தன்னம்பிக்'கையால்' சாதித்த மாணவர்..!

தொடர்ந்து தான் பயின்ற வகுப்பில் முதல், 2-வது இடங்களை பிடித்து சாதித்தார் கிருத்திவர்மா.;

Update:2023-05-28 21:00 IST

2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி, சுதந்திர தின விழாவை கொண்டாடிய நேரத்தில் தான் அந்த துயர சம்பவத்தை கிருஷ்ணகிரி தம்பதி கஸ்தூரி-அருள்மூர்த்தி கண்டனர். தங்களின் 4 வயதான ஒரே அன்பு மகனான கிருத்திவர்மா சோக்காடி அருகே உள்ள கோழிப்பண்ணை பக்கமாக விளையாடிக் கொண்டிருந்த போது மின்கம்பியில் கைபட்டு தூக்கி வீசப்பட்டான்.

கைகள் 2-ம் பொசுங்கி, தலையெல்லாம் அடிபட்டு குற்றுயிரும், குலை உயிருமாக கிடந்த குழந்தை கிருத்தி வர்மாவை பார்த்து பதறிப் போன அவனை பெற்றோர் தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்். அங்கு அவனது 2 கைகளையும் எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூற, பெற்றோரோ கதறி அழுகிறார்கள். கைகள் முக்கியமா?, குழந்தையின் உயிர் முக்கியமா? என நினைத்த பெற்றோர் இறுதியில் கைகளை எடுக்க சம்மதித்தனர்.

இந்த நிலையில், விதியின் கொடுமையால் கட்டிய கணவரும் விலகி செல்ல... என்ன செய்வது என தெரியாமல் இருந்த கஸ்தூரிக்கு ஆறுதல் கொடுத்தது பிறந்த வீடுதான். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் மணவாரனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜீனூரில் அண்ணன் கோவிந்தராஜ் தங்கையையும், மருமகன் கிருத்திவர்மாவையும் அரவணைத்துக் கொண்டார்.

நாட்கள் ஓடியது. சிறுவன் கிருத்திவர்மாவை ஜீனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்தனர். உடன் படித்த மாணவர்களும் தங்களில் ஒரு நண்பனாக கிருத்திவர்மாவை ஏற்றுக் கொண்டனர். 5-ம் வகுப்புக்கு பிறகு, 6-ம் வகுப்புக்கு அருகில் உள்ள நெடுமருதி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் கிருத்திவர்மாவை அவரது தாய் சேர்த்து விட்டார்.

இரண்டு கைகளும் இல்லாததால் பிறரை சார்ந்து இருக்கின்ற அவலநிலை... ஆனாலும் தன்னம்பிக்கை இழக்காத கிருத்திவர்மா எந்த வேலைக்கும் அடுத்தவரை துணைக்கு அழைக்க கூடாது என முடிவெடுத்தார். தானாக குளிக்க, சாப்பிட, படிக்க என ஒவ்வொன்றுக்கும் பயிற்சி எடுத்து சாதித்தார். அவர் சைக்கிள் ஓட்ட ஆசைப்பட்ட போது... கைகள் இல்லையே எப்படி சைக்கிள் ஓட்டப்போகிறாய் என கேட்டவர்கள் பலர். ஆனால் அவர்களே வியக்கும் வண்ணம் சைக்கிள் ஓட்டினார் கிருத்திவர்மா.

படிப்பில் ெஜயித்தால்தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்பதால் அவர் தனது முழுகவனத்தையும் படிப்பில் செலுத்தினார். இதற்கு அவரது ஆசிரியர்களும், சக மாணவர்களும் உறுதுணையாகவும், ஊக்கப்படுத்தவும் செய்தனர். தேர்வு நேரங்களில் இன்னொருவர் உதவியுடன் எழுத சங்கடமாக இருந்தது. இருந்தாலும் விடாமுயற்சியுடன் படித்தார். தொடர்ந்து தான் பயின்ற வகுப்பில் முதல், 2-வது இடங்களை பிடித்து சாதித்தார் கிருத்திவர்மா.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆசிரியர் உதவியுடன் கிருத்திவர்மா எழுதினார். தேர்வு முடிவில் 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பிடித்து தமிழ்நாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இரண்டு கைகளை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் சாதித்து காட்டிய கிருத்திவர்மாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்து கூற, கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் அவரது இல்லத்திற்கு சென்று பாராட்ட... தொடர்ந்து வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் மாணவர் கிருத்திவர்மா.

சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாணவர் கிருத்திவர்மாவை காண சென்றோம். வீட்டில் தனது உறவுக்கார தங்கையுடன் நோட்டில் புதிர் எழுதிக் கொண்டிருந்தார். மாணவரின் மாமா, தாய், உற்றார், உறவினர்கள் நம்மை அன்போடு வரவேற்க, மாணவரிடம் பேச தொடங்கினோம். அவர் கூறும்போது...

