கேக் கலைஞராக அசத்தும் முன்னாள் ஐ.டி.ஊழியர்

உடல்நலத்திற்கு கேடு தரும் ரசாயன பொருட்களை தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான கேக் மற்றும் குக்கீஸ்களை தயாரிக்கிறார் ரம்யா.;

Update:2023-06-11 14:13 IST

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவரான ரம்யா முன்னாள் ஐ.டி. ஊழியர். இருப்பினும், கேக் தயாரிப்பின் மீதான ஆர்வத்தினால், 2016-ம் ஆண்டிலிருந்து, கேக் தயாரித்து வருகிறார். குறிப்பாக உடல்நலத்திற்கு கேடு தரும் ரசாயன பொருட்களை தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான கேக் மற்றும் குக்கீஸ்களை தயாரிக்கிறார். ஐ.டி. ஊழியரின் கேக் ஆசை குறித்து கேள்விப்பட்டு, அவரிடம் சிறு நேர்காணல்...

* ஐ.டி. ஊழியர், எப்படி கேக் தயாரிப்பாளராக மாறினார்?

பொறியியல் படித்து முடித்துவிட்டு ஐ.டி. துறையில் பணியாற்றினேன். அந்த சூழலில்தான், எனக்கு கேக் தயாரிப்பு மீதும், பாஸ்ட்ரி கலை மீதும் ஈர்ப்பு வந்தது. மேலும் ஐ.டி. வேலையை ஒப்பிடும்போது எனக்கு கேக் தயாரிப்பது மனநிறைவானதாக தோன்றியது. அதனால்தான் கேக் தயாரிப்பாளராக மாறினேன்.

* ஐ.டி. வேலை, நல்ல சம்பளம்... இந்த சூழலில் ஐ.டி. வேலையை விட்டுவிட்டு கேக் தயாரிப்பாளராக மாறியதை நினைத்து வருத்தப்பட்டது உண்டா?

இல்லை. ஐ.டி.யில் நல்ல சம்பளம் கிடைத்தாலும், நம்முடைய தேடல் வேறொரு துறையின் மீது இருக்கையில், நம்முடைய பணியில் மனநிறைவு இருக்காது. மேலும் அதிக வருமானம் தரும் பணியைவிட, நமக்கு பிடித்த துறையில் களமிறங்கி பணியாற்றுவது, மனநிறைவையும், மன அமைதியையும் கொடுக்கும். மேலும் நம்முடைய முயற்சியில் தொடங்கும் சுய தொழிலில், வருமானமும் கிடைக்கும். எதிர்காலமும் இருக்கும். இந்த காரணங்களினால், நான் வருத்தப்பட்டதே இல்லை.

* கேக் தயாரிப்பு சம்பந்தமாக படித்து தெரிந்து கொண்டீர்களா?

அனுபவ கல்வியும், கொஞ்சம் ஆன்லைன் படிப்பும், என்னை கேக் தயாரிப்பில் சிறப்பானவராக மாற்றியது. மேலும் கேக் தயாரிப்பு மற்றும் பாஸ்ட்ரி கலையில் எனக்கு இருந்த ஆர்வமும், அதில் பல்வேறு புதுமைகளை கற்றுக்கொள்ளும் தேடலை கொடுத்தன.

* நிறைய குடும்ப தலைவிகள், கேக் தயாரிப்பில் களமிறங்கி இருக்கிறார்கள். உங்களுடைய தனித்துவம் என்ன?

மைதா, முட்டை, சர்க்கரை, வெண்ணெய்.... இந்த 4 பொருட்களும், பாஸ்ட்ரி கலையில் தவிர்க்க முடியாதது. இந்த நான்கு பொருட்களை எப்படி கையாள்கிறோம், இதற்கு மாற்றாக வேறு எதை கையாள்கிறோம்... என்பதில்தான் சுவையும், சுவாரசியமும் இருக்கிறது. பாஸ்ட்ரி கலையில் சுவையும், மனமும், நிறமும், டெக்ஷர் எனப்படும் அமைப்பும் மாறுபடும்போதுதான், புதுப்புது ஸ்டைல் பிறக்கிறது. 2016-ம் ஆண்டிலிருந்து, இப்போது வரை, என்னால் முடிந்த அளவிற்கு புதுமையான ஸ்டைல்களை கையாள்கிறேன். மேலும் கேக் வகைகளையும், குக்கீஸ் எனப்படும் பிஸ்கட் வகைகளையும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதால், அவர்களது ஆரோக்கிய நலனில் அதிக அக்கறை காட்டுகிறேன். என்னுடைய தயாரிப்புகளில், பெரும்பாலும் 'கெமிக்கல்' என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. அதேபோல, சிறுதானிய வகைகளையே அதிகளவில் பயன்படுத்துகிறேன்.

