, 2016-ம் ஆண்டிலிருந்து மேற்கொண்டு வருகிறேன். இதற்காக, பல விழிப்புணர்வு பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். பக்கிங்ஹாம் கால்வாயில் பேடலிங் செய்து குப்பைகளை அகற்றியது, புதுச்சேரி தொடங்கி சென்னை கோவளம் பகுதி வரை பேடலிங் செய்தபடியே பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்தது... என கடலில் சேரும் குப்பைகளுக்கு எதிராக நிறைய விழிப்புணர்வு பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகவே, இந்தியாவின் தனுஷ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் பகுதி வரை பேடலிங் செய்தபடியே, விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டேன்.

இந்த பயணத்தை எப்போது திட்டமிட்டீர்கள்?

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே திட்டமிட்டேன். இருப்பினும் இரு நாடுகளின் அனுமதி பெறுவதில் நிறைய சிக்கல் நிலவியதால், பயணத்திட்டம் கொஞ்சம் தாமதமானது.

என்னென்ன சவால்களை எதிர்கொண்டீர்கள்?

இருநாடுகளின் அனுமதியை பெறுவதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதற்கு அடுத்தபடியாக, இயற்கையையும், கடல் பரப்பையும் கையாள்வதும் சவாலான ஒன்றாக இருந்தது. ஏனெனில், இந்தியாவின் தனுஷ்கோடி பகுதியில் இருந்து, பேடலிங் செய்ய ஆரம்பித்தபோது, கடலின் நீரோட்டமும், காற்று வீசும் திசையும் எனக்கு எதிராக திரும்பிவிட்டன. அதனால் எதிர் காற்றையும், எதிர் நீரோட்டத்தையும் சமாளித்தபடி... துடுப்பு போட்டேன். இதனால் வெகு விரைவாக கடக்க வேண்டிய இலக்கை, 6 மணி நேரமாக போராடி கடந்தேன். இருப்பினும் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி திரும்பும் பயணம் கொஞ்சம் சுலபமாக இருந்தது. அதனால், 4 மணிநேரத்திலேயே தனுஷ்கோடி வந்துவிட்டேன்.

பாதுகாப்பு விஷயங்கள் எப்படி திட்டமிடப்பட்டிருந்தன?

இந்திய அரசின் வழிகாட்டுதல்படி, ஒரு மீட்பு படகு என்னுடைய பயணம் முழுக்க என்னை கண்காணித்தபடியே இருந்தது. மேலும், ஸ்டாண்ட் அப் பேடலிங் முறையில் இந்தியாவில் இருந்து இலங்கை வரை கடப்பது இதுவே முதல் முறை என்பதால், அதை சாதனையாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தேன். அதை கண்காணிக்கவும், சிறப்பு நடுவர்கள் வந்திருந்தனர். அவர்கள் மீட்பு படகில் இருந்தபடியே, என்னை கண்காணித்தனர். என்னை வழிநடத்தினர்.

இலங்கை கடற்படையின் ஒத்துழைப்பு கிடைத்ததா?

இந்திய கடல் எல்லையில் இருந்து சர்வதேச எல்லைக்குள் சென்றதுமே, இலங்கை கடற்படையினர் என்னை வரவேற்க ஆயத்தமாகினர். அவர்கள் என்னை அன்பாக வழிநடத்தி, சிறப்பாக கவனித்து கொண்டனர். தலைமன்னார் பகுதியில் படகில் இரவு தங்கியிருந்தபோதும், எனக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.

இந்த பயணத்தின் போது பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்தீர்களா?

ஆம்..! சாதனை பயணம் ஒருபக்கம் இருந்தாலும், இந்த பயணத்தின்போது என் கண்ணில் பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை பத்திரமாக சேகரித்து கொண்டேன்.

இதுபோன்ற புதுமையான சாகசப் பயணங்களில் ஆர்வமாக இருக்கிறீர்களா?

ஆம்...! கொல்கத்தா முதல் வங்காள தேசம் வரையிலும் ஸ்டாண்ட் அப் பேடலிங்கில் விழிப்புணர்வு பயணம் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். மேலும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வரையிலும் பயணம் செய்யும் திட்டமும் இருக்கிறது. ஆசை மட்டுமல்ல, அதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய வேண்டி இருப்பதால், நிதானமாக திட்டமிட்டு வருகிறேன். மேலும் விளையாட்டு நோக்கிலும் நிறைய ஆசை இருக்கிறது. ஸ்டாண்ட் அப் பேடலிங் விளையாட்டை, எஸ்.யூ.பி. மரினா என்ற குழு மூலமாக இளம் வயதினருக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன். இந்த விளையாட்டு, அடுத்த ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்பட இருப்பதால், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஆசையும் இருக்கிறது.

இந்த சாகசப் பயணத்தின் நோக்கம் என்ன ?

கடல் நமக்கானது மட்டுமல்ல, கடலில் எண்ணற்ற உயிரினங்கள் உயிர்வாழ்கின்றன. கிட்டத்தட்ட அது பிரமாண்ட தனி உலகம். நம்முடைய சிறு தவறான செயல்பாட்டினால், அந்த அதிசய உலகம் வீணாகி விடக்கூடாது என்பைதத்தான், இந்த பயணத்தின் வழியாக வலியுறுத்துகிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்