26 வயதில் ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்...? - வெளியான தகவல்

ஆஸ்திரேலிய அணிக்காக 22 வயதிலேயே அறிமுகமாகும் வாய்ப்பு இளம் வீரரான வில் புகோவ்ஸ்கிக்கு கிடைத்தது.

Update: 2024-08-30 10:57 GMT

Image Courtesy: AFP / X (Twitter)

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக இருந்து வருகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு ஆஸ்திரேலியா அணியில் சிறப்பான வீரர்கள் இடம் பிடித்து தொடர்ச்சியாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இளம் வயதில் தேசிய அணியில் இடம் கிடைப்பது மிகவும் கடினமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்காக 22 வயதிலேயே அறிமுகமாகும் வாய்ப்பு இளம் வீரரான வில் புகோவ்ஸ்கிக்கு கிடைத்தது. 19 வயதுக்குட்பட்டோர் அணியிலிருந்தே ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வந்த அவர் கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஒரே போட்டியில் மட்டுமே விளையாடி 72 ரன்களை எடுத்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவருக்கு காயம் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியது. கிரிக்கெட் விளையாடும் போது அவரது தலையில் பந்து அடிக்கடி தாக்கியதன் காரணமாக அவர் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.

இப்படி பந்து, அவரது தலையை தாக்குவது தொடர்கதையாக இருந்தது. இவருக்கு தொடர்ந்து எப்படி ஒரே இடத்தில் பந்து படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். இதில் பந்து தலையை தாக்கி விடுமோ என்ற பயத்தில் அவர் விளையாடுவதால் தான் பேட்டிங் யுத்தியை மறந்து விடுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் இனி அவர் கிரிக்கெட் விளையாடவே கூடாது என்றும் தற்போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், அவர் கிரிக்கெட் விளையாடும் தகுதியை இழந்து விட்டதால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

இதன் காரணமாக 26 வயதிலேயே அவரது சர்வதேச கிரிக்கெட் தற்போது முடிவுக்கு வர உள்ளது. மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாது என்கிற சோகமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் வருத்தத்தில் உள்ள புகோவ்ஸ்கி வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளதாகவும், அவர் மீண்டும் திரும்பி வரும்போது ஓய்வை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்