* சிறுதானியங்களை பயன்படுத்தி கேக் மற்றும் குக்கீஸ்களை செய்வது கடினமானதாக இருக்குமா?

சிறுதானியங்களை பயன்படுத்தி குக்கீஸ்கள் எனப்படும் பிஸ்கட் செய்வது சுலபமானது. ஆனால் கேக் செய்வதுதான் கொஞ்சம் கடினமாக இருக்கும். கேக்குகளை பொறுத்தவரையில், கேக் செய்யப் பயன்படுத்தும் மாவும், அதன் பதமும் சரியாக இருக்க வேண்டும். இருப்பினும், சிறுதானியங்களை பயன்படுத்தி நிறைய கேக்குகளை செய்திருக்கிறோம். மைதா கேக்குகளை விட, இதில் கொஞ்சம் வேலைப்பாடுகள் அதிகமாக இருக்கும். பொறுமையும் கூடுதலாக தேவைப்படும்.

* கேக் செய்வதுடன், அதை கற்றுக்கொடுக்கவும் செய்கிறீர்களா?

ஆம்..! ஆரம்பத்தில் என் வீட்டில் கேக் தயாரிக்க தொடங்கினேன். நிறைய கற்றுக்கொண்டேன். இப்போது பிரத்யேக பயிற்சிக்கூடம் தொடங்கி, அதில் நிறைய பெண்களுக்கு கேக் தயாரிப்பு வித்தையை கற்றுக்கொடுத்திருக்கிறேன்.

கல்லூரி பெண்கள், குடும்ப தலைவிகள் மட்டுமின்றி குழந்தைகளும் ஆர்வமாக கற்றுக்கொள்கிறார்கள். சமீபகாலத்தில் பாட்டு, நடனம், தற்காப்பு கலைகளை போல கேக் தயாரிப்பு வகுப்புகளும் குழந்தைகளுக்கான உற்சாக வகுப்புகளாக மாறியிருக்கின்றன.

* கேக் தயாரிப்பு கலையை நிறைய பெண்கள் உற்சாகமாக கற்றுக்கொள்வது ஏன்?

இது உற்சாகத்திற்கான கலை. உடலுக்குள், மனதிற்குள் உற்சாகத்தை கொடுக்கக்கூடிய சக்தி, கேக் தயாரிப்பிற்கும், பாஸ்ட்ரி கலைக்கும் உண்டு. மேலும், உற்சாகத்துடன் வருமானமும் கிடைக்கக்கூடிய கலை என்பதால், கடந்த 5 வருடங்களில் இதன் வளர்ச்சி அமோகமாகி விட்டது. முன்பெல்லாம், கல்லூரி படிக்கும் பெண்களுக்கு தங்களது எதிர்காலம் குறித்த பயமும், வேலைவாய்ப்பு குறித்த கேள்விக்குறியும் இருக்கும். ஆனால் இப்போது 20 நாள், ஒரு மாத பயிற்சி வகுப்பிலேயே பெண்கள், சிறப்பான எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்கிறார்கள். சிலர், பகுதிநேர தொழிலாக கேக் தயாரிப்பை முன்னெடுத்து, இன்று அதையே முழுநேர தொழிலாக மாற்றி முன்னேறிய கதைகளும் நிறைய இருக்கிறது. வேலைவாய்ப்பும், தேவையும் அதிகமாக இருக்கும் வரையில், கேக் தயாரிப்பிற்கான வரவேற்பு சிறப்பாகவே இருக்கும்.

* கேக் தயாரிப்பு தொழிலை முன்னெடுக்கும் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

சுயமாக தொழில் முயற்சியில் இறங்கும்போது, அதை அடுத்தவர்களிடம் கொண்டு சேர்க்க தயங்கக்கூடாது. அடுக்குமாடியில் வசிப்பவர்களாக இருப்பின், அங்கு வசிக்கும் எல்லோரிடமும் நீங்கள் கேக் தயாரிப்பதை தெரியப்படுத்துங்கள். ஏனெனில் 100 வீடுகள் இருக்கும் உங்கள் குடியிருப்பிலேயே உங்களுக்கான கேக் ஆர்டர்கள் வரலாம். இவையின்றி, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள மார்க்கெட்டிங் விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள். மேலும் தேவைக்கு ஏற்ப, கேக்குகளும், குக்கீஸ்களும் தயாரியுங்கள். அப்போது, தேவையில்லாத விரயத்தை தவிர்க்கலாம்.

* உங்களுடைய ஸ்பெஷல்?

சீஸ் கேக், லேயர் ேகக், பிரெட் குக்கி.

* உங்களுடைய ஆசை ?

ரசாயன சுவைக்கூட்டிகள் இன்றி, இயற்கையான பொருட்களை கொண்டே கேக் தயாரிப்பதும், அதை கற்றுக்கொடுப்பதும் என்னுடைய ஆசை.

Tags:    

மேலும் செய்திகள்