டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கு என்னால் பங்காற்ற முடியும் - வெங்கடேஷ் ஐயர்
ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் கொல்கத்தாவில் நாளை தொடங்குகிறது.;

Image Courtesy: PTI
கொல்கத்தா,
இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் நாளை தொடங்குகிறது. நாளை நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா அணியின் கேப்டனாக அஜிங்ய ரகானேவும், துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு காலத்தில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு மாற்று வீரராக கணிக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்படாத காரணத்தினால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யாவால் விளையாட முடியாத டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவுக்காக போட்டிகளை வென்று கொடுப்பேன் என்று வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஏதாவது ஸ்பெஷல் விஷயத்தை நிகழ்த்துவதற்கு தேவையான திறன் என்னிடம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஒருவேளை அதை செய்ய முடியாமல் போனால் எனது கெரியர் முடியும் போது அதற்காக வருத்தப்படுவேன். தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகளில் என்னால் பங்காற்ற முடியும் என்பதும் எனக்கு தெரியும்.
என்னால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாட முடியும். அதை என்னால் செய்ய முடியுமேயானால் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய அனைத்தையும் நான் கொடுக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.