ரோகித் சர்மாவின் முடிவுக்கு நான் முழு ஆதரவு கொடுக்கிறேன் - டிராவிஸ் ஹெட் பேட்டி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு போட்டிகளில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், ரோகித் சர்மா-ரித்திகா தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் காரணமாக முதல் இரு போட்டிகளில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியை சந்தித்த இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா விலகுவது சரியில்லை என பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரோகித் சர்மா இடத்தில் இருந்திருந்தால் தாமும் இதே முடிவை எடுத்திருப்பேன் என்று கூறி அவரின் முடிவுக்கு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் 100 சதவீதம் ரோகித் சர்மாவின் முடிவுக்கு ஆதரவு கொடுக்கிறேன். அவருடைய சூழ்நிலையில் இருந்தால் நானும் இதையே செய்திருப்பேன். கிரிக்கெட் விளையாடும் நாங்கள் நிறைய விஷயங்களை தியாகம் செய்கிறோம். நாங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த வாழ்க்கையை வாழ்கிறோம்.
எனவே நாங்களும் கவனிக்கப்படுகிறோம். ஆனால் முக்கிய போட்டிகளைத் தவிர விடும் போது சில சாதனைகளையும் தவற விடுகிறோம். இருப்பினும் அவருடைய நிலையில் நான் இருந்தால் அதையே செய்திருப்பேன். உங்களுக்கு அந்த நேரம் திரும்ப கிடைக்காது. ஆனாலும் இந்தத் தொடரில் மீண்டும் அவர் விளையாட வருவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.