அரசுப்பள்ளி குழந்தைகளிடம்... ஓங்கி ஒலிக்கும் 'கல்வி ரேடியோ'..!
கொரோனா காலத்தில், உலகமே வீட்டிற்குள் முடங்கியிருந்தபோது, பள்ளி மாணவர்களிடம் கல்வியை கொண்டு சேர்க்க, தொடக்க கல்வி ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.;
நேரடி வகுப்புகளுக்கு மாற்றாக, வீட்டில் இருந்தபடியே கல்வி புகட்டும் வழிமுறைகளை தேடி கண்டுபிடித்தனர். கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் கல்வி... என நவீன தொழில்நுட்பத்தை மிக சிறப்பாக கையாண்டதோடு, ஆன்லைன் ரேடியோ வழியாகவும் கல்வி பயிற்றுவித்தனர்.
ஊரடங்கு சூழலுக்காக ஆரம்பிக்கப்பட்ட பல ஆன்லைன் கல்வி முறைகள், இப்போதும் தொடர்கிறது. கூடுதலாக, புதுமையான அப்டேட்களை கொண்டு வந்து, கல்வி முறைக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
அந்தவகையில், ஒட்டுமொத்த தமிழகத்திற்கு என ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன் கல்வி ரேடியோவை, இப்போது மாவட்டம் வாரியாக பிரித்து, அந்தந்த மாவட்டம் சார்ந்த பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்களையும், மாணவ-மாணவிகளின் தனித்திறமைகளையும், ஆன்லைன் கல்வி ரேடியோவில் பதிவேற்றம் செய்கிறார்கள். இப்படியொரு முயற்சிக்கு அடித்தளமிட்டவர் கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 4-ம் வகுப்பு ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா.
''பள்ளிக்கு வர முடியாத மாணவர்களுக்கு எப்படி கல்வியை போதிப்பது?'' என யோசித்தபோது ஆசிரியர் கார்த்திக் ராஜாவின் சிந்தையில் உருவானதுதான் ஆன்லைன் கல்வி 'ரேடியோ' (kalviradio.com). அந்த ரேடியோ பற்றிய தகவல்கள் வியப்பையும், ஆச்சரியத்தையும் தருகின்றன நமக்கு. அதனை அவரே கூற கேட்போம்.
''கொரோனா காலகட்டத்தில் எனது வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க முடியாத நிலை உருவானது. அப்போது வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போன்று பாடங்களை ஆடியோ வடிவில் ரெக்கார்டு செய்து அதனை மாணவர்களுக்கு அனுப்பி வந்தேன்.
மாணவர்களும் அதனை கேட்டு புரிந்து கொண்டு, மனப்பாடமாக ஒப்புவிப்பதை எனக்கு அனுப்பி வைத்தனர். இதையே எல்லா மாணவர்களும் பயன்படுத்தலாம் என நினைத்து, கல்வி ரேடியோ என்ற வலைத்தளத்தை உருவாக்கினோம். அதில் அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வ ஆசிரியர்களை முதலில் பங்கேற்க செய்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்று உருவான ஆன்லைன் கல்வி ரேடியோவானது இன்று பல நிலைகளை கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது'' என்றார்.
இவர் எம்.எஸ்.சி., பி.எட். முடித்துள்ளார். இவருடைய சொந்த ஊர் புவனகிரி. மனைவி சுவாதி. சபரிசுவரா, சர்வேஸ்வரா ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இவர், கடந்த 2012-ம் ஆண்டு நடந்த முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசுப் பணியில் ஆசிரியராக சேர்ந்தார். கொரோனா காலத்தில் கற்றல் பயிற்சியை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வழங்கிய கார்த்திக்ராஜாவை பாராட்டி தலைமை செயலாளராக இருந்தபோது இறையன்பு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆசிரியர் கார்த்திக் ராஜா தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார்.
''இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்த பெருமை, ஆன்லைன் ரேடியோவோடு இணைந்திருக்கும் மற்ற ஆசிரியர்களுக்குதான் சேரும்.
தமிழகம் முழுக்க நிறைய ஆசிரியர்கள், அவர்களாகவே முன்வந்து பாடம் நடத்தும் ஆடியோக்களை பதிவேற்றி, கல்வி கற்பித்தலை எளிமையாக்கி உள்ளனர்.
