மணல் பாடுமா..?

Update:2023-08-05 16:22 IST

கடற்கரை மணலில் அமர்ந்து சுண்டல் சாப்பிட்டபடியே செல்போனில் பாடல் கேட்டிருக்கிறோம். ஆனால், கடற்கரை மணலே பாடினால் எப்படியிருக்கும்? ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரைப் பகுதியிலுள்ள ஈக் தீவில் இந்த அதிசயம் நடக்கிறது.

ஆம், இதன் வெண்மணல்களின் மீது நடந்தாலோ, தொட்டாலோ இன்னிசை ஒலிகள் உண்டாகின்றன. மெல்லிசையில் தொடங்கி பல ஸ்வரங்களில் இன்னிசை பொழிகிறது மணல்.

அம்மணலின் வடிவமைப்பில் உள்ள விசேஷமே இந்த அதிசயத்துக்குக் காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

பொதுவாக மணல்களில் இப்படி இசை பிறக்க வேண்டுமென்றால், அதற்கு மூன்று தகுதிகள் இருக்க வேண்டும்.

ஒன்று, ஒவ்வொரு மணல் துகளும் உருண்டையாக, 0.1 முதல் 0.5 மி.மீ வரையே விட்டம் உள்ளதாக இருக்க வேண்டும்.

இரண்டு, அந்த மணலில் குறிப்பிட்ட அளவில் சிலிகா இருக்க வேண்டும். மூன்று, மணலில் ஈரத்தன்மை இல்லாதிருக்க வேண்டும். இந்த மூன்று தகுதிகளும் அமையப் பெற்ற எல்லா மணலும் இசை பாடும் என்பதே விஞ்ஞானிகள் தரும் தகவல்.

இப்படிப்பட்ட மணல் காற்றால் அசையும்போதும் மனிதர்கள் அவற்றைக் கையாளும்போதும் அதிர்வுகள் உண்டாகி, இசையொலி எழுகிறது. ஈக் கடற்கரை மட்டுமல்லாமல், சில பாலைவனங்களிலும், வேறு சில கடற்கரைகளிலும் இப்படி பாடும் மணல் உள்ளனவாம்.

Tags:    

மேலும் செய்திகள்