டி.என்.பி.எல்: சேலம் அணிக்கு எதிராக நெல்லை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2024-07-11 18:52 GMT

சேலம்,

8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரில் சேலத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதலே நெல்லை அணி சிறப்பாக பந்துவீசி எதிரணியை மிரட்டியது. நெல்லை அணியின் அபார பந்துவீச்சால் சேலம் அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தடுமாறினர். சிலருக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற தவறினர். அணியில் அதிகபட்சமாக ராபின் 23 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் சேலம் அணி 19.2 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நெல்லை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சோனு யாதவ், 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் மோகித் ஹரிஹரன்(0), அருண் கார்த்திக் (11) அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், அடுத்து களமிறங்கிய அஜிதேஷ் குருசாமி நிலைத்து நின்று ஆடி 45 ரன்கள் குவித்தார். 5 பவுண்டரிகளை விளாசிய லக்ஸ்மேஷா குருசாமி, 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். இதையடுத்து 18.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்து நெல்லை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்