''நான் இந்த மார்க் வாங்குவேன் என எதிர்பார்த்தேன். இன்னும் சொல்ல போனால் கொஞ்சம் கூடுதல் மார்க் வாங்குவேன் என நினைத்தேன். தமிழில் 82 மதிப்பெண், ஆங்கிலத்தில் 79 மதிப்பெண், கணிதத்தில் 93 மதிப்பெண், அறிவியலில் 87 மதிப்பெண், சமூக அறிவியலில் 96 மதிப்பெண் எடுத்துள்ளேன். என்னை தலைமை ஆசிரியர், ஆசிரியர்-ஆசிரியைகள், உடன் படிக்கும் மாணவர்கள் பாராட்டினார்கள்.

அதே போல எனது தொடக்க பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகளும் நேரில் வந்து பாராட்டினார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சிறு வயதில் இருந்து என்னுடைய அம்மா, மாமா குடும்பத்தினர் என்னை பார்த்து கொள்ள ரொம்ப சிரமப்படுகிறார்கள்.

எங்க அம்மா ஏரி வேலைக்கு செல்கிறார்.சம்பளம் குறைவாக இருந்ததால் இப்போது சிக்காரிமேட்டில் கார்மெண்ட்ஸ் வேலைக்கு செல்கிறார். அடுத்து 11-ம் வகுப்பு கணிதம், உயிரியல் பாடப்பிரிவு எடுத்து படிக்க போகிறேன். நெடுமருதி உயர்நிலைப்பள்ளி என்பதால், இனி குருபரப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்க இருக்கிறேன்.

அரசு பள்ளியில் என்னை நன்றாக பார்த்து கொள்கிறார்கள். தனியார் பள்ளியில் சேரும் ஆசையெல்லாம் இல்லை. இப்போது வரை நெடுமருதி ஸ்கூலுக்கு சைக்கிளில்தான் சென்று வருகிறேன். கொஞ்ச தூரம் என்பதால் சென்றுவந்துவிட்டேன். இனி குருபரப்பள்ளிக்கு சைக்கிளில் போக முடியாது. அதனால் ஆட்டோவில் அல்லது பஸ்சில் தான் போக இருக்கிறேன்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்க அம்மாவிடமும், என்னிடமும் பேசியது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எனது கல்விக்கும், எனது மருத்துவத்திற்கும் தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறினார். எங்க அம்மாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார். நான் எப்படியும் நன்றாக படித்து விடுவேன். அறுவை சிகிச்சை மூலம் எனக்கு 2 கைகளும் வந்துவிட்டால் போதும். எங்க அம்மாவுக்கு அதை விட சந்தோஷம் இந்த உலகத்தில் வேறு எதுவுமில்லை'' இப்படி கூறிய மகன் கிருத்திவர்மாவை உணர்ச்சி பெருக்குடன் பார்த்த தாய் கஸ்தூரியிடம் பேசினோம்.

''நினைச்சு கூட பார்க்க வில்லை. என்னென்னமோ நடந்து விட்டது. வாழ்க்கையில் கஷ்டத்தை தவிர வேறு எதையும் பார்த்தது இல்லை. எனது கணவரும் பிரிந்து சென்றுவிட, பரிதவித்த எனக்கு ஆறுதல் எனது மகனும், பிறந்த வீடும் தான். இப்போது வரை எனது அண்ணன் மற்றும் குடும்பத்தினர் என்னையும், என் மகனையும் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள்.

ஆசிரியர்களும் எனது மகனை நன்றாக ஊக்குவித்தார்கள். 11-ம் வகுப்பு அவனை அரசு பள்ளியில் தான் சேர்க்க இருக்கிறேன். தனியார் பள்ளிகள் கூட வந்து பேசினார்கள். அவங்களுக்கு நான் நன்றி சொல்லி கொள்கிறேன்.

நாங்கள் கஷ்டப்பட்ட போது என் பிள்ளையை அரசு பள்ளியில்தான் சேர்த்தேன். அவர்கள் நன்றாக பார்த்து கொண்டார்கள். இப்போது நான் மனசு மாறி, தனியார் பள்ளியில் சேர்த்தால் அது நன்றாக இருக்காது.

அதனால் அவன் அரசு பள்ளியில் தான் 11, 12-ம் வகுப்பு படிப்பான். அவனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து தருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் சொல்லி இருக்கிறார். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவனுக்கு 2 கைகளும் அறுவை சிகிச்சை மூலம் வந்தால், அதை விட எனக்கு உலகத்தில் வேறு சந்தோஷம் கிடையாது.

எனது மகனை பொறுத்தவரையில் அவனுக்கு 2 கைகளும் இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மை ஒருபோதும் கிடையாது. சைக்கிள் ஓட்டுவான். பாடங்களை எழுதுவான். படிப்பான். ஸ்பூன் வைத்து அவனே சாப்பிடுவான். எல்லா கஷ்டமும் பட்டுட்டோம். தமிழ்நாடு அரசு மூலமாக இனி நானும், எனது மகனும் நல்லா இருப்போம் என நம்புகிறேன்'' என்றார் மன தைரியத்துடன்.

விதி வசத்தால் கைகளை இழந்தாலும், தன்னம்பிக்கையோடு இருந்தால் போதும், எதிலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கும் மாணவர் கிருத்தி வர்மாவை நாமும் வாழ்த்தலாமே!.

Tags:    

மேலும் செய்திகள்