டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த ஆயுஷ் பதோனி

டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆயுஷ் பதோனி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Update: 2024-09-01 01:48 GMT

image courtesy: twitter/@DelhiPLT20

புதுடெல்லி,

இந்தியாவில் மாநில கிரிக்கெட் வாரியங்களும் டி20 லீக் போட்டிகளை நடத்த ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் முதல் முறையாக டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் டெல்லி பிரீமியர் லீக் என்ற பெயரில் டி20 லீக் போட்டியை இந்த ஆண்டு தொடங்கி உள்ளது.

இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் - நார்த் டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து சவுத் டெல்லி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஸ் ஆர்யா மற்றும் சர்தக் ரே களம் இறங்கினர். இதில் சர்தக் ரே 11 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஆயுஷ் பதோனி களம் இறங்கினர். ஆர்யா - பதோனி இணை அதிரடியாக ஆடியது.

அதிரடியாக ஆடிய இருவரும் சிக்சர் மழை பொழிந்தனர். நார்த் டெல்லி அணியினரின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இதில் பிரியன்ஸ் ஆர்யா 120 ரன் (10 பவுண்டரி, 10 சிக்ஸ்) எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி 19 சிக்சருடன் 165 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் சவுத் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 309 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த நார்த் டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 112 ரன் வித்தியாசத்தில் சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஆயுஷ் பதோனி மொத்தம் 19 சிக்சர்கள் அடித்து 165 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், எஸ்தோனியாவின் சஹில் சவுகான் ஆகியோர் தலா 18 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள ஆயுஷ் பதோனி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்