குழந்தைகளின் நினைவாற்றலை வளப்படுத்துபவர்..!
‘‘இந்த காலத்து குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட்டானவர்கள். கற்றுக்கொடுக்கும் எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஸ்மார்ட்டான குழந்தைகளுக்கும், சில ஸ்மார்ட்டான பயிற்சிகள் தேவை. குறிப்பாக, கவனம் சிதறாமல் இருக்கவும், நினைவாற்றலை அதிகரிக்க செய்யவும் ஒருசில மன பயிற்சிகள் தேவைப்படுகிறது’’ என்று பக்குவமாக பேச ஆரம்பிக்கிறார், திரேசா.;
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவரான இவர், எம்.எஸ்சி சைகாலஜி படித்திருக்கிறார். கூடவே, குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது குறித்தும், கவனிப்பு திறனை மேம்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து வருகிறார். இதுசம்பந்தமான ஆய்வுகளில் கடந்த 10 வருடங்களாக தன்னை ஈடுபடுத்தி கொண்டிருப்பதோடு, இதற்காக தகுந்த வல்லுனர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், நினைவாற்றல் மேம்பாட்டு சிறப்பு பயிற்சிகளை உருவாக்கி அதை ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார். குறிப்பாக, அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் மீது அதீத அக்கறை காட்டுவதோடு, அவர்களை சாதனையாளர்களாக மாற்ற முயற்சிக்கிறார்.
''சாதாரண மனிதர்கள், சாதனையாளர்களாக மாற அசாத்திய புத்திக்கூர்மை அவசியமாகிறது. புத்திக்கூர்மைக்கு, கவனிப்பு திறனும், சிறப்பான நினைவாற்றலும் தேவை. நம் குழந்தைகளிடம் இவை இரண்டையும் மேம்படுத்திவிட்டால், அவர்கள் இயல்பானவர்களைவிட சிறப்பாக செயல்பட்டு ஸ்மார்ட்டானவர்களாக மாறிவிடுவார்கள்'' என்று கூறுபவர், சிறுசிறு பயிற்சி மற்றும் முயற்சிகளினால் குழந்தைகளின் நினைவாற்றலையும், கவனிப்பு திறனையும் மேம்படுத்த முடியும் என நம்பிக்கை கொடுக்கிறார்.
''5 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள், தொடர்ச்சியாக ஒருசில பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, அது அவர்களுடைய நினைவாற்றல் மற்றும் கவனிப்பு திறன் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன. பல வருடங்களாக, குழந்தைகளுடன் பேசி பழகி ஆய்வு மேற்கொண்டதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான், இதை உறுதிப்படுத்தினோம்.
நினைவாற்றல் அதிகரிப்பது மட்டுமின்றி குழந்தைகளின் கவனமும் எந்த பக்கமும் சிதறாமல், ஒரே இலக்கில் நிலைநிறுத்தப்பட்டு, கற்றலும்-புரிதலும் அதிகரிக்கிறது. இவ்வளவு நன்மை பயக்கும் பயிற்சிகளைத்தான், நான் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன்'' என்பவர், இத்தகைய பயிற்சிகளை குழந்தைகள் விரும்பும் வகையில் மாற்றி, அதை சுலபமான வழிகளில் கொண்டு சேர்க்கிறார்.
''கல்வி, வகுப்பு தேர்வுகள்.... என ஏற்கனவே 'ஸ்டிரெஸ்' மனநிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு, இந்த பயிற்சிகள் சுகமான அனுபவமாக இருக்கவேண்டுமே தவிர, கூடுதல் சுமையாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான், அவர்கள் விரும்பும் வகையிலான பயிற்சி முறைகளை வடிவமைத்திருக்கிறோம்.
எழுத்து பயிற்சிகள், ரூபிக் கியூப் விளையாட்டுகள், சிந்திக்க தூண்டும் கேள்வி பதில்கள், புதிர் விளையாட்டுகள், யோகா-தியானம்... என பயிற்சி அனுபவத்தை விளையாட்டு அனுபவமாக்கி, குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கிறேன். என்னுடைய பயிற்சிகளை குழந்தைகளும் விரும்புகிறார்கள்'' என்றவர், இந்த பயிற்சிகள், அவர்களை ஆராய்ச்சியாளர்களாகவும், சிறந்த மனிதர்களாகவும் மாற்றும் என்கிறார்.
''நினைவாற்றல் பயிற்சி குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்வார்கள். தங்களுடைய முழு திறனையும் உணர்ந்திருப்பார்கள். சமூக உறவிலும், குடும்ப உறவிலும் ஈடுபாடு கொண்டவர்களாக வளர்வார்கள். பிரச்சினைகளை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வார்கள். இப்படிப்பட்ட பயிற்சிகள்தான், இந்த காலத்துக் குழந்தைகளுக்கு அதிகம் தேவைப்படுகிறது'' என்பவர் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளித்திருப்பதாக கூறினார்.
''சமூகத்திற்கு ஏதாவது ஒருவகையில் நாம் பயன்பட வேண்டும். அந்த குறிக்கோளில்தான் இயங்கி வருகிறேன். குழந்தைகளுக்கான நினைவாற்றல் பயிற்சிகளை தாண்டி, என்.ஜி.ஓ. ஒன்றை தொடங்கி, அதன்மூலம் ஏழை-எளிய குழந்தைகளுக்கு தேவையான 'சாப்ட் ஸ்கில்' பயிற்சிகள், 'பெர்சனாலிட்டி டெவலப்மெண்ட்' பயிற்சிகளை இலவசமாகவே வழங்கும் ஆசையும் இருக்கிறது. இவற்றுக்கு முன்பாக, நம்முடைய சமூகத்தில் எல்லா குழந்தைகளையும் சிறப்பான பயிற்சிகளினால் தலை சிறந்தவர்களாக மாற்றும் இலக்கும் இருக்கிறது. அதை நோக்கியே பயணிக்கிறேன்'' என்பவர், இயல்பான குழந்தைகளுக்கு மட்டுமின்றி, ஆட்டிசம் மற்றும் ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளுக்கும் பயிற்சி வழங்கி அவர்களது நினைவாற்றல் மற்றும் புத்திக்கூர்மையை மேம்படுத்த முயல்கிறார்.