3வது ஒருநாள் போட்டி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
பெர்த்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானும் வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 140 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக சீன் அப்போட் 30 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 141 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 26.5 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 143 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.