புல் மெட்டல் அல்கெமிஸ்ட்: பிரதர்வுட் சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

Update:2023-04-27 20:25 IST

அல்கெமி என்னும் ரசவாதம் இயற்கை தத்துவத்தின் பழமையான கோட்பாடு ஆகும். ரசவாதம் என்பது ஒரு பொருளுக்கு ஈடாக மற்றொன்றை உருமாற்றுவது. நீண்ட ஆயுள், செல்வம், கடவுள்தன்மை ஆகியவற்றை ரசவாதிகள் இலக்காக கொண்டனர்.

பெண் 'மங்கா' கலைஞர் ஹிரோமு அரகாவாவின் படைப்பை தழுவிய இந்த அனிமேஷன் தொடர், ரசவாத சகோதரர்களை பற்றியது.

சிறுவயதில் தாயை இழந்த எல்ரிக் சகோதரர்கள் இறந்துபோன அம்மாவை உயிர்ப்பிக்க ரசவாதத்தை பயன்படுத்துகிறார்கள். முயற்சி வீணாக அண்ணன் எட்வர்ட் தன் கை, கால்களை இழக்கிறான். தம்பி அல்போன்ஸ் தன் முழு உடலையும் தியாகம் செய்கிறான். அவன் ஆன்மா மட்டும் கவச மனிதனுடன் பிணைக்கப்படுகிறது.

இழந்ததை மீட்கும் சக்தி தத்துவக்கல் என்னும் மர்ம பொருளுக்கு இருப்பதை அவர்கள் அறிகிறார்கள். அதனை தேடும் முயற்சியில் எல்ரிக் சகோதரர்கள் பயணத்தை தொடங்குகிறார்கள்.

அப்போது 'ஹோமோக்குளி' என்னும் இயற்கைக்கு முரணான ஜந்துகளை எதிர்க்க நேரிடுகிறது. அவற்றுக்கு பின்னால் அவர்களின் தந்தை இருக்கிறார் என தெரியும்போது கதை வேகமெடுக்கிறது. எல்ரிக் சகோதரர்கள் தாங்கள் இழந்த உடல் பாகங்களை திரும்ப பெற்றார்களா? 'ஹோமோக்குளி' எவ்வாறு உருவாகிறது. தந்தையின் கதை என்ன? என்பதே இதன் மையக்கரு.

மதம், கடவுள், 7 கொடும்பாவங்கள், பகுத்தறிவு ஆகியவை குறித்து இதில் கையாளப்பட்ட விதம் பிரமிக்கத்தக்கது. தொடரில் வரும் ஆண் கதாபாத்திரங்களுக்கு நிகராக பெண் பாத்திரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ராய் மஸ்டங், ஸ்கார், லிங்யோவ், மேஸ் ஹூயூக்ஸ், வின்ரே, இசுமி, ஒலிவியர் போன்ற வலுவான பாத்திரங்கள் மனதை விட்டு நீங்காதவையாக மாறும்.

ஒரு நல்ல படைப்பை பார்த்த திருப்தியை இது தருகிறது.

அம் ஐ நெக்ஸ்ட்

ஜீ5 தளத்தின் இந்திய திரைப்படம் அம் ஐ நெக்ஸ்ட். 14 வயது சிறுமி ஹனி பெற்றோருடன் காஷ்மீரில் வாழ்கிறாள். ஒருநாள் பள்ளியில் திடீரென அவள் மயங்கி விழுகிறாள். டாக்டர்கள் சோதனையில் அவள் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிகிறது. அதிர்ச்சி அடையும் பெற்றோர் நடத்தையில் சந்தேகப்படுகிறார்கள். பள்ளி செல்ல தடை விதிக்கப்படுகிறது. சமுதாயத்தின் கோரமான பார்வை ஹனியை உலுக்குகிறது. மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். அப்போது தனது டியூசன் ஆசிரியரால் தான் சீரழிக்கப்பட்டதை ஹனி தெரிவிக்கிறாள்.

கருவை கலைக்க ஹனியின் தாய் நினைக்கிறார். சட்டத்தில் அதற்கான வழி இல்லை. இதனால் நீதிகேட்டு கோர்ட்டு வாசலை அவள் பெற்றோர் தட்டுகிறார்கள். இறுதியில் கருக்கலைக்கப்பட்டதா? சிறுமியின் நிலை என்ன ஆனது? என்பதே இதன் கதை.

உண்மை சம்பவங்களை கொண்டு இதன் கதையை கஸ்மி மற்றும் கிருத்திகா எழுதி உள்ளனர். கதை உணர்வுபூர்வமாக சொல்லப்பட்டுள்ளது.

