அவருடைய விக்கெட்டை வீழ்த்தியதும் தன்னம்பிக்கை அதிகரித்தது - ஆட்ட நாயகன் வாண்டர்சே பேட்டி

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வாண்டர்சே ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Update: 2024-08-05 03:08 GMT

கொழும்பு,

இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 240 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் மற்றும் அவிஷ்கா பெர்னண்டோ தலா 40 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வாண்டர்சே சுழலில் மொத்தமாக சிக்கியது. 42.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்தியா 202 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரோகித் 64 ரன்கள் அடிக்க இலங்கை தரப்பில் வாண்டர்சே 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இலங்கையின் இந்த வெற்றிக்கு 10 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய பங்காற்றிய வாண்டர்சே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டது குறித்து பேசிய வாண்டர்சே கூறுகையில், "நான் அணிக்குள் வரும்போது நிறைய அழுத்தம் இருந்தது. நான் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. இதற்கான பாராட்டை நான் எடுத்துக் கொள்வது எளிது. இருப்பினும் நான் எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கும் பாராட்டு கொடுக்க விரும்புகிறேன். ஏனெனில் 240 ரன்கள் அடித்த அவர்கள் நான் சிறந்த இடங்களில் பந்து வீச உதவினார்கள்.

எங்களின் நம்பர் 1 ஸ்பின்னர் ஹசரங்கா காயத்தால் வெளியேறினார். அப்போது வந்த நான் அணியின் நிலைமையையும் சமநிலையையும் புரிந்து கொண்டேன். அதனால் என்னை நானே தள்ளினேன். பிட்ச்சில் நல்ல உதவி இருந்தது. எனவே அதில் நான் நல்ல இடத்தில் பந்தை வீச முயற்சித்தேன். ரோகித் சர்மாவின் முதல் விக்கெட்டை எடுத்ததும் என்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்தது. அப்படியே அதிர்ஷ்டவசமாக நான் 6 விக்கெட்டுகளை எடுத்தேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்