மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் கால்பந்து உலகம்..!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 23 ஏக்கர் பரப்பளவில், ரூ.100 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத்தரத்திலான கால்பந்தாட்ட மைதானம் மற்றும் அகாெடமி (பயிற்சி மையம்) திறக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-02 08:26 GMT

கால்பந்தாட்டம், கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கல்வி முறையியலுடன் இங்கு மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான வகுப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்துள்ள நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போன்று 23 ஏக்கர் பரப்பளவில், ரூ.100 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத்தரத்திலான கால்பந்தாட்ட மைதானம் மற்றும் அகாெடமி (பயிற்சி மையம்) திறக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பு மற்றும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டமைப்பு ஆகியவற்றின் எப்.சி.மெட்ராஸ் என்ற பெயரில் இவ்வளாகம், உருவாக்கப்பட்டிருக்கிறது. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இவ்வளாகத்தில் இரவு நேரத்திலும் ஜொலிக்கும் ஒளிவிளக்குகளின் வெளிச்சத்தில் விளையாடுவதற்கான அழகிய புல்வெளிகளுடன் கால்பந்தாட்ட மைதானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த கால்பந்தாட்ட மைதானம் கிழக்காசியாவின் முதல் ஹைபிரிட் மைதானம் மற்றும் இந்திய அளவில் பரந்துவிரிந்த மிகப்பிரம்மாண்டமான மைதானம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

இங்கு உடல்வலுவை மேம்படுத்தி உடற்தகுதியைப் பேணுவதற்கான உடற்பயிற்சி மையம், வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் காயங் களிலிருந்து மீண்டு குணமடைவதற்கான சிகிச்சை மையங்கள், சர்வதேச தரத்தில் ஒரு உள்ளரங்க புட்ஸ்சால் மைதானம், பறந்து விரிந்த நீச்சல் குளம், விசாலமான கார் பார்க்கிங் வசதி, நவீன சமையலறை மற்றும் உணவுக்கூடங்களுடன் கூடிய தங்கும் விடுதி, திறந்த நிலை பள்ளி கல்விக்கான தேசிய நிறுவனத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஒரு மாற்றுவழி கற்றல் மையம் ஆகிய பல்வேறு சிறப்பு வசதிகளும் இவ்வளாகத்தில் உள்ளது.

கால்பந்தாட்டம், கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கல்வி முறையியலுடன் இங்கு மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான வகுப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கால்பந்து அகாெடமியில் சேருபவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எப்.சி. மெட்ராஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கால்பந்து மைதானம் மற்றும் அகாெடமிக்கு, விலங்கினமான அணில்-ஐ மையப்படுத்தி லோகோ உருவாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அணில் சுறுசுறுப்பாக உள்ள ஒரு விலங்கினமாகும். அதேபோல் கால்பந்தாட்ட பயிற்சியாளர்களும், வீரர்களும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்தினை மையப்படுத்தி இந்த லோகோ உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கால்பந்து மைதான வளாகத்தில் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளும் விரைவில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய கால்பந்து அகாடமி மற்றும் மைதானம் திறக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர்கள் ஆர். அஸ்வின், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முன்னணி கால் பந்தாட்ட நட்சத்திரங்கள், வீரர்கள் பலர் வீடியோ வழியாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திறப்பு விழா நிகழ்ச்சியில் எப்.சி. மெட்ராஸ் கால்பந்து அகாடமி நிறுவனர் கிரீஷ் மாத்ருபூதம், கால்பந்து விளையாட்டு இயக்குனர் தனஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்