விராட்டுக்கும் எனக்கும் இடையே ஒரு சிறிய கோடு இருக்கிறது - எம்.எஸ்.தோனி

சமீபத்திய பேட்டி ஒன்றில் விராட் கோலி உடனான உறவு குறித்து தோனி சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.;

Update:2025-03-25 02:45 IST
விராட்டுக்கும் எனக்கும் இடையே ஒரு சிறிய கோடு இருக்கிறது - எம்.எஸ்.தோனி

image courtesy: PTI

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி ஏராளமான சாதனைகளை படைத்து அசத்தி வருகிறார். உலக கிரிக்கெட்டில் தனி முத்திரையை பதித்து 'கிங்' கோலியாக வலம் வருகிறார். அவரது வளர்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கும் முக்கிய பங்கு உண்டு.

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அறிமுகம் ஆன புதிதில் அவரிடம் இருக்கும் திறமையை உணர்ந்த தோனி, அவருக்கு பெருமளவு ஆதரவு கொடுத்தார். அத்துடன் தான் தடுமாறிய கால கட்டங்களில் தோனி மட்டுமே மெசெஜ் செய்து ஆதரவு கொடுத்ததாக பல இடங்களில் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்நிலையில் விராட் கோலிக்கும் தனக்கும் இடையே உள்ள உறவு குறித்து சில கருத்துகளை மகேந்திரசிங் தோனி கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "நான் உறவை பற்றி பேசுவேன். ஆனால் அந்த மெசெஜை பற்றி அல்ல. அதை அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். அது மற்ற வீரர்கள் என்னிடம் வந்து ஆலோசனை கேட்க அனுமதிக்கிறது. என்னிடம் சொல்வது வெளியே வராது, அதை வேறு யாரும் அறிய மாட்டார் என்று அவர்கள் நம்புகின்றனர். அது போன்ற நம்பிக்கை முக்கியம். எனவே, நான் அதை அப்படியே வைத்திருக்கிறேன்.

நானும் விராட்டும், ஆரம்பத்திலிருந்தே வெற்றியில் பங்காற்ற விரும்புவர்கள். அவர் 40 - 60 ரன்களில் ஒருபோதும் மகிழ்ச்சியடைய மாட்டார். சதம் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருக்க விரும்புவார். அந்த பசி ஆரம்பத்திலிருந்தே அவரிடம் உள்ளது. அவர் தனது பேட்டிங்கை விரைவாக மேம்படுத்திக் கொண்டார். மேலும் சிறப்பாக செயல்படவும், ரன் குவிக்கவும் வேண்டும் என்ற விருப்பமே அவரைத் தொடர்ந்து வழிநடத்தியது.

இங்கே ஏதாவது வித்தியாசமாக செய்ய முடியும்? என்பது போன்ற விஷயங்களை என்னிடம் பேசுவார். அவருக்கு நேர்மையான கருத்துகளை வழங்கினேன். அப்படித்தான் எங்களுடைய உறவு வளர்ந்தது. ஆரம்பத்தில் கேப்டன் - புதிய வீரர் என்று தொடங்கிய நாங்கள் நிறைய பேசியபோது நண்பர்களாக மாறினோம். அதே சமயம் சீனியர் - ஜூனியர் என்ற சிறிய கோடு எங்களுக்கு இடையே இருப்பதாக கருதுகிறேன் ஆனால் இப்போதும் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்" என்று கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்