தந்தை-மகள் உறவு சித்தரிக்கப்பட்ட விதம் யதார்த்தம். கோர்ட்டு காட்சிகள் உள்பட கதையை நாடகத்தன்மை இன்றி இயல்பாக எடுத்துள்ளனர். ஹனியாக அனுஷ்கா சென் தன் நடிப்பு திறனை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும் பூஜா தர்கன், நீலு டோக்ரா ஆகியோரும் வருகிறார்கள்.

1½ மணி நேரம் ஓடும் இதனை கஸ்மி இயக்கியுள்ளார்.

கில் போக்சூன்

தனியார் நிறுவனம் ஒன்று தொழில்ரீதியான கொலைகாரர்களை உருவாக்குகிறது. விதிகளை வகுத்து கொண்டு நிபுணத்துவம் பெற்றவர்களை வைத்து காசுக்காக பிரபலங்களை கொல்கிறார்கள். அதில் தலைசிறந்த கொலைகாரியாக நாயகி கில் போக்சூன் இருக்கிறாள். பருவப்பெண்ணுக்கு தாயாகவும் இருந்து தனி ஆளாக அவளை வளர்க்கிறாள்.

தான் ஒரு கொலைகாரி என்று தன் மகளுக்கு தெரியாத வகையில் போக்சூன் பார்த்து கொள்கிறாள். அதற்காக சமுதாயத்திலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை தரித்து கொண்டு இரட்டை வாழ்வு வாழ்கிறாள்.

தான் பணிபுரியும் இடத்தில் போக்சூனுக்கு பிரச்சினை வெடிக்கிறது. நாயகியை ஓரங்கட்டி விட்டு அவள் இடத்திற்கு வேறொருவரை கொண்டு வர முயற்சிகள் நடக்கிறது.

வீட்டில் அம்மா தன்னிடம் ஏதோ மறைப்பதை மகள் உணருகிறாள். இதனால் தன் அம்மாவிடம் நெருங்கி பழக அவளால் முடிவதில்லை. இதனால் வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் மகளிடமும் பரிவு காட்டாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக நாயகி இருக்கிறாள்.

ஒருகட்டத்தில் நாயகியின் மறுமுகம் மகளுக்கு தெரிய வருகிறது. மேலும் தன்னுடன் படிக்கும் சக மாணவி மீதான ஈர்ப்பு அவளுக்கு பிரச்சினையாகிறது. பள்ளியில் இருந்து அவளை வெளியேற்றும் சூழல்.

இதனை நாயகி எவ்வாறு எதிர்கொள்கிறாள்? தன் மகளின் அன்பை அவள் பெற்றாளா? என்பதே கில் போக்சூன் படத்தின் கதை. கொலைகார தாயின் வாழ்க்கை குறித்து இதில் சொல்லப்பட்டுள்ளது.

ரத்தக்களரியுடன் தாய்-மகள் உறவு பற்றிய இந்த குடும்ப படத்தை நெட்பிளிக்சில் காணலாம்.

ரோமஞ்சம்

மலையாளத்தின் வெற்றிப்படமான இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. உண்மை சம்பவங்களை தழுவியது. ரோமஞ்சம் என்றால் 'மயிர்கூச்செறிய' என பொருள்படும்.

கதைக்களம் 2007-ம் ஆண்டு நடந்த வகையில் அமைகிறது. 7 திருமணமாகாத நண்பர்கள் பெங்களூருவில் தங்கள் வயிற்று பிழைப்புக்காக கிடைத்த வேலைகளை செய்து கொண்டு ஒரே வீட்டில் இருக்கிறார்கள். வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட அவர்கள் சந்தோசமாக இருக்க முயலுகிறார்கள். ஒற்றுமையோடு செயல்படும் அவர்கள் விளையாட்டின்போது தன் நண்பன் ஒருவரை ஒதுக்கி விடுகிறார்கள். இதனால் நண்பர்களின் கவனத்தை ஈர்க்க பிசாசுகளுடன் பேச பயன்படுவதாக கூறப்படும் ஒக்ஜா பலகையை அவர் தயாரிக்கிறார். இதன் காரணமாக இவர்கள் வீட்டினுள் அனாமிகா எனும் பேய் புகுகிறது. நண்பர்கள் விளையாட்டாக அதனோடு பேச ஆரம்பிக்க அது வினையாகிறது. பின்னர் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களை காமெடி கலந்து கலகலவென சொல்லப்பட்டதே படத்தின் கதை.

பெரும்பாலும் புதுமுகங்களை கொண்ட இது பெரிய வெற்றியையும், நல்ல வசூலையும் பார்த்தது. சோதனை முயற்சிகளுக்கு மலையாள சினிமா பெயர் பெற்றது என நிரூபித்துள்ளனர். பெரிய நடிகர்கள், ஆர்ப்பாட்டமான பாட்டுகள், சண்டை காட்சிகள் என எந்த அலட்டலும் இல்லாத படங்களும் வெல்லும் என்பதற்கு இது ஒரு சான்று.

Tags:    

மேலும் செய்திகள்