ஐ.பி.எல்.2025: அந்த அணி 300 ரன்கள் அடித்து வரலாறு படைக்கும் - ஹனுமா விஹாரி கணிப்பு
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது.;

ஐதராபாத்,
கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் ஐ.பி.எல். டி20 தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்க உள்ளது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. முன்னதாக கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா அரங்கேறுகிறது.
அதிரடிக்கு பெயர் போன இந்த தொடரில் கடந்த சீசனில் நிறைய முறை 250 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெங்களூருக்கு எதிராக 287 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. இதனால் இம்முறை ஏதேனும் ஒரு அணி 300 ரன்கள் அடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்நிலையில் நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 300 ரன்கள் அடித்து வரலாறு படைக்கும் என்று இந்திய வீரர் ஹனுமா விஹாரி கணித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ஐதராபாத் அணி தனது பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்தி உள்ளது. டிராவிஸ் ஹெட்- அபிஷேக் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடும் வேளையில் இஷான் கிஷன் 3-வது இடத்தில் களமிறங்க உள்ளார். அவருக்கு அடுத்து கிளாசென், நிதிஷ் ரெட்டி என பேட்டிங் வரிசை அபாரமாக உள்ளது. அதன் காரணமாக அவர்களால் 300 ரன்கள் அடிக்க முடியும். நல்ல பேட்டிங் பிட்ச் கொண்ட மைதானத்தில் அது சாத்தியமாகும்.
அதிரடியாக விளையாடுவதற்கு சன்ரைசர்ஸ் அணி புதிய அளவுகோலை நிர்ணயித்துள்ளது. அதற்கு அவர்களுடைய பயிற்சியாளர்கள், கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்திற்கே நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்கள் தங்களது வீரர்கள் சுதந்திரமாக விளையாடுவதற்கான ஆதரவை வழங்கியுள்ளனர். இந்த சீசனிலும் அவர்கள் அதே பாணியில் தொடருவார்கள் என்று நான் நம்புகிறேன்" என கூறினார்.