இன்றைய நாள் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை - பேட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

Update: 2024-11-08 13:56 GMT

Image Courtesy: AFP

அடிலெய்டு,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான் 2வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 35 ரம் எடுத்தார்.

பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ரவுப் 5 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 164 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 26.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 169 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி வரும் 10ம் தேதி பெர்த்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் தோல்வி கண்ட பின் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, இன்றைய நாள் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. மேலும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆனால் நாங்கள் எடுத்த 163 ரன் குறைவானது. அதற்கு மேல் எடுத்திருக்க வேண்டும். ஆடுகளத்தில் கொஞ்சம் சீம் இருந்தது.

நாங்களும் பந்துவீசும் போது பீல்டர்களை உள்ளே வைத்து தாக்குதல் தொடுத்தோம். இருந்தபோதிலும் நாங்கள் வெற்றி பெற முடியவில்லை. எங்களுக்கு தற்போது ஒரு வாரம் இந்திய தொடருக்கு முன்பாக இருக்கிறது. எங்களுக்கு நல்ல பயிற்சி செஷன்கள் தேவைப்படுகிறது. எங்களுடைய மனம் இப்பொழுது சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு மாறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்