பச்சிளம் குழந்தைகளையும், பிஸ்டல் துப்பாக்கிகளையும் கையாளும் இளம்பெண்...!
மென்மையான பச்சிளம் குழந்தைகளையும், கடினமான பிஸ்டல் வகை துப்பாக்கிகளையும் சாதுரியமாக கையாள்கிறார் ‘நியோநேட்டல் தெரபிஸ்ட்’ ஸ்ரீஜா.;
மென்மையான பச்சிளம் குழந்தைகளையும், கடினமான பிஸ்டல் வகை துப்பாக்கிகளையும் சாதுரியமாக கையாள்கிறார், ஸ்ரீஜா. 23 வயதே நிரம்பியிருக்கும் இவர், தமிழ்நாட்டில் இருக்கும் வெகுசில 'நியோநேட்டல் தெரபிஸ்ட்'களில் ஒருவர். செயல்முறை மருத்துவம் எனப்படும் 'ஆக்குபேஷனல் தெரபி'யுடன், நியோநேட்டல் கேர் எனப்படும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு படிப்பையும் சேர்த்து முடித்ததுடன்... புதுமையான வேலைவாய்ப்பை உருவாக்கி, அதில் பணியாற்றி வருகிறார். அதேசமயம், மாநில துப்பாக்கி சுடுதல் போட்டிகளிலும், பங்கேற்று அசத்தி வருகிறார். இரு வேறு துறைகளில், தடம்பதித்து அதில் பயணித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீஜாவுடன் சிறுநேர்காணல்...
* உங்களை பற்றி கூறுங்கள்?
நான் சென்னைகோடம்பாக்கத்தில் பெற்றோர் ஞானசேகரன், பத்மபிரியா மற்றும் சகோதரர் ரிதேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறேன். பள்ளி மேல்நிலைப்படிப்பில் அறிவியல் பாடப்பிரிப்பிரிவை (சயின்ஸ்) தேர்ந்தெடுத்து படித்தேன். பின்பு ராமச்சந்திரா கல்லூரியில் ஆக்குபேஷனல் தெரபி படித்து முடித்தேன். கல்லூரி காலத்தில்தான், பிஸ்டல் சூட்டிங் கற்றுக்கொண்டேன். மேலும், நியோநேட்டல் கேர் படிக்கும் ஆர்வத்தையும், அங்குதான் வளர்த்துக்கொண்டேன்.
* ஆக்குபேஷனல் தெரபி முடித்தவர்கள், பச்சிளம் குழந்தைகளை கையாள முடியுமா?
முடியும். ஆனால் அதற்கு நியோநேட்டல் தெரபி படித்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த படிப்பில்தான் 10 மாதத்திற்கு முன்பாகவே பிறந்த குழந்தைகளை கையாளும் அனுபவத்தை கற்றுக்கொள்ள முடியும். இது பச்சிளம் குழந்தைகளை பற்றிய நவீன படிப்பு. ஜெய்பூர் சென்று படித்தேன். இதன்மூலமாகவே பச்சிளம் குழந்தைகளை கையாளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
* இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?
இப்போது எல்லா மருத்துவமனைகளிலும், நியோேநட்டல் ஐ.சி.யூ. எனப்படும் என்.ஐ.சி.யூ. வந்துவிட்டது. 10 மாதங்களுக்கு முன்பாகவே, பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சையும், பராமரிப்பும் இந்த என்.ஐ.சி.யூ.வில்தான் வழங்கப்படும். அங்கு நியோநேட்டலஜிஸ்ட் எனப்படும் பச்சிளம் குழந்தை மருத்துவர்களுக்கும், அவர்களுக்கு உதவியாக அனுபவமிக்க செவிலியர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பெற்றோர்களை கூட அனுமதிக்க மாட்டார்கள். அவ்வளவு சென்ஸிட்டிவான என்.ஐ.சி.யூ.வில், நானும் பணியாற்றுகிறேன்.
* நியோநேட்டல் தெரபிஸ்டாக உங்களுடைய பணி என்னவாக இருக்கும்?
பச்சிளம் குழந்தை மருத்துவர்களையும், பெற்றோர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுவதுதான், என்னுடைய பணி. 10 மாதத்திற்கு முன்பாகவே பிறந்த குழந்தைகளை எப்படி கையாள்வது, கருவிற்குள் இருப்பது போன்ற சூழல்களை உருவாக்குவது, அவர்களது செயல்பாடுகளில் (தவழ்தல், சிரித்தல், பேசுதல்) தாமதம் இருந்தால் அதுபற்றிய விளக்கங்களை கொடுப்பது... போன்ற மிக முக்கிய பணிகளை செய்கிறேன்.
* இது இயல்பான பணிதானே?
இல்லை. இப்படி ஒரு பணியும், இப்படியொரு வேலைவாய்ப்பும் இதுவரை எந்த மருத்துவமனைகளிலும் இருந்தது இல்லை. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவமனைகளில், விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய நியோநேட்டல் தெரபிஸ்ட்களே இருக்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. நானாகவே, பல மருத்துவமனைகளுக்கு சென்று, 'நியோநேட்டல் கேர்' பற்றிய புரிதல்களை உருவாக்கினேன். அப்படி கிடைத்த பணிவாய்ப்பில்தான், தற்போது பணிபுரிகிறேன்.
