நாட்டு மாடுகள் வளர்ப்பில் அசத்தும் முதுகலை பட்டதாரி..!
காங்கிரேஜ் இன நாட்டு மாடுகள் வளர்ப்பில் அசத்தி வரும், ராஜேஷ் கார்த்திக்கிடம் சிறுநேர்காணல்.
உங்களை பற்றி கூறுங்கள்?
கோவை மாவட்டம், செஞ்சேரி என் சொந்த ஊர். நான் சிவில் என்ஜினீயரிங் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறேன்.
நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
மிகவும் இயல்பாக தோன்றிய ஆசைதான் இது. எனது மகளுக்கு, சத்தான-ஆரோக்கியமான மாட்டு பால் கொடுக்கும் ஆசையில்தான், நான் மாடுகளை வாங்கி வளர்க்க தொடங்கினேன். அந்தவகையில், 2015-ம் ஆண்டு, காங்கிரேஜ் வகை மாடு ஒன்றை வாங்கி வளர்க்க தொடங்கினேன். இப்படி, உருவான ஆசைதான், இன்று மிகப்பெரிய முயற்சியாக உருவெடுத்திருக்கிறது. ஆம்...! இன்று 80-ற்கும் மேற்பட்ட காங்கிரேஜ் மற்றும் கீர் வகை நாட்டு மாடுகளை வளர்க்கிறேன்.
நிறைய மாட்டு இனங்கள் இருக்கின்றன. அதில் காங்கிரேஜ் வகைகளை தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன?
சமூக வலைத்தளங்களில், பால் சம்பந்தமான நிறைய தகவல்கள் பகிரப்பட்டு வருவதை பார்த்திருப்போம். பாக்கெட் பால்களில் சுவையில்லை, முழுமையான சத்தில்லை... அப்படி இப்படி என நிறைய கருத்துகளை கடந்து செல்கிறோம். இவை அனைத்தும் உண்டாக்கிய தாக்கம்தான், என்னை சொந்த தேவைக்காக மாடு வளர்க்கும் ஆசையை தூண்டிவிட்டது. மாடு வளர்க்க ஆசைப்பட்டதும், மிகப்பெரிய தேடலில் இறங்கினேன்.
வெளிநாட்டு மாட்டு இனங்களை தாண்டி, நாட்டு மாடுகளில் எவை அதிக அளவில் பால் கொடுக்கும், எந்த மாட்டு வகையின் பால் சுவையாக மற்றும் ஆரோக்கியமானதாக இருக்கும் என நிறைய விஷயங்களை முன்வைத்து, அதற்கான பதில் தேடினேன். அதற்கு காங்கிரேஜ் வகை மாடுகள்தான் சிறப்பான பதிலாக அமைந்தன. அதனால்தான் அதை வளர்க்க ஆரம்பித்தேன்.
அது என்ன, காங்கிரேஜ் வகை மாடுகள்?
இது இந்திய நாட்டு மாடுகள் இனத்தை சேர்ந்தது. குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டது. இவை பார்ப்பதற்கு, மிகவும் கம்பீரமாக இருக்கும். மிகப்பெரிய கொம்புகள் இருக்கும். இதை நம் முன்னோர்கள், சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து, பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்கள். அந்தளவிற்கு தொன்மை வாய்ந்தது.
காங்கிரேஜ் நாட்டு மாடுகளின் சிறப்பு என்ன?
சுவையான அதேசமயம் சத்து நிறைந்த பால்தான், இதன் மிக முக்கிய சிறப்பு. இந்திய நாட்டு வகை மாடுகளிலேயே, இதன் பால் தனிச்சுவையாக இருக்கும். இந்த கருத்தை செவி மூலமாக கேட்டு தெரிந்து கொள்வதைவிட, நாவின் மூலமாக சுவை உணர்ந்து கொள்வதுதான் சிறப்பானதாக இருக்கும்.
மேலும், இந்த வகை மாடுகள், அதிகளவிலான பாலை உற்பத்தி செய்யும். நம் ஊர் நாட்டு மாடுகள், ஒருநாளில் அதிகபட்சமாக 3 முதல்5 லிட்டர் பால் சுரக்கும் என்றால், காங்கிரேஜ் வகை மாடுகள் 10 முதல் 12 லிட்டர் பால் வரை சுரக்கும். அதேபோல, காங்கிரேஜ் மாடுகளின் பால் உற்பத்தி காலமும் அதிகம். கன்று ஈன்றதில் இருந்து கிட்டத்தட்ட 9 மாதங்கள் வரை பால் கிடைக்கும். இதன் பாலில், கெட்ட கொழுப்புகள் மிக குறைவு. அதேசமயம் நல்ல கொழுப்புகள் அதிகளவில் இருக்கின்றன. மேலும் வெளிநாட்டு மாடுகளை விட, இதை வெகு சுலபமாக பராமரித்துவிட முடியும். மருத்துவ செலவும் மிக குறைவு. மற்ற மாடுகளை போல, அடிக்கடி மருத்துவரை அழைத்து பராமரிக்கவேண்டிய தேவை இருக்காது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மாடுகளை, தமிழ்நாட்டில் ஏன் அதிகம் வளர்க்க தயங்குகிறார்கள்?
