நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா..? - கம்பீர் அளித்த பதில்
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.;
புனே,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி முடிந்ததும், ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் பொருட்டு பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படுமா என இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து கம்பீர் கூறியதாவது, நியூசிலாந்து தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக வீரர்களுக்கு 10-12 நாட்கள் ஓய்வு கிடைக்கும். அந்த ஓய்வு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு போதுமானது தான். ஆனால் இந்த டெஸ்ட் (புனே) முடிந்ததும் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையை கவனிப்போம். பும்ரா மட்டுமல்ல, மற்ற வேகப்பந்து வீச்சாளர்களின் நிலைமையை கண்காணிக்கிறோம்.
அவர்கள் தொடர்ந்து புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகவும் நீண்ட மிக முக்கியமான தொடர். எனவே 2-வது டெஸ்ட் போட்டியின் முடிவு மற்றும் அதில் பவுலர்கள் எத்தனை ஓவர்கள் வீசுகிறார்கள் என்பதை பொறுத்து பணிச்சுமையை நிர்வகிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.