அதற்காக நானும் மனமுடைந்தேன்.. இம்முறை இந்தியா வெற்றி பெற வேண்டும் - பாக்.முன்னாள் வீரர் வாழ்த்து

இங்கிலாந்துக்கு சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது இயற்கையாகவே தெரியாது என்று சோயப் அக்தர் கூறியுள்ளார்.

Update: 2024-06-28 09:21 GMT

கயானா,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கயானாவில் நேற்றிரவு அரங்கேறிய 2-வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் மோதின.

இந்த ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 103 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது இயற்கையாகவே தெரியாது என்று சோயப் அக்தர் கூறியுள்ளார். மேலும் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்ததை பார்த்து தாமும் மனமுடைந்ததாக தெரிவிக்கும் அவர் இம்முறை ரோகித் சாம்பியன் பட்டத்தை பெறுவதற்கு தகுதியானவர் என்று பாராட்டியுள்ளார். எனவே இம்முறை இந்தியா வெற்றியை தவற விடக்கூடாது என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"இந்தியர்களால் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியும். ரோகித் சர்மா இங்கிலாந்தின் அடில் ரஷித்தை சமாளித்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எப்படி சுழலை எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாது. இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்தது கிடையாது. அங்கே இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் எடுத்து இந்தியாவை அழுத்தத்தில் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் 2-வது பேட்டிங் செய்வதாக அடம் பிடித்தனர். மறுபுறம் இந்தியா வெற்றிக்கு தகுதியானவர்கள்.

இந்த தொடரை அவர்கள் வெல்ல வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். கடந்த வருடம் வென்றிருக்க வேண்டிய ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்ததால் நானும் மனமுடைந்தேன். ஏனெனில் அவர்கள் வெல்வதற்கு தகுதியானவர்கள். தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தி கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரோகித் சர்மா சொல்லி வருகிறார்.

அதை வெல்வதற்கு அவர் தகுதியானவர். இந்நேரம் அவர் 2 உலகக் கோப்பையை கையில் வைத்திருக்க வேண்டும். இம்முறை அவர்கள் கோப்பையை விடக்கூடாது. மிகவும் பெரிய வீரராகவும் சுயநலமற்ற கேப்டனாக தன்னுடைய அணிக்காக விளையாடும் அவர் தனது கெரியரை உச்சமாக முடிக்க வேண்டும்" என்று வாழ்த்தி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்