முதல் போட்டியில் அஸ்வின், ஜடேஜா இடம்பெறாததற்கு காரணம் அவர்தான் - துணை பயிற்சியாளர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஜடேஜா, அஸ்வின் இடம்பெறவில்லை.;
பெர்த்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி (பகல்-இரவு போட்டி) தொடங்குகிறது.
முன்னதாக முதல் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் - ஜடேஜா இடம்பெறாதது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் ஐ.சி.சி. டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருக்கும் இவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்தனர். இருப்பினும் இந்திய அணி வெற்றி கண்டது.
இந்நிலையில் முதல் போட்டியில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்தான் அவர்களை பெஞ்சில் அமர வைத்ததாக துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அணியின் நலனுக்காக அவர்கள் அதை ஏற்றுக்கொண்டதாக அபிஷேக் நாயர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நிலைமையை உணர்ந்து கொள்ளாத சீனியர்கள் இருந்தால்தான் கடினமாக இருக்கும். ஆனால் அணியின் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் அஸ்வின் - ஜடேஜா போன்ற சீனியர்கள் இருக்கும்போது நீங்கள் முடிவெடுப்பது எளிது. கவுதம் கம்பீர் என்ன நம்புகிறார் என்பதை எங்களுடைய அணி பின்பற்றுகிறது.
அதன் படி அஸ்வின் மற்றும் ஜடேஜா இங்கே உள்ள இளம் வீரர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதில் மட்டுமே எங்களுடைய கலாச்சாரம் கவனம் செலுத்துவதாக கருதுகிறேன்" என்று கூறினார்.