டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. உலக சாதனை படைத்த இந்திய உள்ளூர் வீரர்

இவரை ஐ.பி.எல். மெகா ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை.;

Update:2024-12-03 15:38 IST

image courtesy: twitter/@GCAMotera

இந்தூர்,

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான குஜராத் அணி, அவ்னீஷ் சுதா தலைமையிலான உத்தரகாண்ட் அணியை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த உத்தரகாண்ட் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சமர்த் ஆர் மற்றும் தாரே அரைசதம் அடித்தனர். குஜராத் தரப்பில் விஷால் ஜெய்ஸ்வால் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி வெறும் 13.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 185 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக உர்வில் படேல் 115 ரன்கள் அடித்தார். இவர் வெறும் 36 பந்துகளில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இவர் ஏற்கனவே நடப்பு சீசனில் திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் 28 பந்துகளில் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு வீரரும் படைத்திராத சாதனையை அவர் படைத்துள்ளார்.

அதன் விவரம்:-

டி20 போட்டிகளில் 40-க்கும் குறைவான பந்துகளை எதிர்கொண்டு 2 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை உர்வில் படேல் படைத்துள்ளார்.

கடந்த ஐ.பி.எல். சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இவரை நடந்து முடிந்த மெகா ஏலத்தில் எந்த அணிகளும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்