பாரீஸ் ஒலிம்பிக்; பேட்மிண்டனில் காலிறுதிக்குள் நுழைந்து இந்திய ஜோடி வரலாற்று சாதனை
பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் 21-17, 21-14 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்றுள்ளது.
பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் குரூப்-சி பிரிவில் இந்தியாவை சேர்ந்த சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூகாஸ் கார்வீ மற்றும் ரோனன் லபார் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
46 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 21-17, 21-14 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்றுள்ளது. உள்நாட்டில் போட்டி நடந்த நிலையில், மக்கள் பிரான்ஸ் ஜோடிக்கு ஆதரவை வழங்கி உற்சாகப்படுத்தி கொண்டே இருந்தனர்.
எனினும், இந்திய ஜோடி இதனையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் அதிரடியாக விளையாடி நேர் செட் கணக்கில் பிரான்ஸ் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது. காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக பேட்மிண்டன் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி காலிறுதிக்குள் நுழைந்து சாதனை படைத்து உள்ளது.
இந்த பிரிவில், ஜெர்மனியின் மார்வின் சீடல் மற்றும் மார்க் லாம்ஸ்பஸ் ஜோடியை எதிர்த்து 2-வது போட்டியில் இந்திய ஜோடி விளையாட இருந்தது. எனினும், மூட்டில் ஏற்பட்ட காயத்தினால் மார்க் விளையாடவில்லை. இதனால், 2-வது போட்டி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, 3-வது போட்டியில் இந்திய ஜோடி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நாளை நடைபெற உள்ள போட்டியில், இந்தோனேசியாவை சேர்ந்த பஜார் ஆல்பியான் மற்றும் முகமது ரியான் ஆர்தியாந்தோ ஜோடியை எதிர்த்து விளையாட உள்ளது. பதக்கம் வெல்பவர்களின் வரிசையில் இந்த இந்திய ஜோடி வலிமையாக உள்ளது.