இந்தியாவுக்கு எதிராக இம்முறை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவோம் - நாதன் லயன் உறுதி

இந்தியாவை 5 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று லயன் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-17 08:34 GMT

image courtesy: PTi

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் அந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்தால் விராட் கோலி, ரிஷப் பண்ட் போன்ற இந்திய பேட்ஸ்மேன்களை தங்களால் வீழ்த்த முடியும் என அந்நாட்டின் ஸ்பின்னர் நாதன் லயன் கூறியுள்ளார். மேலும் இம்முறை இந்தியாவை 5 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று அவர் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "எங்களுக்கு பெரிய ரன்கள் தேவை. பெரிய சதங்கள் அடிப்பதற்கான திறமையான பேட்ஸ்மேன்கள் எங்களிடம் உள்ளனர். ஸ்டீவ் சுமித், மார்னஸ் லாபுசாக்னே, டிராவிஸ் ஹெட் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 101 அல்லது 107 ரன்கள் அடிப்பதை நான் விரும்பவில்லை. மாறாக அவர்கள் 180 அல்லது 200 ரன்கள் அடிக்க விரும்புகிறேன். சில நாட்கள் இடைவெளி எடுத்து வந்தால் என்னுடைய அணியின் வெற்றியில் என்னால் பங்காற்ற முடியும் என்று உறுதியாக சொல்வேன்.

ஜெய்ஸ்வால் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பற்றி இங்கிலாந்தின் டாம் ஹார்ட்லியிடம் பேசி கேட்டறிந்தேன். மிடில் ஆர்டரில் சர்பராஸ் அல்லது ராகுல் வருவாரா என்பது தெரியவில்லை. இந்தியா முழுவதும் சூப்பர்ஸ்டார்களை கொண்ட வீரர்களாகும். விராட் கோலி அங்கே இருப்பார். ரிஷப் பண்ட் வங்காளதேச தொடரில் விளையாட உள்ளார். எனவே அந்த 5 போட்டிகள் கொண்ட தொடர் பெரிதாகி வருகிறது.

அதனால் டெஸ்ட் போட்டிகள் இறப்பதாக மக்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாங்கள் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்களாகி விட்டது. அதைப்பற்றி இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய போதே நான் சிந்திக்கத் தொடங்கினேன். எனது கண்களை நீண்ட காலமாக வைத்துள்ளேன். இம்முறை ஆஸ்திரேலியா 5 - 0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று நான் கணிக்கிறேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்