* உறுதியான வேலைவாய்ப்பு இல்லாத நிலையிலும், அதில் உறுதியாக இருந்தது எப்படி?
புதுமைகளை முயன்று பார்ப்பதில், எனக்கு ஆர்வம் அதிகம். மேலும் இது அதிகமான வேலைவாய்ப்பு நிறைந்த துறைதான். ஏனெனில் முன்பைவிட, இப்போது நிறைய குழந்தைகள் பிரசவ நாளுக்கு முன்பாகவே பிறந்துவிடுகிறார்கள். சில குழந்தைகள் ஒருசில மாதங்களுக்கு முன்பாகவே பிறந்துவிடுவதால், அவர்களுக்கு சிகிச்சை வழங்க, பராமரிக்க என்னை போன்ற நியோநேட்டல் தெரபிஸ்ட்கள் தேவை அதிகமாக இருக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருந்தேன். மேலும் பச்சிளம் குழந்தைகளை கையில் தூக்கி கொஞ்சவும், அவர்களுடன் நேரத்தை செலவழிக்கவும் யாருக்குதான் பிடிக்காது.
* 23 வயதில், பச்சிளம் குழந்தைகளை கையாளும் அனுபவம் எப்படி இருக்கிறது?
10 மாதத்திற்கு பிறகு இயல்பாக பிறந்த குழந்தைகளையே, நான் கையாள பயப்படுவேன். அப்படி இருக்கையில், 10 மாதத்திற்கு முன்பாக பிறந்த பச்சிளம் குழந்தைகளை பார்ப்பதற்கே கொஞ்சம் பயமாக இருந்தது. ஏனெனில் வழக்கத்தைவிட, அவர்கள் எடை குறைவாக மிகவும் குட்டியாக இருப்பார்கள். மேலும், அவர்களது உயிரை காப்பாற்றும் நோக்கில் பல மருத்துவ உபகரணங்கள் உடலில் பொருத்தப்பட்டிருக்கும். அதையெல்லாம் தாண்டி, அவர்களை தூக்குவதும், அவர்களை கையாள்வதும் சிரமமாகவே இருந்தது. பயிற்சியின்போது, முதல் 15 நாட்கள் ரொம்ப சிரமப்பட்டேன். பிறகு, பழகிவிட்டேன். இப்போது 6 மாத குழந்தைகளை எல்லாம், சிறப்பாக கையாள்கிறேன். பெற்றோர்களுக்கும், நம்பிக்கை கொடுத்து அவர்களை சிறப்பாக கையாள பயிற்சி கொடுக்கிறேன்.
* பச்சிளம் குழந்தைகளை கையில் தூக்கும் நீங்கள், துப்பாக்கிகளை கையில் தூக்கியது எப்போது?
கல்லூரி காலத்தில்தான், பிஸ்டல் சூட்டிங் மீது ஆர்வம் அதிகமானது. கல்லூரி வளாகத்திலேயே தனியார் அகாடமியின் பயிற்சிகள் வழங்கப்பட்டதால், தீவிரமாக பயிற்சி எடுத்தேன். அன்றிலிருந்து இன்றுவரை, பிஸ்டல் சூட்டிங் பயிற்சிகளும், படுஜோராக நடக்கிறது.
* மென்மையான பச்சிளம் குழந்தைகளையும், கடினமான துப்பாக்கிகளையும் கையாள்வது எப்படி இருக்கிறது?
இவ்விரண்டுமே வெவ்வேறானவை என்றாலும், இவ்விரண்டையும் சாதுரியமாகவே கையாள வேண்டும். இல்லையென்றால், கணக்கிடமுடியாத பாதிப்புகளை ஏற்க நேரிடும்.
* பயிற்சி மட்டும்தானா. இல்லை போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறீர்களா?
தமிழ்நாட்டில் படித்தவரை, பிஸ்டல் சூட்டிங் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொண்டேன். அதனால், மாவட்ட சூட்டிங் போட்டியிலும், திருச்சியில் நடந்த மாநில சூட்டிங் போட்டியிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்று, புள்ளிப்பட்டியலில் மிக முக்கிய இடங்களை பிடித்தேன். ஜெய்பூர் சென்ற பிறகு, பிஸ்டல் சூட்டிங் பயிற்சிகளில் ஈடுபட முடியவில்லை. இனி வருங்காலங்களில், சூட்டிங் பயிற்சியில் அதீத கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறேன்.
* உங்களுடைய ஆசை என்ன?
இப்போது பச்சிளம் குழந்தைகளுக்கான படிப்பை முடித்து அவர்களுக்காக பணியாற்றி வருகிறேன். இனி கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் வகையிலான மேற்படிப்புகளை தேடி வருகிறேன். அது சாத்தியமாகும்பட்சத்தில், பச்சிளம் குழந்தைகளோடு கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு உதவ முடியும் என நம்புகிறேன். அதுவே என்னுடைய ஆசையும்கூட.