பாடம் கற்பித்தல், மாணவர்களின் ஒப்புவித்தல், பொது தகவல்கள் என லட்சக் கணக்கிலான ஆடியோ பதிவுகள், இந்த இணையதளத்தில் இருக்கிறது.
நிறைய ஆசிரியர்கள், அவர்களாகவே நிறைய புத்தாக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த முத்துமாரி என்ற ஆசிரியை, சேலம் மாவட்டத்திற்கு என பிரத்யேக இணையதளத்தை உருவாக்கி அதில் அந்த மாவட்ட பள்ளிகள் சார்ந்த தகவல்களை பதிவேற்றி வருகிறார். இது வரவேற்கத்தக்க விஷயமாகும்'' என்ற தகவலை பகிர்ந்து கொண்டார்.
இதுதொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்ள முத்துமாரியிடம் பேசினோம். அவர் கூறியவை...
''கார்த்தி ராஜா உருவாக்கிய ஆன்லைன் கல்வி ரேடியோவானது, எல்லா மாவட்டங்களிலும் ஆயிரம் தன்னார்வ ஆசிரியர்களுடன் (இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள்) செயல்பட்டு வருகிறது.
இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்று வருகின்றனர். சுமார் 2½ லட்சம் ஆடியோக்கள் இதுவரை அந்த வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்படியாக தமிழ்நாடு முழுவதும் இருந்து மாணவ-மாணவிகள் பங்கேற்பதை விட சேலம் மாவட்டத்துக்கு என்று தனி வலைத்தள பக்கத்தை உருவாக்கினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றியது. இதுதொடர்பாக ஆன்லைன் கல்வி ரேடியோவை முன்னெடுத்த கார்த்திக் ராஜா, எங்களது சேலம் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், விரிவுரையாளர் கேசவன் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்தபோது, அதனை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் என முடிவு எடுத்தோம்.
அதன்படி சேலம் மாவட்டத்துக்கு என்று ஆன்லைன் கல்வி ரேடியோவில் தனி வலைத்தளம் அதாவது 'டி.ஐ.இ.டி. சேலம் இணையவழிக்கல்வி' என்ற ஒன்றை உருவாக்கினோம்.
தனி ஒரு மாவட்டத்துக்கு என்று தமிழ்நாட்டிலேயே சேலம் மாவட்டத்துக்கு மட்டும்தான் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 21 ஒன்றியங்களில் இந்த வலைத்தளம் மூலம் மாணவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்தி வருகின்றனர்'' என்கிறார் நெகிழ்ச்சியுடன் ஆசிரியை முத்துமாரி.
இவர், ஆன்லைன் கல்வி ரேடியோவில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவருடைய சொந்த ஊர் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர். கணவர் செந்தில்கண்ணன், மகள் ஸ்ரீகா 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் விகாஷ் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். எம்.ஏ., பி.எட். முடித்துள்ள இவர், கடந்த 2009-ம் ஆண்டில் டிசம்பர் மாதம் சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் அம்மன்நகர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். தற்போது ரெட்டிமணியக்காரனூர் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் ஆன்லைன் ரேடியோவின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார்...
''இதில் வகுப்பு பாடங்கள் மட்டும் அல்லாமல் திருக்குறள், பழமொழிகள், கதைகள், பாடல்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கையை வளர்க்கும் சொற்பொழிவு உள்ளிட்டவையும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனை எந்த நேரத்திலும் மாணவர்கள் கேட்டு பயன்பெற முடியும்.
ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவ-மாணவிகளும் பாடம் தொடர்பான ஆடியோக்களை பேசி பதிவேற்றுவதால், கூச்சம்-தயக்கம் இல்லாமல் போய்விடும். தாங்கள் பேசிய ஆடியோக்களை மாணவர்கள் மீண்டும் கேட்கும்போது எழுத்துக்களின் உச்சரிப்பு தவறுதலாக இருந்தால் அதனை திருத்திக் கொள்ள முடிகிறது. மேலும் மாணவர்கள் தங்களுக்குள் போட்டிப் போட்டுக்கொண்டு, படிக்கவும், ஒப்பிக்கவும், பொது தகவல்களை ரேடியோவில் பகிர்ந்து கொள்ளவும், ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டியாக இது மாறியிருக்கிறது'' என்று பொறுப்பாகப் பேசும் முத்துமாரி, மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்க, வேறுவிதமான புதுமைகளை புகுத்துவதிலும் ஆர்வமாக இருக்கிறார்.