உலகிலேயே மிகச்சிறந்த பந்து வீச்சாளர் இவர்தான் - இந்திய வீரரை பாராட்டிய மைக்கேல் வாகன்

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் உலகிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சாளர் பும்ராதான் என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-02 06:28 GMT

லண்டன்,

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ஐசிசி 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

ஏனெனில் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக பந்து வீசி இருந்தார். இந்த தொடரில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி நிலையில், மிகக்குறைவான ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். அதன் காரணமாக அவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிக்கு மிக அருகே சென்றபோது, அவர் வீசிய இரண்டு ஓவர்கள் போட்டியின் போக்கை மாற்றி அமைத்தது.

இந்நிலையில் வெள்ளைப்பந்தில் விளையாடப்படும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் உலகிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சாளர் பும்ராதான் என மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். வாசிம் அக்ரம் உள்ளிட்ட மற்ற சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் விட பும்ராதான் என, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "இறுதிப்போட்டியில் ரீசா ஹென்ரிக்ஸ் விக்கெட்டை பவுல்ட் அவுட் செய்து பும்ரா வீழ்த்தியது மிக அற்புதமானது. அவர் பந்தை வேறு ஒரு கோணத்தில் வீசினார். அது லெக் ஸ்டம்பை நோக்கி சென்றது. ஆனால், கடைசி நிமிடத்தில் அது அப்படியே வெளியே சென்று ஆப் ஸ்டம்பை தகர்த்தது. அடுத்து ஜான்சன் விக்கெட்டை வீழ்த்திய போதும் அதேபோல வேறு ஒரு கோணத்தில் சென்று பவுல்ட் அவுட் செய்தார். அது மட்டுமல்ல. மற்ற பந்துகளில் பேட்ஸ்மேன்கள் அவரது பந்துகளை அடிக்க முயற்சி செய்தார்கள். இருப்பினும் பும்ரா சிறிய இடைவெளியை கண்டுபிடித்து அதற்கு ஏற்ப பந்துகளை வைடாக அல்லது மெதுவாக வீசி அந்த விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை விளையாடியவர்களிலேயே இவர்தான் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் என உண்மையாகவே நான் நினைக்கிறேன். வாசிம் அக்ரம் சிறப்பானவர். இன்னும் பலரையும் நாம் கூறலாம். ஆனால், பும்ராவின் அற்புதமான பந்து வீசும் திறமை மற்றும் அவரது வேகம், அவரது விதவிதமான பந்துகள், அதை அவர் கடும் அழுத்தத்திற்கு இடையே ஒவ்வொரு நாளும் செய்வது அவரை தனித்துவமாக காட்டுகிறது. அவர் இந்த உலகக் கோப்பையில் ஒன்று, இரண்டு முறை மட்டும் இதை செய்யவில்லை. அவர் ஒவ்வொரு போட்டியிலும் இதை செய்தார்" என மைக்கேல் வாகன் பும்ராவை புகழ்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்