பெண்கள் சர்வதேச கிரிக்கெட்; மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீராங்கனை

நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

Update: 2024-10-21 04:06 GMT

Image Courtesy: @T20WorldCup

துபாய்,

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா (பி பிரிவு) அணிகள் தங்கள் பிரிவில் முறையே 'டாப்-2' இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்காளதேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

முதலாவது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியும், 2-வது அரையிறுதியில் நியூசிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 32 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஆடியதன் மூலம் நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ், இந்திய முன்னாள் வீராங்கனையான மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஆடிய (டெஸ்ட் + ஒருநாள் + டி20) வீராங்கனை என்ற பட்டியலில் மிதாலி ராஜை (333 ஆட்டம்) முந்தி சுசி பேட்ஸ் (334 ஆட்டம்) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஆடிய வீராங்கனைகள் பட்டியல்;

சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 334 ஆட்டம்

மிதாலி ராஜ் (இந்தியா) - 333 ஆட்டம்

எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) - 322 ஆட்டம்

ஹர்மன்ப்ரீத் கவுர் (இந்தியா) - 316 ஆட்டம்

சார்லோட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து) - 309 ஆட்டம்

Tags:    

மேலும் செய்திகள்