சதுரங்கத்தில் சாதிக்க உதவும் நல் உள்ளம்
பொருளாதார ரீதியால் முடங்கியிருக்கும் பல குழந்தைகளுக்கு இலவசமாக சதுரங்க பயிற்ச்சியளித்து வருகிறார், ராகவன்.;
''எனக்கு சதுரங்கம் ரொம்பவே பிடிக்கும். இருப்பினும் குடும்ப சூழல் காரணமாக முறையாக பயில முடியவில்லை. அதனால் சுயமாகவே கற்றுக்கொண்டு, பல சதுரங்க போட்டிகளை வென்றிருக்கிறேன். இப்போது என்னை போன்று ஆர்வம் இருந்தும் பொருளாதார ரீதியால் முடங்கியிருக்கும் பல குழந்தைகளுக்கு இலவசமாக சதுரங்க பயிற்சி அளிக்கிறேன்'' என முதல் அறிமுகத்திலேயே தனி கவனம் பெறுகிறார், ராகவன்.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலைச் சேர்ந்த இவர், பொறியியல் பட்டதாரி. சிறுவயதில் சதுரங்கம் தொடர்பான செய்திகளால் ஈர்க்கப்பட்டு, பிறகு தாமாகவே சதுரங்கம் விளையாட பழகியிருக்கிறார்.
''சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்தை பார்த்துதான், எனக்கு சதுரங்கம் விளையாடும் ஆசையே வந்தது. அவரது ஆட்டத்திறனை, அதனால் குவிந்த சாதனைகளையும் பார்த்துதான் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தேன். விளையாட்டு ஆசையும், ஆர்வமும் இருந்ததே தவிர, அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. அதனால் முறையான பயிற்சி இன்றியும், அனுபவ வீரர்களின் அறிவுரைகள் இன்றியும் சுயமாகவே என்னை வளர்த்து கொண்டேன். சதுரங்க ஆட்டத்திறனை சோதிப்பதற்காகவே பல போட்டிகளில் கலந்து கொண்டு என்னை மதிப்பிட்டு கொள்வேன்'' என்றார். இவர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
''சுயமாகவே சதுரங்கம் பயில முடியும், போட்டிகளில் வெல்ல முடியும் என்பதற்கு நானே முன்னுதாரணம். சதுரங்க ஆசையோடு பொறியியல் பட்டப்படிப்புகளை முடித்து சில காலங்கள், ஆசிரியராகவும் பணியாற்றினேன்.
அந்த சமயத்தில் தான், ஏழை மாணவர்களுக்கு சதுரங்கம் சொல்லிக்கொடுக்கும் எண்ணம் வந்தது. நிறைய மாணவர்களுக்கு பயிலும் ஆசை இருக்கிறது. ஆனால் பொருளாதார ரீதியில் அவர்களால் எதுவுமே பயில முடியவதில்லை. என்னை போன்று அவர்களும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக, என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். குறிப்பாக சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் ஏழை-எளிய மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி வழங்கி வருகிறேன்.
8 வருடங்களாக அரங்கேறும் சதுரங்க பயிற்சியில், தற்போது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு சதுரங்க பயிற்சியும் வழங்கி வருகிறேன்'' என்றவர், ''முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம். நம்மால் சாதிக்க முடியாத பட்சத்தில், அடுத்தவர்களை சாதனையாளர்களாக மாற்றி, மன நிறைவு பெறலாம்'' என்ற நம்பிக்கை வரிகளோடு விடைகொடுத்தார்.
இப்போது ஆன்லைன் மூலமாக, வெளி மாநில குழந்தைகளுக்கும், வெளிநாட்டில் வளரும் இந்திய குழந்தைகளுக்கும் சதுரங்கம் கற்றுக் கொடுக்கிறேன்.
-ராகவன்