விலங்குகளை பாதுகாக்க போராடும் 'நல் உள்ளம்'..!
அல்பனா பார்டியா, விலங்குகள் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு சார்ந்து கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வனவிலங்குகள் மறுவாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட்டு வரும் ‘பீப்பிள் பார் அனிமல்ஸ்’ என்கிற என்.ஜி.ஓ. நிறுவனர்களில் இவரும் ஒருவர்.;
"ஒவ்வொரு குழந்தையும் இளம் வயதிலேயே விலங்குகளுடன் வளர வேண்டும்" என்பது அல்பனாவின் ஆசை. திருமணம் முடிந்த பிறகு பெங்களூருவில் செட்டிலாகினார். அங்கிருக்கும் செயிண்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். விலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக பணியாற்றவேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கியது. அந்த சமயத்தில்தான் நண்பர் ஒருவரிடமிருந்து வந்த அழைப்பு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. மிகப்பெரிய அரசியல் தலைவர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலரான மேனகா காந்தி விலங்குகளின் பிரச்சினைகள் தொடர்பாக 'ஹெட்ஸ் அண்ட் டெய்ல்ஸ்' என்கிற நிகழ்ச்சியை டி.வி.யில் நடத்தி வந்தார்.
"இந்த நிகழ்ச்சியில் வனவிலங்குகள் குறித்தும் அவற்றின் பாதுகாப்பு குறித்தும் மேனகா காந்தி பேசியதைப் பார்த்தேன். எனது ஆர்வத்திற்கு மேலும் உந்துதல் அளிப்பதாக அவரது பேச்சு அமைந்திருந்தது" என்கிறார் அல்பனா.
அல்பனாவுக்கு தனது நண்பர் மூலம் மேனகா காந்தி ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்டத்திலும் விலங்குகள் நல அமைப்பை தொடங்க விரும்புவது தெரிந்தது. பள்ளி அளவில்கூட இதை செயல்படுத்தலாம் என திட்டமிட்டிருப்பதாக அறிந்தார். எனவே மேனகா காந்தியின் நாடு தழுவிய முயற்சியின் கீழ் நம்ரதா துகர், கவுரி மைனா ஹிரா, ஆருஷி பொதார் ஆகியோருடன் அல்பனா பெங்களூருவில் 'பீப்பிள் பார் அனிமல்' (PfA) தொடங்கினார்.
''காயம்பட்ட விலங்குகளுக்கு பராமரிப்பு மற்றும் சிகிச்சையளித்து அதன் வசிப்பிடத்திற்கே கொண்டு சேர்ப்பதே எங்களது என்.ஜி.ஓ.வின் நோக்கம். இத்தனை ஆண்டுகளில் 200 வகைகள் கொண்ட 25 ஆயிரத்திற்கும் அதிகமான வன விலங்குகளை மீட்டு சிகிச்சையளித்துள்ளோம். அதுமட்டுமல்ல, வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விலங்குகளின் நல்வாழ்வை உறுதிபடுத்துவது இந்த என்.ஜி.ஓ.வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று'' என்றார்.
ஆரம்பத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதில் இவர்கள் சவாலை சந்தித்தனர். அந்த சமயத்தில் பெங்களூருவில் சர்க்கஸ் நடைபெற்றது. வன விலங்குகள் உட்பட பல விலங்குகள் அதில் பல்வேறு சாகசங்கள் செய்ய வைக்கப்பட்டன. விலங்குகள் இதுபோல் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை அல்பனாவும், மற்றவர்களும் மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களிடம் பேசினார்கள்.
மாணவர்களிடம் இவர் கேட்கும் முதல் கேள்வி: ''தண்ணீர் எங்கிருந்து வருகிறது?''. இதற்கு சுவாரசியமாக கதை போல் விவரிக்கிறார் அல்பனா. "இந்தக் கேள்விக்கு நான் புலிகளிடம் இருந்து என்று பதிலளிப்பேன். இது குழந்தைகளின் கற்பனை சக்தியை தூண்டும். சர்க்கஸ் நடத்துபவர்கள் காடுகளில் இருக்கும் புலிகளை சிறைபிடித்துவிட்டால் மான்கள் சுதந்திரமாக அச்சமின்றி சுற்றித்திரிந்து மொத்த புற்களையும் மேய்ந்துவிடும். இதனால் மழை பெய்யும்போது மழைநீரில் மண் அடித்து செல்லப்படும். பெங்களூருவிற்கு தண்ணீர் விநியோகிக்கும் திப்பகொண்டனஹள்ளி நீர்தேக்கம் தடைப்படும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்" என்று விவரிக்கிறார்.
