சுல்தான் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது இந்தியா

12-வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது,

Update: 2024-10-26 01:10 GMT

image courtesy: Hockey India twitter

ஜோஹர்,

6 அணிகள் இடையிலான 12-வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஆக்கி (21 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களம் கண்டது.

தொடக்கம் முதல் கடைசி நிமிடம் வரை பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது. இந்திய அணியில் குர்ஜோத் சிங் 6-வது நிமிடத்திலும், ரோகித் 17-வது நிமிடத்திலும், தலிம் பிரியோபார்தா 60-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நியூசிலாந்து அணியில் ஜான்டி எல்ம்ஸ் (17, 32, 45-வது நிமிடம்) 3 கோல் போட்டார்.

மற்ற ஆட்டங்களில் இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், ஆஸ்திரேலியா 9-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும் தோற்கடித்தன. லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் 3 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் தலா 10 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன.

இதையடுத்து கோல் வித்தியாசம் முன்னிலை அடிப்படையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் முதல் இரு இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. இன்று நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்