வேற்றுக்கிரகவாசிகளுக்கு 'ஒரு அறிவிப்பு'...!

நாம் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்புகொள்வது என்பது சாத்தியமே என்று கூறுகின்றனர்.;

Update:2023-06-04 19:00 IST

நமக்கு எப்போதுமே நம்மைத் தவிர, வேற்றுக் கிரகவாசிகள் உலகில் உள்ளனரா இல்லையா என்பதில் சந்தேகமும், சர்ச்சையும் அதிகமே. விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழு விண்மீன் மற்றும் வேற்றுகிரகங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப விரும்பி அத்தகவலில் மனிதனின் டி.என்.ஏ-மற்றும் பூமியின் இருப்பிடத்திற்கான ஒருங்கிணைப்பு பற்றியும் தகவல் தர உள்ளனர். அவர்கள் எண்ணப்படி இக்குறுந்தகவல் நமக்கு அருகில் உள்ள கிரகவாசிகளுக்குப் போய்ச் சேரும் என நம்புகின்றனர்.

இந்தக் குறுந்தகவலுக்கு 'The Beacon of the Galaxy' அதாவது " விண்மீன் மண்டலக் கலங்கரை விளக்கம்" எனப் பெயரிட்டுள்ளனர். மேலும் அதில் கணிதம் மற்றும் பொறியியல் சம்பந்தப்பட்ட கோட்பாடுகள் மற்றும் மனித உடல் பற்றிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுபோதாது என அப்படி அவர்கள் பூமிக்குவர வேண்டுமானால் விண்மீன் மண்டலத்திலிருந்து பூமிவர வரைபடமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் சேரும் இடமாக பால்வெளி மண்டலத்தின் இதயப்பகுதியை தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த இடம் தான் கிரகவாசிகள் வசிக்கும் இடமாக இருக்கலாம் என எண்ணுகின்றனர். அந்த இடமே பலர் வாழ உகந்ததாக உள்ளது. அதற்குக் காரணம் அங்கு அவர்கள் கண்ட அடர்ந்த நட்சத்திரக்கூட்டம் இருப்பதே.

சர்வதேச விஞ்ஞானிகள் அடங்கிய ஒருகுழு நாசாவில் தலைமைப்படுத்தப்பட்டு இந்த தகவல்களை பைனரி குறியீட்டின் மூலம் அனுப்ப எண்ணி உள்ளனர். இதற்காக கலிபோர்னியாவில் உள்ள செட்டி (Seti) இன்ஸ்டிட்யூட்டின் ஏலியன் டெலஸ்கோப்பைப் பயன்படுத்த உள்ளனர். மேலும் சீனாவில் உள்ள 500 மீட்டர் அகலம் கொண்ட கோள ரேடியோ தொலை நோக்கியையும் பயன்படுத்த உள்ளனர். இந்தத் தகவல் அனுப்புதல் என்பது முதல்முறை அல்ல. ஏற்கனவே தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

1962-ல் மோர்ஸ்கோட் (code)-பயன்படுத்தி வீனஸ் கிரகத்திற்கு 'வணக்கம்' என்ற தகவல் அனுப்பப்பட்டது. இது ஒரு குறியீடாக அனுப்பப்பட்டு ரேடியோ அலைகள் செல்கின்றனவா என சோதிக்கப்பட்டது.

1974-ல் ப்யோர்டோரீக்கோவில் உள்ள அரசு கண்காணிப்பகம் மூலம் நட்சத்திரங்களுக்கு இடையில் குறுந்தகவல் அனுப்பினால் இது அங்கு போய்சேர 25 ஆயிரம் ஒளி ஆண்டு ஆகும் எனக் கணக்கிட்டுள்ளனர்.

இந்தக் குறுந்தகவல் அங்கு சேரும்போது நாம் யாரும் உயிரோடு இல்லை என வைத்துக்கொள்ளலாம். ஆனால் தற்போது அனுப்பியுள்ள பைனரிகோடில் நம் மனித உடல் பற்றியும் தொலைநோக்கி பற்றிய படமும் உள்ளன.

1977-ல் வாயேஜர்-1 மற்றும் 2 விண்வெளியில் செலுத்திய போது சூரிய குடும்பம் பற்றி ஆராயப்பட்டது. அதன் இரு பயணத்திலும் அவற்றின் வெளிப்பகுதியில் தங்கம் பூசப்பட்ட போனோகிராப்ரெக்கார்டர் வைக்கப்பட்டது. அதில் செலுத்தப்பட்ட பதிவுகளில் பூமியில் உள்ளவர்களின் வாழ்வின் பன்முகத்தன்மை மற்றும் கலாசாரம் உருவப்படமாக இருந்தன.

மேலும் பூமியில் பேசப்படும் 55 மொழிகளில் நாம் பேசும் வாழ்த்துக்கள் பதியப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி 90 நிமிட இசை நிகழ்ச்சியும், அதில் மொசார்ட் இசையும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது.

தற்போது உள்ள வரையறுக்கப்பட்ட தொழில்நுட்பப் பயன்பாட்டின்படி விண்ணுலக குறுந்தகவல் அனுப்புதல் என்பது மிகவும் சுலபமானது. இருப்பினும் இந்த விண்மீன்களுக்கு இடையேயான தொடர்பு என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

நாம் அங்கிருந்து பெறப்போகும் தகவல்கள் கிடைக்கும் வாய்ப்புகள் மிகக்குறைவே. அப்படி கிடைக்கும் என்பது உறுதியாகி இருப்பின் அதைப் பெற நமக்கு ஆயிரம் வருடங்களுக்கும் மேலாகலாம். நமக்கும் அவர்களுக்கும் இடையே பேச்சு நடப்பது என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கலாம். நாமும் வேற்றுகிரகவாசிகளும் ஒருவருக்கொருவர் செலுத்தப்படும் குறுந்தகவல்கள் குறியீட்டுடன் புரியப்பட வேண்டும்.

ஆனால் சில விஞ்ஞானிகள் இதுபற்றி அக்கறை கொண்டுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார்: இந்தகுறுந்தகவல் அனுப்புவது நிறுத்தப்படவேண்டும். ஏனெனில் நாமே நமக்கு எதிரிகளை அழைப்பதுபோல் அமையும் என்றார்.

மிகவும் முன்னேறிய மற்றும் புத்திசாலியாக இருக்கக்கூடிய வேற்றுகிரக வாசிகள் நம்முடன் நட்புடன் இருக்கும் வாய்ப்பு இருக்காது என்கிறார். அவர்கள் தமது கூட்டத்தினரை வேற்றுகிரகத்தில் காலனிபோல் அமைப்பர் என்கிறார். இதனால் மனிதகுலமும் மறையும் என்கிறார். இருப்பினும் மேற்கூறிய கருத்துக்களை மற்ற விஞ்ஞானிகள், அப்படிப்பட்ட அறிவுமிகு கிரகவாசிகளால் அமைதியே அமையும் என்கின்றனர். அவர்கள் நம்முடன் கூட்டு சேர்ந்து ஒற்றுமையுடன் செயல்படுவர் என்றும் கூறுகின்றனர். எது எவ்வாறு இருப்பினும் நம் முயற்சியையும் செய்தி அனுப்புதலையும் பல விஞ்ஞானிகள் ஊக்கத்துடன் ஆமோதிக்கின்றனர். நாம் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்புகொள்வது என்பது சாத்தியமே என்று கூறுகின்றனர். நடக்கட்டும் முயற்சிகள்…..!

Tags:    

மேலும் செய்திகள்