கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பாலக்காடு மாவட்டத்தில் மலம்புழா அணை உள்ளது. இதையொட்டி பாலக்காடு ராக்தோட்டம் உள்ளது. சுமார் 1 கி.மீ. அளவுக்கு அமைந்துள்ள இந்த தோட்டத்தின் சிறப்புகளை சொல்லிமாளாது.
சண்டிகர் நகருக்குச் சென்றவர்கள் அங்கு நெக்சந்த் உருவாக்கியுள்ள பாறை சிற்ப அருங்காட்சியகம் (ராக் கார்டனை) பார்க்காமல் திரும்பியிருக்க மாட்டார்கள். அவருடைய யோசனையை இங்கும் செயல்படுத்திஇருக்கிறார்கள்.
அதேபோன்ற ஒரு ராக் தோட்டத்தை மலம்புழா அணை அருகே அமைத்துள்ளனர்!
இனி உபயோகப்படவே வாய்ப்பில்லை என்ற கட்டுமானப் பொருட்கள் நிச்சயம் தஞ்சமடைவது குப்பைத் தொட்டிகளாகத்தான் இருக்கும்.
மலம்புழா அணை அருகே சிதைந்த, இடிக்கப்பட்ட எந்த கட்டுமானப் பொருட்களையும் தூக்கி எறிவதில்லை. சிறுகற்கள், பெருங்கற்கள், செங்கல், சிமெண்ட், காரை என எதுவாக இருந்தாலும் ராக் தோட்டத்திற்கு வந்துவிடுகிறது. இந்தப் பொருட்களை இணைத்து இதுவரை 400-க்கும் அதிகமான சிற்பங்களை இங்கு உருவாக்கியுள்ளனர்!
ஒரு எலெக்ட்ரிக் கம்பெனி இனி பயன்படாது என தூக்கியெறிந்த பியூஸ் கேரியர்களை வைத்து இங்கு ஒரு நீண்ட சுவரையே எழுப்பியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
பயன்படாத மொசைக் வண்ணக்கற்களாக இருந்தால் பாதைகளாகவும், தடுப்புகளாகவும், சிற்பங்களாகவும் மாற்றிவிடுகிறார்கள்.
ஒவ்வொரு சிற்பத்தையும் பார்க்க கோடிக்கண்கள் வேண்டும் என்று சொல்லுமளவுக்கு கலைநயத்துடன் உருவாக்குகிறார்கள்.
வாத்துகள், பாம்புகள், யானைகள், மயில்கள், கங்காருகள் என விலங்குகள் மட்டுமல்ல, மனித உருவங்களும் வித்தியாசமான கற்களில் சிற்பங்களாக இங்கு காணலாம்.
இந்த தோட்டம் கேரள மன்னர் மகாபலிக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. இங்கு உள்ள அறைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான கேரள நாடகக் கலை, நடனம், பாரம்பரியக் கலைகள், கேரள வாத்தியங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு வாலிபர் எடைக்கல்லை தூக்கிநிற்பது போலவும், அம்மா-குழந்தை, சங்கீத விற்பன்னர்கள் என பல நுணுக்கமான சிலைகளைச் செதுக்கியிருக்கிறார்கள்.
உடைந்த மற்றும் கைவிடப்பட்ட கருங்கற்கள், பாட்டில், கேன், வளையல்கள், கண்ணாடி பாட்டில்கள், டைல்ஸ், கூழாங்கற்கள், சூளைசெங்கல் மற்றும் உஷ்ண வெளியேற்ற தடுப்பு கற்கள் உள்ளிட்ட தூக்கி எறியப்பட்ட கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்திதான் மேற்கூறிய சிற்பங்களை செய்து அசத்தியிருக்கிறார்கள்.
இது 1996-ம் ஆண்டு திறக்கப்பட்டது. மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, புதிய பொலிவுடன் சமீபத்தில் இந்த கார்டனை திறந்திருக்கிறார்கள்.
மலம்புழா அணையைப் பார்க்கச் சென்றால், மறக்காமல் இந்த கார்டனையும் பார்த்து விட்டு வாருங்கள்.
ஒரு எலெக்ட்ரிக் கம்பெனி இனி பயன்படாது என தூக்கியெறிந்த பியூஸ் கேரியர்களை வைத்து இங்கு ஒரு நீண்ட சுவரையே எழுப்பியிருக்கிறார்கள்