சர்க்கஸில் போதிய உணவின்றி சிங்கங்கள் எலும்பும் தோலுமாக காட்சியளித்தன. இரும்பு கம்பியால் அவற்றின் உடலில் சூடு வைக்கப்பட்ட காயங்கள் இருந்தன. இவற்றை புகைப்படம் எடுத்து மாணவர்களுக்கு காட்டினார். இவை குழந்தைகள் மனதில் ஆழப்பதிந்தன.
"இதுபோன்ற கொடுமைகள் எல்லா சர்க்கஸ் நிறுவனங்களிலும் நடப்பதில்லை. ஆனால் ஒருசில சர்க்கஸ் நிறுவனங்களில், இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சிங்கம், புலி போன்ற விலங்குகள் நெருப்பைக் கண்டு பயப்படும். இவை சர்க்கஸில் நெருப்பு வளையத்திற்குள் குதிக்க வைக்கப்படுகின்றன. இந்த விலங்குகள் அச்சத்தில் இப்படி செய்கிறதே தவிர விருப்பப்பட்டு செய்யவில்லை" என்று குழந்தைகளிடம் விளக்குகிறார்.
1990-களில் பெங்களூருவில் வேட்டையாடுவது, விலங்குகளை பலி கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை பின்பற்றி வந்த 56 கிராமங்களுக்கு சென்றார். தன்னுடைய என்.ஜி.ஓ. தன்னார்வலர்களுடன் இணைந்து மிருகவதை குறித்து பள்ளி மாணவர்களுக்கும், கிராமத்து பெண்களுக்கும் விளக்கினார். முதலில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
"என் கணவரின் காரில் ஒரு முறை சென்றிருந்தேன். கிராம மக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் ஆயுதங்களுடன் சாலையை மறித்தார்கள். என் காரை உடைத்துவிடுவார்கள் என்று பயந்தேன். தன்னார்வலர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து வெளியேறி அமைதியாக கைகட்டி நின்றார்கள். பின்னர் ஒருவழியாக கிராம மக்கள் அமைதியானார்கள்" என்று அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் இவரது குழுவினர் தொடர்ந்து கிராமத்திற்கு சென்றார்கள். இறுதியாக மக்கள் புரிந்துகொண்டனர். ''இன்று எங்களுடைய என்.ஜி.ஓ. நாட்டின் மிகப்பெரிய விலங்குகள் நல அமைப்புகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இதன் முயற்சியால் யானைகள் பயிற்சி முகாம்கள் நிறுத்தப்பட்டன, உரிய அனுமதியின்றி நடத்தப்பட்ட வான்கோழி பண்ணைகள் தடை செய்யப்பட்டன, ஒட்டகங்கள் சட்ட விரோதமாக கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. இப்படி பல்வேறு உயிரினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்'' என்றவர், ஊரடங்கு காலத்தில் விலங்குகளை பாதுகாக்க பம்பரமாய் சுழன்றிருக்கிறார்.
ஊரடங்கு சமயத்தில் இந்த என்.ஜி.ஓ. உணவு ஆம்புலன்ஸ் மூலம் நாய்கள், பூனைகள், மாடுகள், குதிரைகள் என எத்தனையோ உயிரினங்களின் பசியைப் போக்கியுள்ளது.
வனவிலங்குகளை மீட்டு மறுவாழ்வளிக்கும் நவீன மையத்தை நிறுவவும் நாடு முழுவதும் வனவிலங்குகள் மருத்துவமனைகளைத் திறக்கவும், விலங்குகளுக்கான பயிற்சி மையங்களை நிறுவவும், மாவட்ட மற்றும் கிராம அளவில் வனவிலங்கு பராமரிப்பு மையங்கள் அமைக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
"மாற்றத்தை ஏற்படுத்த முதலில் யாராவது ஒருவர் முன்வரவேண்டும். அதற்கு தேவையான ஆதரவு நிச்சயம் கிடைக்கும். மக்கள் உதவத் தயாராக இருக்கிறார்கள். தேவையான தீர்வுகளும் உள்ளன. பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை குழந்தைகள் தெரிந்துகொண்டால் வெற்றி எளிதாகிவிடும் என்று நம்புகிறேன்" என்கிறார் அல்பனா.
காயம்பட்ட விலங்குகளுக்கு பராமரிப்பு மற்றும் சிகிச்சையளித்து அதன் வசிப்பிடத்திற்கே கொண்டு சேர்ப்பதே எங்களது என்.ஜி.ஓ.வின் நோக்கம். இத்தனை ஆண்டுகளில் 200 வகைகள் கொண்ட 25 ஆயிரத்திற்கும் அதிகமான வன விலங்குகளை மீட்டு சிகிச்சையளித்துள்ளோம்.