இவை பார்ப்பதற்கு ஜல்லிக்கட்டு காளை போல கம்பீரமாக இருப்பதால், காங்கிரேஜ் மாடுகளை வளர்க்கவும், பராமரிக்கவும் தமிழக மக்கள் கொஞ்சம் தயங்குகிறார்கள். குறிப்பாக இந்த மாட்டு இனங்களின் கொம்புகள் மிக பிரமாண்டமானதாக இருக்கும். இப்போது தமிழ்நாட்டில், தென்படும் மாடுகளின் கொம்புகளைவிட குஜராத் மாநிலங்களில் வளரும் மாடுகளின் கொம்புகள், பிரமிக்க தக்கதாக இருக்கும். ஜல்லிக்கட்டு காளை போல இவை நம்மை மிரளச் செய்தாலும், உண்மையில் இவை மிகவும் சாதுவானவை. புதிய நபர்களை அருகில் அனுமதிக்காது. ஆனால் நன்கு பழக்கமானவர்களை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாது. பாசமாக பழகக்கூடியது.
சிவில் என்ஜினீயர், மாடுகளை வளர்க்க பழகியது எப்படி? அதுவும் தமிழ்நாட்டிற்கு அதிகம் பழக்கமில்லாத மாடுகளை எப்படி வளர்க்க பழகினீர்கள்?
காங்கிரேஜ் பற்றி அறிந்து கொண்டதும், அதை வளர்க்க ஆசைப்பட்டேன். அதற்காகவே, குஜராத் மாநிலம் சென்று அங்கு சில மாதங்கள் தங்கி இருந்து காங்கிரேஜ் மாடுகள் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். காங்கிரேஜ் மாடுகள் வளர்ப்பவர்களிடம் அதுபற்றி முழுமையாக கற்றுக்கொண்டேன். அதை எப்படி வளர்ப்பது, எப்படி கையாள்வது, எத்தகைய உணவுகளை உண்ண கொடுப்பது, நோய் பாதிப்பினால் சுணங்கினால் எப்படி குணமாக்குவது... இப்படி நிறைய கள ஆய்வுகளை மேற்கொண்ட பிறகுதான், தைரியமாக மாடுகளை வாங்கி வளர்த்தேன்.
மாடு வளர்த்து, அதிலிருந்து பால் கரந்து மகளுக்கு குடிக்க கொடுக்கும் அனுபவம் எப்படி இருந்தது?
இன்று பெரும்பாலான பெற்றோர், காய்கறிகள் தொடங்கி இறைச்சி வரை எல்லாவற்றிலும் 'ஆர்கானிக்' பொருட்களை விரும்புகிறார்கள். அதுவும், அவர்களது வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், கோழிகளையே மன திருப்தியோடு குழந்தைகளுக்கு பரிமாறுகிறார்கள். அந்தவகையில், இதுவும் அதுபோன்ற 'ஹோம்மேட்' முயற்சிதான். எனக்கும், அப்படியொரு திருப்தி உண்டு. எந்த கலப்படமும் இல்லாத, சத்தான பாலை குடிக்க கொடுக்கிறோம் என்ற மனநிம்மதி உண்டு. இப்போது மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால், என்னுடைய மகள் மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் இருக்கும் நிறைய குழந்தைகளும் இந்த பாலை பருகுகிறார்கள். இதன் சுவையை எல்லோரும் உணரும் விதமாக, டீ, காபி போன்றவற்றை தயாரித்து கொடுப்பது உண்டு.
என்னை போலவே சிந்தனை கொண்ட பலரும், காங்கிரேஜ் மாடுகளை வளர்க்க ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு அதற்கான வழிகாட்டுதல்களை கொடுப்பதுடன், நிறைய இளைஞர்களுக்கு இதை தொழில் முயற்சியாக முன்னெடுக்கவும் வழிகாட்டி இருக்கிறேன்.
காங்கிரேஜ் மாடு வளர்ப்பு, லாபகரமான முயற்சியாக இருக்குமா?
நிச்சயமாக இருக்கும். மத்திய அரசு நாட்டு மாடுகளின் இனவிருத்தியை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதை தொழில் முயற்சியாக முன்னெடுப்பவர்களுக்கு, மானிய உதவிகளையும் வழங்குகிறது. அதனால், மாடு வளர்க்க ஆசைப்படுபவர்கள் அதை லாபகரமான தொழிலாகவே முன்னெடுக்கலாம். பால் உற்பத்தி மட்டுமின்றி, பால் சம்பந்தப்பட்ட மற்ற இதர பொருட்கள் தயாரிப்பும், இதை மேலும் லாபகரமானதாக மாற்றும்.
புதிதாக மாடு வளர்க்க ஆசைப்படுபவர்களுக்கு உங்களுடைய அறிவுரை?
கால்நடையாக வெகு தூரம் அவை நடப்பதால்தான், அவை கால்நடை பட்டியலில் இடம்பிடிக்கின்றன. அதனால் மாடு வளர்க்க ஆசைப்படுபவர்கள், அதை ஒரே இடத்தில் கட்டிப்போட்டு வளர்க்காமல் மேய்ச்சல் முறையில் உலாவவிட்டு வளர்ப்பது சிறந்தது. அப்போதுதான், அவை ஆரோக்கியமாக இருக்கும்.