ஆஸ்திரேலிய தொடரில் பும்ராவுக்கு அவர் கடும் சவால் அளிப்பார் - மைக்கேல் வாகன் கணிப்பு

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2024-11-12 17:29 GMT

லண்டன்,

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு ஜஸ்பிரித் பும்ரா சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் பும்ராவுக்கு ஆஸ்திரேலியாவில் டிராவிஸ் ஹெட் பெரிய சவாலை கொடுத்து ரன்கள் குவிப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன கணித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"கம்மின்ஸ் - கோலி ஆகியோருக்கு இடையேயான போட்டி உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும். டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக பும்ரா பந்து வீசுவது சிறந்த போட்டியாக இருக்கும். அவரை ஹெட் அதிரடியாக எதிர்கொள்ள முயற்சிப்பார். ரோகித் சர்மா எப்போது வருவார் என்பது தெரியாததால் பும்ரா முதல் இரண்டு போட்டிகளில் கேப்டனாக செயல்படலாம். உலகின் சிறந்த பவுலராக இருக்கும் அவர் இந்தத் தொடரில் பந்து வீசுவதை பார்க்க ஆவலுடன் உள்ளேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்