மினியேச்சர் சிற்பங்கள் சமீபகாலமாக டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. சிறிய வடிவமைப்பில் ஆச்சரியப்படவைக்கும் நுண்ணிய கலை வேலைப்பாடுகளுடன் மிளிர்வதால் பலரும் ரசிக்கிறார்கள். தங்கள் வீட்டு அலங்காரத்திலும் இடம்பிடிக்க செய்கிறார்கள்.
இந்த நுண்கலை சிற்பங்களை பற்றி இப்போதுதான் பலருக்கும் தெரிய தொடங்கி இருக்கிறது. ஆனால் நம் கலாசாரத்தின் ஒரு அங்கமாக கலை ரீதியான தொடர்புடன் நீண்டகாலமாகவே பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. மூதாதையர்கள் செய்து வந்த நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளை தலைமுறை தலைமுறையாக பின்தொடர்ந்து கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் தனிக்கவனம் பெறுகிறார், டி.கே.பரணி.
53 வயதாகும் இவர் கைவினை கலைஞர். நுண்ணிய சிற்பங்களை தத்ரூபமாக வடிவமைப்பதில் ஆர்வம் கொண்டவர். சந்தன மரம், அரிசிதான் இவரது நுண்கலை சிற்பங்களுக்கான மூலப்பொருட்கள். இவரது நுண்கலை சிற்பங்களுக்கு பிரபலங்களிடம் இருந்தும் பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. அவர்களின் சிலைகளை நுண்ணிய கலைவேலைப்பாடுகளுடன் வடிவமைத்தும் பரிசளித்திருக்கிறார்.
டி.கே.பரணி, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை கஸ்தூரிபாய் தெருவில் வசித்து வருகிறார். தனது பாட்டனார் வைத்தியநாதன் மற்றும் தந்தை காளாஸ்திரி ஆகியோரிடம் இருந்து அரிசியில் சிற்பம் வடிக்கும் நுண்கலையை கற்றிருக்கிறார். பின்பு சந்தன மரம், மாக்கல் போன்றவற்றில் நுண்ணிய சிற்பம் வடிக்கவும் கற்றுவிட்டார். சிறு வயது முதலே தன்னிடம் வெளிப்பட்ட நுண் கலை சிற்ப ஆர்வத்தை இப்போது வரை முழு மூச்சுடன் பட்டைத்தீட்டிக்கொண்டிருப்பது பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
''எனது தந்தை அரிசியில் நேர்த்தியாக சிற்பம் வடிப்பார். அவர் இரு அரிசியில் செய்த சிற்பத்தை நாம் ஏன் ஒரு அரிசியிலும், அரை அரிசியிலும் செய்யக்கூடாது என்று முயற்சி செய்து பார்த்தேன். எனது ஆர்வமும், முயற்சியும் வீண் போகவில்லை. என் எதிர்பார்ப்பை விட சிறப்பாக சிற்பங்கள் அழகுருவம் பெற்றன.
சிற்ப கலை மீதே ஈடுபாடு மேலோங்கிக் கொண்டிருந்ததால் 9-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டேன். எனது தந்தை செய்த சிற்ப வேலையை 1985-ம் ஆண்டு முதல் முழு மூச்சாக செய்யத் தொடங்கினேன்.
எந்தவித லென்சுகளின் உதவியும் இல்லாமல், மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிற்பத்தை அரிசியில் வடித்து தமிழ் செம்மொழி மாநாடு கண்காட்சியில் இடம்பெறச் செய்தேன். அரை அரிசியில் விநாயகர், சுவாமி விவேகானந்தர், திருவள்ளுவர் உள்பட பல பிரமுகர்களை வடிவமைத்திருக்கிறேன். குறிப்பாக சந்தன மரத்தைக் கொண்டு கோவில் தேரை அரை அடி உயரத்தில் நுண்ணிய சிற்பமாக செதுக்கினேன்.
தாஜ்மஹால், மீனாட்சி கல்யாணம், சாந்தோம் தேவாலயம், கீதை உபதேசம், இயேசு, ராமாயண, மகாபாரத காட்சிகள் போன்றவற்றை அரை அடியில் இருந்து 2 அடிக்குள் தயார் செய்து இருக்கிறேன்'' என்று பெருமிதம் கொள்கிறார்.
இவர் 1989, 1991, 1992-ம் ஆண்டுகளில் பூம்புகார் மாநில விருது பெற்றுள்ளார். 1990-ம் ஆண்டு தேசிய விருதும் பெற்றுள்ளார். லலித் கலா அகாடமியில் தமிழ்நாடு ஓவிய மின்கலை குழு விருது, மரபு கலைஞர் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
சென்னை, டெல்லி, மும்பை, மைசூரு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கண்காட்சிகளில் தனது சிற்பங்களை காட்சிப்படுத்தி பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது படைப்புகள் கைவினை பொருட்கள் விற்பனையங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. மனைவி ரேணுகா, மகன் திலீப், மகள் திவ்யா ஆகியோர் நுண் சிற்பங்கள் வடிவமைப்புக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
''2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி கிரீஸில் நடைபெற்ற கைவினை கண்காட்சியிலும் எனது நுண் சிற்ப படைப்புகளை காட்சிப்படுத்தி இருக்கிறேன். அதை பார்வையிட்டவர்கள் ஆச்சரியத்திலும், வியப்பிலும் ஆழ்ந்தனர். என்னை பாராட்டி கவுரவித்தார்கள். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உட்பட பல்வேறு தலைவர்களின் சிலைகளை சந்தன மரத்தினை கொண்டு நுண்ணிய சிற்பங்களாக கலைநயத்துடன் வடித்துள்ளேன்'' என்றதுடன் விடை பெற்றார்.