சுல்தான் கோப்பை ஆக்கி: ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெற்றி
12-வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நேற்று தொடங்கியது.
ஜோஹர்,
12-வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஆக்கி (21 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி மலேசியாவில் உள்ள ஜோஹரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
தொடக்க நாளில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இந்திய அணியில் அமீர் அலி (12-வது நிமிடம்), குர்ஜோத் சிங் (36-வது நிமிடம்), சவுரப் ஆனந்த் (44-வது நிமிடம்), அங்கித் பால் (47-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
ஜப்பான் அணியில் சுபாசா தனகா (26-வது நிமிடம்), ரகுசெய் யமானகா (57-வது நிமிடம்) பதில் கோல் திருப்பினர். இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை இன்று சந்திக்கிறது.