சர்வதேச டி20 கிரிக்கெட்; ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை முறியடித்த சிக்கந்தர் ராசா

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோரின் மாபெரும் சாதனையை சிக்கந்தர் ராசா முறியடித்துள்ளார்.

Update: 2024-10-23 18:14 GMT

Image Courtesy: @ZimCricketv

நைரோபி,

அடுத்த ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தற்போது அதற்காக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஆப்பிரிக்க கண்டதற்கான தகுதி சுற்றுப்போட்டிகள் நைரோபியில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று குரூப் பி-ல் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் கம்பியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் ஜிம்பாப்வே 344 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே தரப்பில் அதிரடியாக ஆடிய சிக்கந்தர் ராசா வெறும் 43 பந்துகளில் 133 ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் பதிவு செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை ஜிம்பாப்வே படைத்தது.

பின்னர் 345 என்ற இமாலய இலக்கை துரத்திய கம்பியா அணியை 14.4 ஓவரில் 54 ரன்களுக்கு ஜிம்பாப்வே சுருட்டியது. இதன் மூலம் ஜிம்பாப்வே 290 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கம்பியா அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ஜார்ஜு 12 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணிக்கு அதிகபட்சமாக பிரண்டன் மவுடா மற்றும் ரிச்சர்ட் யங்கரவா தலா 3 விக்கெட்டுகளும் வேஸ்லே மாதவேர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோரின் மாபெரும் சாதனையை சிக்கந்தர் ராசா முறியடித்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இருந்து அதிவேகமாக சதம் அடித்த (பந்துகளின் அடிப்படையில்) வீரர் என்ற உலக சாதனையை சிக்கந்தர் ராசா படைத்துள்ளார்.

இதற்கு முன்பு ரோகித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோர் 35 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை சிக்கந்தர் ராசா (33 பந்துகளில் சதம்) முறியடித்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இருந்து அதிவேகமாக சதம் அடித்த வீரர்கள் பட்டியல்;

சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்பே) - 33 பந்துகள் (எதிரணி கம்பியா)

ரோகித் சர்மா (இந்தியா) - 35 பந்துகள் (எதிரணி இலங்கை)

டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா) - 35 பந்துகள் (எதிரணி வங்காளதேசம்)

ஜான்சன் சார்லஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 39 பந்துகள் (எதிரணி தென் ஆப்பிரிக்கா)

சஞ்சு சாம்சன் (இந்தியா) - 40 பந்துகள் (எதிரணி வங்காளதேசம்)

Tags:    

மேலும் செய்திகள்