இது எங்களுக்கு எச்சரிக்கை - இந்தியாவுக்கு எதிரான தோல்வி குறித்து கம்மின்ஸ்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது.;

Update:2024-11-26 16:09 IST

பெர்த்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 150 ரன்களும், ஆஸ்திரேலியா 104 ரன்களும் எடுத்தன.

பின்னர் 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா ஜெய்ஸ்வால் (161 ரன்), விராட் கோலி (100 ரன்) ஆகியோரது சதத்தால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 487 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 58.4 ஓவர்களில் 238 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், "உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தொடர் ஆரம்பிக்கும்போது நாங்கள் மிகச்சிறப்பாக தயாராக இருக்கிறோம் என்று நினைத்தேன். ஆனால் இதுபோன்ற தோல்வி நாங்கள் இன்னும் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டும் என்று எங்களை எச்சரித்துள்ளது.

இருந்தாலும் நிச்சயம் அடிலெய்டு டெஸ்ட் (2-வது போட்டி) போட்டிக்கு முன்னதாக நாங்கள் சிறப்பாக தயாராவோம் என்று நினைக்கிறேன். இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை விட 2-வது நாள் ஆட்டத்தில் பெருமளவு வித்தியாசம் இருந்தது. நாங்கள் இன்னும் வலைப்பயிற்சியில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்" என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்