சுமையாகும் 'ஹேண்ட் பேக்'

பெண்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது ஹேண்ட் பேக் எடுத்து செல்ல ஒருபோதும் மறக்கமாட்டார்கள். எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும் அவர்களுடன் சளைக்காமல் ஹேண்ட் பேக் பின் தொடர்ந்து கொண்டிருக்கும். தாங்கள் எடுத்து செல்லும் ஹேண்ட் பேக் ஸ்டைலாகவும், அணிந்திருக்கும் ஆடைக்கு பொருத்தமாகவும் இருக்க வேண்டும் என்பதில் நிறைய பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.;

Update:2023-09-30 14:45 IST

ஒருகாலத்தில் அப்படி அணிந்து சென்றது பேஷனாக பார்க்கப்பட்டது. இன்றோ அது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அதேவேளையில் மற்றவர்கள் மத்தியில் தாங்கள் அணிந்திருக்கும் ஹேண்ட் பேக் மிடுக்குடன் தெரிய வேண்டும் என்பதில் கவனமுடன் இருக்கும் பெண்கள், அதை தேர்ந்தெடுக்கவும், அதை முறைப்படி பயன்படுத்தவும் தவறிவிடுகிறார்கள். அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேர்வு முறை

நம்முடைய பயன்பாடு என்ன?, எதற்காக வாங்குகிறோம்?, எங்கு செல்கிறோம்?, எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்?, அதுவரை பயன்படுத்துவதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும்?, அதை இந்த ஹேண்ட் பேக்கில் வைக்க முடியுமா?... இவற்றைப்பற்றி நிறைய பெண்கள் சிந்திப்பதில்லை.

சிலர் தங்கள் தேவையைவிடப் பெரிய ஹேண்ட் பேக் வாங்கியிருப்பார்கள். சிலரோ, சிறியதாக வாங்கி, அதில் ஏராளமான பொருட்களை குவித்து வைத்திருப்பார்கள். அதனால் திட்டமிட்டுதான், ஹேண்ட் பேக் வாங்கவேண்டும். நம்முடைய தேவைக்கு ஏற்ற ஹேண்ட் பேக் வகைகளையே வாங்க வேண்டும்.

தேவையான பொருட்கள்

பெண்களை பொறுத்தவரை ஹேண்ட் பேக்கில் வைத்திருக்கும் பொருட்கள் எல்லாமே சிறிய அளவு கொண்டதாக, எடை குறைவானதாக இருக்கும். அதனால் வெளியே புறப்படும்போது தேவைப்படும் பொருட்கள் என்று நினைத்து அத்தனையையும் திணித்துவைத்துவிடுவார்கள். அப்போது அது சுமையாக தெரியாது. வெளியே அலைந்து திரியும்போதுதான் பையில் இருக்கும் பொருட்கள் சுமையாக மாறுவதை உணருவார்கள். அதனால் ஹேண்ட் பேக் தேர்வு முறையுடன், அதில் எடுத்து செல்ல இருக்கும் பொருட்களையும் சரிவர தேர்ந்தெடுக்க வேண்டும்.

எப்படி இருக்க வேண்டும்?

தோளில் மாட்டிச் செல்லும் ஹேண்ட் பேக்குகள் அதிகபட்சமாக 2 முதல் 3 கிலோ எடை மட்டுமே இருக்க வேண்டும். அதை விடுத்து ஹேண்ட் பேக்கில் அதிக சுமைகளை ஏற்றும்போது தோளில் அழுத்தம் அதிகமாகி ஒரு பக்கமாக சாய்ந்து நடக்கும் நிலை உருவாகும். அதை தவிர்க்க ஹேண்ட் பேக் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். இப்போது நிறைய பாக்கெட்டுகள் வைத்த ஹேண்ட் பேக்குகள் கிடைக்கின்றன. அவற்றில் பொருட்களை முறைப்படுத்தி வைக்கும்போது எல்லா சுமையும் ஒரே இடத்தில் குவிவது தடுக்கப்படும்.

'ஹேண்ட் பேக்' பயன்பாட்டில் இவ்வளவு குளறுபடிகள் என்றால், பெண்கள் பயன்படுத்தும் ஷோல்டர் பேக் எனப்படும் தோள் பையிலும் சில பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்.

தோள் பை

கல்லூரிக்குச் செல்பவர்கள், அலுவலகம் செல்பவர்களாக இருந்தால் மடிக்கணினியும் அவசியம் எடுத்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. அதோடு தண்ணீர் பாட்டில், புத்தகம், நோட்டு, மதிய உணவு, செல்போன், கண்ணாடி போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அது நீங்கள் பயன்படுத்தும் தோள் பையின் சுமையை அதிகப்படுத்திவிடும். அதனால் தோளில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும். எலும்புகளுக்கும் அழுத்தம் கூடுவதால் கைவலி, கழுத்துவலி, முதுகுவலி, தலைவலி போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.

உடல் கோளாறுகள்

நம்முடைய தோள்பட்டையில் இயற்கையாகவே ஒரு வளைவு இருக்கும். அது கடினமான தோள் பைகளை சமநிலைப்படுத்தி எலும்புக்குப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். ஆனால் சுமையால் தொடர்ந்து ஒரே இடத்தில் அழுத்தம் அதிகமாகும்போது அந்த வளைவுகள் பாதிக்கப்படுகின்றன. அதனால் உடல் சமநிலையை இழக்கிறது. கனமான தோள் பை வைத்திருப்பவர்கள் சற்று முன்னோக்கி வளைய வேண்டி இருக்கும். அது முதுகெலும்பின் வரிசையை தாறுமாறாக தடம் மாற்றிவிடும். இதனால் வலி ஏற்படும். என்ன காரணத்திற்காக வலி ஏற்படுகிறது என்பதை ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியாது. அதனால் தேவையற்ற பல சிகிச்சைகள் செய்ய வேண்டி இருக்கும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்:



கனமான பைகளை எடுத்துச் செல்லும் போது ஹைஹீல்ஸ் செருப்பு அணியக் கூடாது. மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். அப்போது தான் உடலை சமநிலைப் படுத்த முடியும்.

அதிக நேரம் தோளில் சுமப்பதால் கைகளும், விரல்களும் மரத்துப் போய்விடக் கூடும். ரத்த ஓட்டம் தடைப்படுவதால் இந்த நிலை ஏற்படும். இதற்கு சிகிச்சையாக ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.

எடை அதிகமான பைகளை வாங்கக்கூடாது. குறைந்த எடை கொண்ட பைகளை வாங்குங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்