2-வது டி20: இந்திய அணிக்கு எதிராக எங்களுடைய வெற்றிக்கு காரணம் இதுதான் - மார்க்ரம்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.;
கெபேஹா,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 39 ரன்களும், அக்சர் படேல் 27 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 47 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற உதவினார்.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்கம் கூறுகையில், "உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தோம். எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சரியான நேரத்தில் சரியான திட்டங்களை வெளிப்படுத்தினர்.பேட்டிங்கை பொறுத்த வரை நாங்கள் இன்னும் வலுவாக சேசிங் செய்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய போட்டியில் அதிக விக்கெட்டுகளை இழந்ததால் சேசிங் செய்வது சற்று சவாலாக இருந்தது.
இருந்தாலும் ஸ்டப்ஸ் மிகச்சிறப்பாக ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். அதேபோன்று கோட்சே மிகச்சிறப்பாக அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். இது போன்ற கடைசிநேர பார்ட்னர்ஷிப் எங்கள் அணிக்கு தேவையான ஒன்றுதான். பந்துவீச்சில் எங்களது அணி இந்த முறை மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று நாங்கள் இந்த தொடரை சமன் செய்ததில் மிகவும் மகிழ்ச்சி" என்று கூறினார்.